இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்:
சாத்தானை நிபந்தனையின்றி மனதார நேசிக்கும் ஒரு மனிதனை இந்த பூமியில் பார்த்திருக்கிறீர்களா? இருக்கவே முடியாது அல்லவா? அவன் ஒரு மனிதனிடத்தில் வந்து ”நான்தான் சாத்தான்…என்னை வணங்கு!” என்று சொன்னால் அவன் ஒருபோதும் வணங்கமாட்டான் என்பது பிசாசுக்கும் நன்றாகத் தெரியும். எனவேதான் நாம் நம்பத்தக்கதான, விரும்பத்தக்கான ஒன்றை முன்னிறுத்தி அதைப் பற்றிக் கொள்ளும்படிசெய்து நம்மை வஞ்சிக்கிறான். இதைத்தான் விக்கிரக ஆராதனை என்கிறோம்.
ஏதேனில் உயர்ந்த ஆவிக்குரிய நிலையில் தேவனோடு இதயபூர்வமான உறவு கொண்டு வாழ்ந்த மனிதன் தன் பாவத்தின் விளைவாக வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் வியர்வை சிந்திப் பாடுபடவேண்டிய நிர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதை (பிரசங்கி 6:7, ஆதி 3:19) அறிந்தவனாக சாத்தான் மனிதனின் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையான அருமருந்தாகிய ”உலகப்பொருளை” களத்தில் இறக்கிவிட்டு ஒட்டுமொத்த மனுக்குலத்தின் ஓட்டையும் அள்ளிக்கொண்டு விட்டான். இன்று மனுக்குலம் வணங்கும் விக்கிரகம் ”உலகப் பொருள்” ஆகும். ”விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபே 5:5)” என்று வேதம் சொல்லுகிறது நினைவிருக்கிறதா?
ஒட்டுமொத்த மனுக்குலமும் இந்த மாயவலைக்குள் அடைத்துப் போடப்பட்டிருக்கிறது. பொருளாதாரச் சூழலும், வாழ்க்கைத்தரத்தில் ஏற்படும் மாறுதல்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், கல்வி வளர்ச்சியும் நேற்றைவிட இன்று இன்றைவிட நாளை என்று இன்னும் அதிகதிகமாய்ப் பணத்தை சேவிக்கும்படி நம்மைப் பிடித்துத் தள்ளுகிறது. கடைசி காலம் நெருங்க நெருங்க இந்த சாபத்தின் உச்சகட்டமாக மனிதன் தனது சிருஷ்ட்டிகரிடமிருந்து மாத்திரமல்ல சக மனிதனிடமிருந்தும் கூட தனிமைப்படுத்தப்படுகிறான். வெறும் வயிற்றுக்காக மாத்திரமே உழைக்கும் நிலை இருந்த காலங்களில் வேலை விட்டு வந்தவுடன் தன் குடும்பத்தோடும், உறவினரோடும் நண்பரோடும் அளவளாவுவதற்க்கு நேரம் கிடைத்தது. ஆனால் இன்று பண்பலை, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட் என்று வந்த பிறகு அவற்றில் சிக்கி சொந்தக் குடும்பத்தோடு கூட நேரம் செலவிட முடியாதபடி அவற்றிற்கு அடிமைப்பட்டு விட்டோம். குடும்பப் பெண்களின் டி.வி சீரியல் மோகமும், இளைய தலைமுறையிடம் சினிமா, இண்டர்நெட்டின் தாக்கமும் இந்தத் தலைமுறையை இன்னும் எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை. காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை என்று எல்லாவற்றையும் அனுபவித்த சாலமோன் ஞானி சொல்லுகிறான்.(பிரசங்கி 1:8).
ஒருநாளைக் கர்த்தருடைய சந்நிதியில் செலவிட ஆயிரம் முறை யோசிக்கும் மனிதன் குறைந்தது பதினைந்து வருடங்களை உலகப்பொருளை சம்பாதிக்கும் படிப்புக்கென செலவிடுகிறான். தன் பிஞ்சுக் குழந்தைக்கு கர்த்தரைப் பற்றிக் கற்றுக் கொடுக்க கரிசனையில்லாதவன் அதன் தோள்களில் ஒரு பெரிய பொதியை சுமத்தி பள்ளிக்கு அனுப்பி இந்த அநித்திய வாழ்வுக்குரியவற்றை சம்பாதிக்க ஆயத்தப்படுத்துகிறான். இவையெல்லாம் அவசியமே! ஆனால் இம்மனித வாழ்வு பூமியுடன் முற்றுப் பெறுவதில்லையே!!
