சூரியனுக்குக் கீழ் சர்வமும் மாயை! (பாகம்-1)

முன்னுரை

 “பணமோ எல்லாவற்றிற்க்கும் உதவும் என்று சொல்லி வேதத்திலேயே போட்டிருக்குல்ல!”, “பணம் பாவம் இல்லீங்க! பண ஆசைதான் பாவம்!” இந்த வாதங்கள் அடிக்கடி ஆவிக்குரிய(!) வட்டாரத்தில் நாம் கேட்பவையாகும். நாம் எல்லோருமே பணம் சம்பாதிக்கத்தான் வேலை செய்கிறோம். தண்ணீரை வாங்கக் கூட காசு தேவையாயிருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “நீங்கள் தேவர்களைப் போல இருப்பீர்கள்” என்ற ஏதேன் சர்ப்பத்தின் பொய்யை நம்பி களத்தில் கால் வைத்த மனிதன் தேவனின் துணையின்றி தன்னால் தேவர்களைப் போல வாழ முடியும் என்று நிரூபிக்கப் பல நூற்றாண்டுகளாக சூரியனுக்குக் கீழே போராடிக் கொண்டிருக்கிறான். ”சூரியனுக்குக் கீழே உன் பிரயாசம் மாயை, உனக்கு மனசஞ்சலமே மிஞ்சும்” என்று பரலோகம் அவனைப் பகடி செய்கிறது.

வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. (பிர 1:13,14).

சாதனை, சிகரம், வெற்றி என்று பூமியின் புத்தகங்கள் புகழும் காரியங்களை பரலோகப் புத்தகமோ ”தேவன் நியமித்த தொல்லை” என்று இகழுகிறது. இந்தத் தொல்லையை சிறப்பாக அனுபவிப்பது எப்படி என்று மூன்று வயதிலிருந்தே கற்க ஆரம்பிக்கிறோம். L.K.G துவங்கி பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் வரை இக்கல்வி தொடர்கிறது. இக்கல்வியில் சிலர் முனைவர் பட்டம் வரை முன்னேறுகிறார்கள். இதற்கிடையில் ஏன் பிறந்தோம்?, எதைத் தேடுகிறோம்? எங்கே போகிறோம்? இந்த மூன்று கேள்விகளும் விதைகளாக முள்ளுக்காடான மனித இதயத்தில் அவ்வப்போது பரலோகத்திலிருந்து தூவப்படுகிறது. அவை சிறிதளவு வளர்ந்தவுடனேயே உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் பலவிதமான இச்சைகளுமான முட்செடிகள் அந்தப் பயிரை நெருக்கிப் போடுகின்றன (மாற்கு 4:18). அவன் சாகும்வரை இக்கேள்விகள் குறித்து கரிசனையற்றவனாய் மயக்கத்தில் உழல்கிறான். செத்தபின் இப்பிரபஞ்சத்தின் எங்கேயோ ஓரிடத்திலுள்ள திரும்பமுடியாத ஒரு காரிருள் தேசத்தில் அமர்ந்து கொண்டு “ஐயோ! மோசம் போனேனே!” என்று ஓலமிடுகிறான். அவன் அலறல் பூமியிலிருந்து அவன் வந்து சேர்ந்த அதே அகண்ட பாதைவழியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மற்றவர் செவிகளில் விழுவதில்லை. காரணம் அவர்களைக் கவர்ச்சிக்கும் பல மாயைகள் அவர்களை நெருக்கி நிற்கிறது.

மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதிலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்? (பிர 6:11,12)

அறிவிப்பவன் யார் பிரியமானவர்களே? ஜீவனாகிய இயேசுவைக் கண்டடைந்த நாம்தானே! அந்தகார இருளிலிருந்து ஆச்சரிய ஒளிக்கு வந்து சேர்ந்த நாம் இன்னும் இருளிலிருப்போருக்கு மெய்யையும் மாயையையும் வேறுபடுத்திக் காட்டி அவர்களையும் ஒளிக்குள் அழைக்க வேண்டாமா? இந்த கட்டுரை மூலம் மாயை எது? மெய் எது? என்று தியானிக்கப் போகிறோம்.

