தேவதூதர்கள் தேவன் சொல்லும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்பவர்கள். ஊழியக்காரர்களாகிய நாமும் அதையேதான் செய்கிறோம் ஆனால் ஒரு வித்தியாசமுண்டு. சோதோம் கொமாராவை அழிக்கப்போவதாக தேவன் தேவதூதர்கள் வழியாக ஊழியக்காரனாகிய ஆபிரகாமிடம் தகவலை அனுப்புகிறார். தேவன் சொன்னதைக் கேட்டு தூதர்கள் பதறியிருக்க வாய்ப்பில்லை ஆனால் ஆபிரகாம் பதறினார், அதுதான் அந்த வித்தியாசம்.
தீர்க்கதரிசியாகிய மோசே “என் பெயரை ஜீவபுத்தகத்திலிருந்து கிறுக்கிப் போடும்” என்று மக்களுக்காக தேவனிடம் கதறினார். பரலோகத்தில் தேவதூதர்களுக்கு பணிக்கான பயிற்சி வகுப்புக்கள் இருக்கிறதோ இல்லையோ, ஒரு மனிதனை ஆவியானவர் நன்கு பயிற்றுவிக்காமல் ஊழியத்தில் பயன்படுத்த மாட்டார். யாருக்கு ஊழியம் செய்கிறோமோ அவரையும் (தேவன்), யாருக்காக ஊழியம் செய்கிறோமோ (மக்கள்) அவர்களையும் நன்கு புரிந்துகொண்டு நேசிப்பதுதான் அந்தப் பயிற்சியின் திட்டம்.
மக்களின் சீர்கெட்ட நடத்தையை மேலோட்டமாக பார்த்துவிட்டு பழைய ஏற்பாட்டிலிருந்து சாபத்தின் எச்சரிப்புகளை எடுத்து பிரசங்க மேடையில் நின்று சத்தத்தை உயர்த்தி பிரசங்கிப்பது மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தாது.
ஒரு நல்ல தகப்பனிடம் அவரது மகன் படிக்கும் பள்ளியின் பிரின்ஸிபல் “உங்கள் மகன் சரியில்லை அவனை கண்டித்து, ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்” என்று சொன்னால் மகனிடம் அந்த தகப்பனார் நடந்து கொள்ளும் விதத்திற்கும், ஒரு ஹாஸ்டல் வார்டனிடம் அதே பிரின்ஸிபல் “உங்கள் ஹாஸ்டல் மாணவர்கள் சரியில்லை, அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்” என்று சொன்னால் அந்த வார்டன் அந்த மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்திற்கும் வித்தியாசமிருக்கிறது. இருவருமே ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இறங்குவார்கள் ஆனால் தகப்பன் தன் மகனுக்காக பதறுவார், வார்டன் பிரின்ஸிபலுக்காக மாணவர்கள் மீது பாய்வார். ஒரு ஊழியக்காரன் தகப்பனைப் போல நடந்துகொள்ள வேண்டும், தேவன் அதைத்தான் எதிர்பார்க்கிறார்.