மரணத்துக்குப் பின் ஒரு வாழ்வு உள்ளதென்றும், மரணத்துக்கு முன் வாழ்ந்த நிலையற்ற வாழ்க்கையே மரணத்துக்குப் பின்னான நிலைவாழ்வை நிர்ணயிக்கிறது என்பதும் நம்மை நடுங்கச்செய்யும் உண்மைகளல்லவா? தேசாதி தேசங்களைக் கட்டி ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்துவிட்டு பூமியில் கண்ணை மூடிய மறு வினாடியே வெறுங்கையனாக கோவணாண்டியாக வேறு ஒரு ராஜ்யத்தில் நிற்பது என்பது எத்தனை நிர்பாக்கியம்!! மேலும் அதுவே நிரந்தரம் என்பது இன்னும் எத்தனை துயரமானது? சர்வலோக நியாயாதிபதி அவனை “மதிகேடனே!” என்றழைப்பாரல்லவா?(லூக்கா 12:20)
இன்றைய உலகம் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஒரு சினிமா நட்சத்திரத்தையோ அல்லது கிரிக்கெட் வீரனையோ அந்த இடத்தில் வைத்துக் கற்பனை செய்து பாருங்கள். அவன் சம்பாதித்த கோடிகளும், ரசிகர் மன்றங்களும், விருதுகளும் கோப்பைகளும் எதற்கு? ஆத்துமா க்ளீன் போல்டான பின்னர் அவன் பூமியில் அடித்த செஞ்சுரிகளால் என்ன லாபம்? கோடிகளில் புரண்ட அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்ற கூற்று சாலவும் சத்தியம். காரணம் அது பூமிக்கு வரவும் இல்லை இந்த கொடுமைகளைப் பார்க்கவுமில்லை. அவன் உயிரோடிருந்த போது அவனைக் கொண்டாடி மாயையான புகழ்போதையில் ஆழ்த்தி வைத்திருந்த உலகம் இப்போது அவனை எடுத்துக் கொண்டவரின் கையிலிருந்து அவனை மீண்டும் பிடுங்கிக் கொள்ளக் கூடுமோ? இதை உணர்ந்துதான் ஒரு சினிமாக் கவிஞன் அற்புதமாகப் பாடினான்:
இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது -அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா…
உயிரோடு இருக்கும் போது பட்டம் கொடுத்து, பரணி பாடி. பல்லக்கில் ஏற்றி பவனிகொண்டு வரும் உலகம் உயிர் போனபின்னர் வாயில் பாலை ஊற்றி, பாடையில் ஏற்றி ”போனால் போகட்டும் போடா” என்று பாட்டுப்பாடி கை கழுவி விடுகிறது.
”தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்;”(பிரசங்கி 5:15, 2:16)
இதனால்தான் விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான் என்று வேதம் சொல்லுகிறது. ஆம், ஞானமுள்ளவன் எவனும் இத்தகைய அறிவையும் தெளிவையும் பெற்றுக்கொள்ள விரும்புவான். ”ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.(பிரசங்கி 7:4)”
நாம் உணர்வடையச் செய்யும் பிரசங்கங்களை விட போலியான உற்சாகமூட்டும் செய்திகளையே எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் கேட்கும் அரைகுறை சுவிசேஷம் நமது உலகத் தேவைகளைச் சொல்லி ”இவற்றை சந்திக்க இயேசு போதுமானவராக இருக்கிறார் எனவே அவரைத் தேடு” என்று சொல்லுவதோடு நின்று விடுகிறது. எனவேதான் நமது ஆவிக்குரிய வாழ்வும் ஆழமற்று இருக்கிறது. ஏன் பிறந்தோம்? எதைத் தேடுகிறோம்? எங்கே போகிறோம்? என்பதைக் குறித்த தெளிவு பெற இம்மாதிரியான தியானங்களும் நமக்கு அவசியமாய் இருக்கிறது. இது பொருளாசையிலிருந்து நம்மை விடுவித்து ஆவிக்குரிய வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
சாலமோன் கண்டது என்ன?