நான் இங்கு எழுதுவதன் முக்கிய நோக்கம் உங்களுக்கு போதிப்பதல்ல, உங்களோடு இணைந்து கற்றுக் கொள்ளுவதே!! தனியாய்க் கற்றுக் கொள்ளுவதிலும் தேவ பிள்ளைகளோடு இணைந்து கற்றுக் கொள்ளுதல் நலம். உங்கள் கருத்துக்களையும், மறுப்புகளையும் எழுதுங்கள் ஆரோக்கியமாக விவாதிக்கலாம். நாம் மற்றவர்கள் கண்களைத் திறந்து விடுமுன்னர் நமது கண்கள் தெளிவிக்கப்படுதல் அவசியம். ஏனென்றால் இன்று அனேகர் அனேகரை “வேறொரு சுவிசேஷத்தின்” மூலம் இன்னும் ஆழமான அந்தகாரத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறபடியால் இக்காலத்துக்கு இந்த வேத ஆராய்ச்சியும் விவாதமும் அதிக அவசர அவசியமானது என்று கருதுகிறேன்.

பொருளை மையமாகக் கொண்ட உலகம்

இவ்வுலகத்தில் பொன்னையும் பொருளையும் விட மனித உயிரே விலை மதிப்பற்றது என்பார்கள். ஆனால் பொன்னையும் பொருளையும் உடைய மனித உயிரே விலைமதிப்பற்றதாகக் கருதப்படுகிறது என்பதே நிதரிசனமான உண்மை. மனித உயிரை இவ்வுலகம் விலைமதிப்பற்றதாகக் கருதுமானால் இலங்கையில் கொத்துக் குண்டுகள் போட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து இருந்திருக்காது. மிருகங்கள் கொல்லப்பட்டால்கூட புளூகிராஸ் கேள்வி கேட்கும் ஆனால் அங்கோ இரத்த ஆறு ஓடியும் ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. இதே வேளையில் உயர்ந்த பதவி வகிக்கும் ஒரு அமெரிக்கக் குடிமகனோ, ஆஸ்திரேலியக் குடிமகனோ காரணமின்றிக் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் உலகத்தையே ரணகளமாக்கி விட்டிருந்திருப்பார்கள். இதனால்தான் ”பொன்னையும் பொருளையும் அந்தஸ்தையும் உடைய மனித உயிரே” விலைமதிப்பற்றதாகக் கருதப்படுகிறது என்கிறேன்.

கர்த்தர் பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று சங்கீதம் 115:16 சொல்லுகிறது. பூமியை மனிதன் ஆளவேண்டும், மனிதனை கர்த்தர் ஆளவேண்டும் இதுவே நியதி, ஆனால் பூமியை மனிதன் ஆள்கிறான் மனிதனை பணம் ஆள்கிறது. அதாவது பணத்தை மையமாகக் கொண்ட ஒரு System வழியாக சாத்தான் மனுக்குலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். காரணம் நம் ஆதித்தகப்பன் ஆதாம் கர்த்தரின் தலைமையை விரும்பாமல் தன்னைத்தானே ஆண்டுகொள்ள விரும்பினான். இன்று பணம் அதிகமாக உள்ள மனிதனே சமுதாயத்தில் பெரியவன், செல்வம் கொழிக்கும் நாடுகளும் அதன் குடிகளுமே ஏனையோரால் அண்ணாந்து பார்க்கப்படுகிறார்கள். பரலோகப் பொக்கிஷங்களான அன்பு, ஐக்கியம் முதலானவை சாலை போடப் பயன்படுத்தும் கற்கள் போல இங்கு மதிப்பிழந்து போய்விட்டன. பரலோகத்தில் சாலை போடப் பயன்படுத்தப்படும் தங்கமோ இங்கு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. தேவன் அங்கீகரிக்கும் காரியங்களை மனிதன் அசட்டை செய்கிறான். மனிதன் அங்கீகரிக்கும் காரியங்கள் தேவனுக்கு அருவருப்பாக இருக்கிறது (லூக்கா 16:15). பரலோகத்துக்கும் நமது பூமிக்கோளத்துக்கும் உள்ள தூரம் எத்தனை ஒளி ஆண்டுகளோ தெரியாது ஆனால் அவ்வளவு தூரமாக பரலோகத்தின் வாசனையிலிருந்து பூமியைப் பிரிக்கவேண்டும் என்பது சாத்தானின் தந்திரமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

 பணம் இருப்பவனுக்கே வசதிகள், பணம் இருப்பவனுக்கே பாதுகாப்பு, பணம் இருப்பவனுக்கே மரியாதை. ”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் எழுதிவைத்தது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! உலகிலேயே மதிப்புமிக்கது தேவசாயலாகப் படைக்கப்பட்ட மனித உயிர்தான் ஆனால் அந்த மனித உயிரின் மதிப்பையே அவ்வுயிரைப் பெற்றிருந்த உடல் வைத்திருக்கும் பணத்தை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது என்பது எத்தகைய நிர்பாக்கியமான நிலை?  

