தேவ அன்பையா, மனித அன்பையா எதைப் பறை சாற்றுவது?

வெற்றிகரமாக ஊழியப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியக்காரர் தான் தேவன் மீது வைத்த அன்பையும், தான் அவருக்காக ஊழியத்தில் செய்த தியாகங்களையும் சாட்சியாகச் சொல்லி பிரசங்கிக்கும் போது அதைக் கேட்கும் மக்கள் மனதில் ஒரு சவால் பிறக்கிறது. இது நல்ல விஷயம்தான், ஆனால் அந்த சவால் விரைவிலேயே அவரவர் மாம்சத்தால் விழுங்கப்பட்டு கடைசியில் குற்றஉணர்வும், என்னால் முடியவில்லையே என்ற புலம்பலுமே மிஞ்சுகிறது.

ஒரு நல்ல ஊழியர் தேவனுக்காக தான் செய்த தியாகங்களைக் குறித்து நல்ல நோக்கத்தில் பிரசங்கித்தாலும் தானும் அதுபோல வாழ வேண்டும் என்று விரும்பும் ஒரு பலவீனமான விசுவாசிக்கு அது வெறும் ஏக்கத்தைத் தருமேயன்றி எழுச்சியைத் தராது.

ஆனால் தேவன் மனிதன் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பை விசுவாசிகளுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கும்போது, தான் தகுதியற்றவனாக இருந்தும் எவ்வளவாக கர்த்தரால் நேசிக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிய அறிய அந்த பெலவீனமான விசுவாசியின் மனதில் ஒரு விசுவாசம் துளிர் விடுகிறது. அந்த விசுவாசம் கடுகுவிதையளவு இருந்தாலும் ஆயிரம் அணுகுண்டுகளுக்குச் சமமானது. அந்த விசுவாசமே நான் முதலில் கூறிய ஊழியரைப் போல கர்த்தரை அளவின்றி நேசிக்கும் ஒரு சாட்சியான வாழ்க்கை வாழ அந்த விசுவாசியையும் பெலப்படுத்தும்.

தேவமனிதர்கள் தேவன்மீது வைத்த அன்பையும் அவர்கள் தியாகத்தையும் அறிவது நல்லதுதான். ஆனால் பிதாவானவர் மனிதர்கள் மீது வைத்த அன்பையும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதருக்காக செய்த தியாகத்தையும் அறிவதே பயனுள்ளது. அதை மட்டும் பிரசங்கிப்பதே சரியானது.

Leave a Reply