தோசையில் மட்டுமா ஜாதி இருக்கு?

தோசை சுடும் விதத்தில்கூட ஜாதி இருக்கிறது என்று சமீபத்தில் திராவிட இயக்கப் பேச்சாளர் மதிமாறன் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏன் பிராமணர்கள் காபி மட்டுமே குடிக்கிறார்கள், மற்ற மக்கள் அதிகமாக டீ குடிக்கிறார்கள்? இதன் வரலாற்றுப் பின்னனி என்ன போன்ற பல விஷயங்களை அவர் அந்த மேடையில் பேசியிருக்கிறார். ஆனால் இந்த தோசை விவகாரம் மட்டுமே பெரிதாக்கப்பட்டு பரவலாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மையில் தோசையில் மட்டுமல்ல, இசையிலும் கூட வர்ணமும் வர்க்கமும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை நான் சொல்லவில்லை 2015-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சொல்லுகிறது. “கிளாசிக்” என்ற இசை வடிவத்தை யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள் அல்லது ரசிக்கிறார்கள்? உடல் உழைப்பில்லாமல் செளகரியமான வாழ்க்கை வாழும் பணக்கார மேட்டுக்குடிகளுடைய இசையாக கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசைவடிவங்கள் இருக்கின்றன. கிளாசிக்கல் இசைக்கு ஒரு கலை வடிவம் (art form) இருக்கும். அதை முறைப்படி கற்ற வித்தகர்களால் மட்டுமே இசைக்க முடியும். எனவேதான் அது மேல்தட்டு மக்களால் போற்றப்படுகிறது. நடனமும் அப்படித்தான்!

ஆனால் உழைக்கும் அடித்தட்டு மக்களின் இசை வடிவங்களைப் பாருங்கள்! அதற்கென்று எந்த கட்டமைப்பும் இருக்காது. அது எளிய மக்களால் இசைக்கப்படுகிறது. அதில் வாத்தியங்களின் முழக்கம் அதிகமாக இருக்கும். நாடி நரம்புகளிலெல்லாம் தீப்பிடிக்கும் விதத்தில் தோல்கருவிகள் அதிரும். இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க மக்களின் இசையையும் கூட கவனித்துப் பாருங்கள்.

உலகம் முழுவதும் உடல் உழைப்பில்லாத மேட்டுக்குடிகளின் இசை ஒன்றாகவும், கடின உழைப்பாளிகளான அடித்தட்டு மக்களின் இசையும் வெவ்வேறாகத்தான் இருக்கிறது. அவர்கள் இசைக்கருவிகள் வேறு, இவர்கள் இசைக்கருவிகள் வேறு.

அந்தந்த இசைவடிவம் அந்தந்த மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. அடித்தட்டு மக்களின் இசை மேட்டுக்குடிகளுக்கு தீட்டு. இதே மாயைக்குள் இன்று கிறிஸ்தவமும் சிக்கி இருக்கிறது. கிளாசிக் இசைவடிவம் மட்டுமே தேவனுக்கு உகந்தது என்ற மனப்பான்மை எங்கிருந்து வந்தது. மேட்டுக்குடிகளின் இசைக்கு மட்டும் ஒரு தெய்வீகத் தன்மையை கொடுத்துப் பார்ப்பது மனிதனின் புரிதலேயன்றி வேறல்ல. எல்லா இசையிலும் ஒரு அழகு இருக்கிறது. நமக்கு மனதை மயக்கும் கிளாசிக்கும் வேண்டும், மண் மணக்கும் கிராமிய இசையும் வேண்டும். இலங்கையின் பைலாவும் அழகுதான், சென்னையின் கானாவும் அழகுதான்.

எல்லா மக்களும் அவரவர் உள்ளபடியே தன்னிடம் வந்து சேர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அவர்கள் மனங்களைத்தான் தேவன் மாற்ற விரும்புகிறாரேயன்றி கலாச்சாரங்களை அல்ல. மேலும் கர்த்தர் எந்த இசைவடிவத்தையும் விரும்புவதாகவோ அல்லது அருவெறுப்பதாகவோ வேதத்தில் இல்லை. கலை வடிவமுள்ள (art form) இசையையும், நடனத்தையும் மட்டும்தான் ஏற்றுக்கொள்வேன், கலை வடிவமற்ற எளிய மக்களின் இசையையும் நடனத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வேதத்தில் எங்கும் தேவன் சொல்லவில்லை. பின்பு ஏன் கிறிஸ்தவ மேடைகளில் அரங்கேற்றப்படும் எளிய மக்களின் இசைக்கும், நடனங்களுக்கும் கிறிஸ்தவர்கள் முகம் சுழிக்கிறார்கள்?

உண்மையில் கிறிஸ்தவம் மேட்டுக்குடிகளின் இசையை விசுவாசிகளிடமல்ல அல்ல, மாட்டுத் தொழுவத்தில் பிறந்து ஏழை எளியவர்களுடனும், மீனவர்களுடனும் பழகித் திரிந்த கிறிஸ்துவிடம் திணிக்கிறது. கிறிஸ்து எப்போதோ அடித்தட்டு மக்களிடம் போய் சேர்ந்துவிட்டார், கிறிஸ்தவ இசைமட்டும் ஏன் போக மறுக்கிறது?

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply