தியாகமான அஸ்திபாரம்

இன்று கர்த்தருடைய வார்த்தையை பகிரும் நமக்கு மக்களிடம் கிடைக்கும் அன்புக்கும், மரியாதைகளுக்கும், பொருளாதார நன்மைகளுக்கும் அடித்தளம் அமைத்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையில் தியாகத்துடன் பணியாற்றிய மிஷனரிகளே!

நம்மைவிடவும் அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்த அவர்களுக்கு மக்களிடமிருந்து அன்று கிடைத்தது முற்றிலும் மோசமான எதிர்வினைதான்! அடிகளும், அவமானங்களும், காயங்களும் பெற்றுத்தான் இரத்தத்தை சிந்தி, அதன்மீது திருச்சபைகளைக் கட்டி எழுப்பினார்கள். அவர்களை அடித்து காயப்படுத்திய கூட்டத்தில் நமது முன்னோர்களும்கூட இருந்திருக்கலாம். அடித்தவர்களை அவர்கள் அன்று அன்புடன் மன்னித்ததால்தான் நாம் இன்று தேவ இரக்கம் பெற்று ஆசீர்வாதத்துடன் இருக்கிறோம்.

அடித்தவர்களை அந்த சத்தியம் ஏதோ ஒரு சூழலில் தொட, அதனால் அவர்கள் மனந்திரும்பி கர்த்தரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்தான் இன்று ஊழியர்களுக்கு அன்பையும், கனத்தையும், பணத்தையும் வாரி வழங்குகிறார்கள்!

இன்று ஊழியம் செய்யும் ஒவ்வொருவரும் நமக்கு அருமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்த அந்த ஆதி ஊழியர்களை நன்றியுடன் நினைத்துப்பார்த்து கர்த்தரை துதிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இன்று கிறிஸ்தவம் ஆலமரம் போல தழைத்து நிற்கிறது. தியாகத்தின் வலிமை அதுதான்! எல்லா தியாகங்களுக்கும் மேலானது கர்த்தர் இயேசுவின் சிலுவை தியாகம்! உண்மையான ஊழியத்துக்கான மாதிரியும் அவரே!!

நமக்கு முந்தைய தலைமுறை ஊழியர்கள் கண்ணீரும், இரத்தமும் சிந்தி முழங்கால் நோக ஜெபித்து கூட்டிய மந்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணியைத்தான் ஆவியானவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார் என்று உணர்ந்தாலே ஒரு நடுக்கம் நம்மைப் பற்றிக்கொள்ளும், இந்த ஜனங்களைப் பயன்படுத்தி ஆதாயம் அடையலாம் என்ற எண்ணம் நமக்கு கனவில்கூட வராது, வரவும் கூடாது!

 

Leave a Reply