திருமண தாமதமா?

இக்கட்டுரை திருமணத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் தம்பி தங்கையருக்கு…

நமது வாழ்வில் திருமணம் தாமதமாகும்போது அது ஒரு பிரதான பிரச்சனையையாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பின்னர் ஆசீர்வாதமாகப் பார்க்க வேண்டிய திருமணத்தை ஒரு பிரச்சனையாகப் பார்த்து அதன் மீது நமது முழு focus-ஐயும் செலுத்திவிடுகிறோம். நமது கவனத்தை எதன்மீது திசை திருப்புகிறோமோ அது மேலும் மேலும் பெரிதாகும். அது பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஆசீர்வாதமாக இருந்தாலும் சரி.

தேவன் நடத்தி வைத்த திருமணங்களிலெல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கும் பார்த்திருக்கிறீர்களா? ஆதாம் தனக்கு ஒரு துணையை ஏற்படுத்தித்தாரும் என்று தேவனோடு போராடவில்லை. ஆதாம் தேவனுடைய சமூகத்தில் படுத்து ஆழ்ந்து இளைப்பாறினான். அவன் கண்விழித்தபோது அவன் அருகில் ஏவாள் இருந்தாள் (ஆதி 2:21,22)

ரெபேக்கா தனக்கென ஆயத்தமாகி தன்னிடம் வந்து சேர்கையில் ஈசாக்கு தியானத்தில் இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது (ஆதி 24). தியானம் என்பது தேவ சமூகத்தில் இளைப்பாறும் ஒரு அருமையான தருணம்.

திருமண தாமதத்தை அல்லது திருமணத்தில் இருக்கும் பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு உங்களை நீங்களே உருவக் குத்திக் கொள்ளாமல், அதை தேவ சமூகத்தில் ஒப்படைத்துவிட்டு இளைப்பாறுங்கள். உங்கள் அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் அல்லது உங்கள் சபையில் ஏதாவது ஒரு ஊழியத்தில் பங்கு கொண்டு அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதை தேவ சமாதானம் ஆளுகை செய்யட்டும். ஏற்ற வேளையில் ஏற்ற துணையை தேவன் உங்களிடம் வந்து சேர்ப்பார்.

எனக்கு 27 வயதில் திருமணம் நடந்தது. இந்தத் தாமதம் முதலில் எனக்கும் என் பெற்றோருக்கும் வருத்தத்தை அளித்தாலும் பின்னர் நான் அதை முற்றிலும் மறந்துவிட்டு எங்கள் போதகரோடு இணைந்து சபை ஊழியத்தில் கவனம் செலுத்த துவங்கினேன். எங்களுக்கு திருமணமாகும் முன்னர் என் மனைவியும் ஒரு ஊழியத்தில் பங்காளராக இணைந்து ஊழியம் செய்து கொண்டிருந்தார். அவள் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியம் சார்பாக ஒரு கூட்டம் ஒழுக்கு செய்திருந்தார்கள். அதில் அவள் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தாள். அங்குதான் நான் என் பெற்றோரோடு சென்று அவளை முதன் முதலாக சந்தித்தேன்.

உங்கள் கவனத்தை பிரச்சனையில் இருந்து திருப்பி தேவன் மேலும் அவர் உங்களுக்கு கொடுத்த தரிசனத்தின் மேலும் வையுங்கள். உங்கள் துணை உங்களைத் தானாக தேடி வரும். உங்களுக்கு ஒரு ஏற்ற துணையை தருவது உங்கள் பரமபிதாவின் கடைமை. அதை அவர் சரியாக செய்வார். ஒரு தேவ பிள்ளைக்கு இளைப்பாறுதல் மிக மிக மிக அவசியம்!

போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள் (ரூத்) மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள் (ரூத் 3:7)

Leave a Reply