தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

கர்த்தருடைய ஆசாரியனாகிய ஏலியின் குமாரர் ஓப்னியும் பினகாசும் செய்த அட்டகாசங்களின் நிமித்தம் கர்த்தருடைய ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியப்பட்டம் ஏலியின் குடும்பத்தாரை விட்டு பிடுங்கப்பட்டு கர்த்தருடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் ஏற்ற ஒருவனிடத்தில் கொடுக்கப்படும் என்று ஒரு தேவமனுஷன் ஏலியினிடத்தில் வந்து தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார். 1 சாமுவேல் 2:27-36 வசனங்கள் வரை வாசித்துப்பாருங்கள். அதில் கடைசி இரண்டு வசனங்கள் கீழ்க்கண்டவிதமாய் வருகின்றன:

நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.

அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் (1 சாமு 2:35,36)

வேதாகமத்தில் ஒன்று தேவனுடைய மாறாத விதிகள் அல்லது பிரமாணங்கள் எழுதப்பட்டிருக்கும் அல்லது அந்த பிரமாணத்தின்படி நடந்த சம்பவங்கள் எழுதப்பட்டிருக்கும். கர்த்தரால் ஒரு பொறுப்புக்கென்று அபிஷேகிக்கப்பட்ட ஒருவன் அந்த அபிஷேகத்தை அலட்சியம் செய்யும்பட்சத்தில் தேவன் அவனைத் தள்ளிவிட்டு அவன் ஸ்தானத்தில் வேறொருவனை ஏற்ப்படுத்துகிறார். தள்ளிவிடப்பட்டவனின் சந்ததி தேவன் அவனுக்கு மாற்றாக ஏற்படுத்திய அந்த உண்மை ஊழியனிடத்தில் அப்பத்துக்காக இரந்து, அவனை அண்டி வாழும் அவலம் ஏற்படும்.

இது ஏலிக்கு மட்டுமே பிரத்யோகமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பு போல தோன்றினாலும் வேதத்தின் பல இடங்களில் எங்கெல்லாம் ஒரு அபிஷேகிக்கப்பட்ட தேவமனிதனொருவன் தள்ளப்பட்டு அவன் ஸ்தானத்தில் வேறொருவன் ஏற்படுத்தப்படுகிறானோ அங்கெல்லாம் தள்ளப்பட்டவனின் சந்ததி புதிதாக ஏற்படுத்தப்பட்ட நல்ல ஊழியனிடம் அண்டி வாழும் அவலநிலை ஏற்படுகிறது. அதிலிருந்தே இது ஏலிக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல இது ஒரு பிரமாணத்தின் அடிப்படையில் நடந்த சம்பவம் என்பது விளங்கும்.

சேஷ்டபுத்திரபாகத்தை வெறும் பயற்றங்கூழுக்காக அசட்டை பண்ணி அதை யாக்கோபிடம் தந்த ஏசாவின் வம்சாவழியினராகிய ஏதோமியர், யாக்கோபின் வம்சாவழியினராகிய இஸ்ரவேலர் தலையெடுத்தபின் பல காலங்கள் இஸ்ரவேலுக்கு பகுதிகட்டி அதை சேவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களை யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் என்று 2 இராஜாக்கள் 8:22 குறிப்பிடுகிறது.

ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்; அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்(மல் 1:4)

அதேபோல சவுல் இராஜாவாக அபிஷேகிக்கப்பட்டு பின்னர் தனது கீழ்ப்படியாமையால் கர்த்தரால் தள்ளப்பட்டு அவன் ஸ்தானத்தில் தாவீது அரசனானான். சவுலின் பேரனும், யோனத்தானின் மகனுமாகிய மேவிபோசேத் தாவீதை அண்டிக்கொண்டு அவனால் போஷிக்கப்படும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆனாலும் தாவீது தனது நல்ல உள்ளத்தினால் அவனை தனது குமாரனைப்போல நடத்தினான்.

ஆக தேவனையும் அவர் தந்த அபிஷேகத்தையும் அலட்சியம் செய்பவர்கள் மட்டுமல்ல, அவர்களது சந்ததியும் சிறுமைப்படும் என்பது விதி. ஒருவேளை இந்த கட்டுரையை வாசிக்கும் உங்கள் இருதயத்தை இந்த உண்மை உடைக்குமானால், நீங்களும் உங்கள் அபிஷேகத்தை அசட்டை செய்து தேவனை விட்டு விலகி இப்பொது மனஸ்தாபப்படும் சூழலில் இருப்பீர்களானால் இது உங்களுக்கான செய்திதான்.

நாம் புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்கிறோம். எல்லா பிரமாணங்களையும் விட மேலானது கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் ஏற்பட்ட கிருபையின் பிரமாணம். நீங்கள் உங்கள் அபிஷேகத்தை, அழைப்பை, ஊழியத்தை அசட்டை செய்திருந்தாலும், நீங்கள் மனந்திரும்பி கர்த்தராகிய இயேசுவிடம் சரணாகதி அடைந்தால் அவர் உங்களை மன்னித்து மீண்டும் உங்கள் வீட்டைக் கட்ட, உங்களுக்கு ஒரு நிலையான வீட்டை ஏற்படுத்த அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். உங்கள் சந்ததியும் உயர்த்தப்படும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஏனெனில் அவர் மன்னிக்கிறதில் தயைபெருத்த தேவன். அல்லேலூயா!

விஜய்குமார் ஜெயராஜ்
www.brovijay.com

Leave a Reply