பிரசங்கி புத்தகத்திலுள்ள ஆழமான விலையேறப்பெற்ற புதை பொருட்களை நாம் பெற்றுக்கொள்ளா வண்ணம் சில போதகர்கள் அது சாலமோன் தான் பின்வாங்கிப் போன அந்திமக் காலத்தில் எழுதியது ஆகவே அந்தப் புத்தகத்தில் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை என்கிறார்கள். ஆனால் உண்மையில் நீதிமொழிகள் எவ்வளவு முக்கியமோ பிரசங்கி புத்தகமும் அவ்வளவு முக்கியம் அந்த நூலும் பரிசுத்த ஆவியில் ஏவுதலால் எழுதப்பெற்றதே! இந்நூலின் எபிரேயப் பெயர் “கோஹெலேத்” என்பதாகும். அதன் பொருள் “அழைப்பு விடுப்பவர் அல்லது கூடிவரச் செய்பவர்” என்பதாகும். ஆம். நிலையற்ற வாழ்வின் மாயையைப் புரிந்துகொள்ளும்படி இந்நூல் மெய்யாகவே மனிதனுக்கு அழைப்பு விடுக்கிறது.
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன். வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன். இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன் (பிரசங்கி 1:12-17)
சகலத்தையும் ஆராய்ந்த ஞானி தன் கண்டு கொண்டவைகளால் மனஞ்சலித்து சோர்ந்து போகிறான். உலகம் போற்றும் ஞானியாய் இருந்தாலும் தன்னையும் அந்த மாயைக்குக் கட்டுப்பட்டவனாகவே காண்கிறான்.
வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன். (பிரசங்கி 2:3)
கடைசியில் மனிதனுக்கு என்னதான் மிச்சம் என்று ஆராய்ந்து பார்த்து அவன் கண்டுபிடித்தது இதுதான்:
இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம் (பிரசங்கி 5:18,19)
உன் வாழ்வு நிலையற்றது மாயையானது, அந்த வாழ்க்கையை வாழு அதில் உன் பிரயாசத்துக்கு கர்த்தர் பலன் கொடுப்பாரானால் அதை அனுபவி இதுவே உன் பங்கு என்று சொல்லி முடித்துவிடுகிறார்.
பிரியமானவர்களே! இவ்வளவுதானா நம் வாழ்க்கை? நிச்சயமாக இல்லை. சாலமோனின் ஆராய்ச்சி இந்தப் பாகத்தோடு அரைகுறையாக தொக்கி நின்றிருந்திருக்கலாம் காரணம் அப்பொழுது இன்னும் ஸ்திரீயின் வித்து, மேசியா வெளிப்படவில்லை. ஆனால் அதன் அடுத்த பாகத்தை எழுத சாலமோனிலும் பெரியவர் இதோ வருகிறார்!!
அவரது வருகையே மகா ஆர்ப்பாட்டமாக இருந்தது, ”இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” என்று தேவதூதன் ஆரவரிக்கிறான்.(லூக்கா 2:10)
உலகம் உண்டானது முதல் பரலோகம் பூமிக்கு இப்படிப்பட்ட வாழ்த்தை அனுப்பியதே இல்லை என்ன காரணம்? யார் இவர்??
(தொடர்ந்து சிந்திக்கலாம்)
Yes it is vanity of vanity UNDER THE SUN, Yes in this world which cursed by God, where sin is abounding and Satan is the god( permitted for short time), we can not expect better than that. But as a follower of Jesus Christ our Lord and Saviour we have a eternal gospel that changes the sons of men to sons and daughters of Almighty God and gave us his nature and greatest purpose and calling in life which even the angels try to understand but can not. Praise the Lord for this good news.
I believe you will explain this gospel more clearly on next episode.
I praise the Lord for your courage and concern.