பொருளாதாரத்தைக் கொண்டு உலகத்தாரைப் பலர் பல வகையாகப் பிரிக்கிறார்கள். எனது சிற்றறிவுக்கும் புலப்பட்டவகையில்  “பணக்காரர்கள்” மற்றும் “பணக்காரர் ஆக விரும்புகிறவர்கள்” என்று இரு பிரதானப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த இரு கூட்டத்திலும் சேராத ஒரு சில சிறு கூட்டங்களுமுண்டு அவர்கள் உலகத்தால் ஒதுக்கப் படுகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களில் சிலர் காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிகிறார்கள் அவர்களுக்கு “துறவிகள்” என்று பெயர். வேறு சிலர் மனநல மருத்துவமனைகளில் இருக்கிறார்கள் அவர்களுக்கு ”மனநோயாளிகள்” என்று பெயர் இவ்விரு கூட்டத்தாரும் பணத்துக்கு அடிமைப்படாதவர்கள் ஏனெனில் இவர்கள் பணத்ததைப் பயன்படுத்தாதவர்கள். 

இன்னொரு விசேஷித்த கூட்டமுண்டு அவர்களுக்கு ”அழைக்கப்பட்டவர்கள்” அல்லது ”மீட்கப்பட்டவர்கள்” என்று பெயர். இவர்கள் பணத்தைப் பயன்படுத்தினாலும் பணத்துக்கு அடிமைப்படாதவர்கள். ஏனெனில் பணத்தைவிட மேலான ஒரு எஜமானைக் கண்டுபிடித்து அவரை சேவிப்பவர்கள். இக்கூட்டத்தினரை எங்கு தேடலாம்? முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே ”கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படும் கூட்டத்துக்குள்ளே மணவாட்டியாகிய மீட்கப்பட்டவளும் இருக்கிறாள். 

இச்சிறு கூட்டத்தார்களைத் தவிர அனைவரும் பணத்துக்கு அடிமைகள். ஆம், அந்த அளவுக்குப் பணமானது உலகை ஆளுகை செய்கிறது. சில சாம்ராஜ்ஜியங்கள் சில கண்டங்கள் வரைப் பரவலாம். ஆனால் பணத்தின் சாம்ராஜ்ஜியமோ ஏழு கண்டங்களையும் உள்ளடக்கியது. 

”கருவறை முதல் கல்லரை வரை சில்லறை தேவை” என்று புகழ் பாடப்படுமளவுக்கு இன்று ,மனிதனின் தொழுகைக்கு உரியதாகிப் போன இந்தப் பணமென்ன சூரியனைப் போல இது இல்லாவிட்டால் மனுக்குலமே வேரறுக்கப்பட்டுவிடும் என்று சொல்லுமளவுக்கு மதிப்பு மிக்கதா? அல்லது சுவாசத்துக்குக் காரணமாயிருக்கும் பிராணவாயுவை விட பிரதானமானதா? அல்லது ”நீரின்றமையாது உலகு” என்று சொல்லத்தக்கதான நீரை விட இன்றியமையாததா? மேற்சொன்ன மூன்றும் இல்லாவிட்டால் மனுக்குலம் உண்மையிலேயே வாழமுடியாது அவை நமக்காக தேவனால் படைக்கப்பட்டவை. ஆனால் முழு மனுக்குலமும் தாழவிழுந்து சாஷ்டாங்கமாகப் பணிந்து கொள்ளும் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? 

இவ்வளவு பயபக்தியாய்த் தேடுமளவுக்கு இதுதான் நம்மைப் படைத்ததோ? இல்லை, 

பூமி உருவாகுமுன் தோன்றி அது உருவழிந்த பின்னும் நிலைநிற்கும் நித்தியப் பொருளா? அதுவுமில்லை. 

இது மனிதனால் தனக்கென உருவாக்கப்பட்டது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை, விந்தையிலும் விந்தை. ஆம், மனிதன் தனது சொந்த கரத்தின் கிரியையை தாழ விழுந்து பணிந்து கொள்ளுகிறான் இதுவே மெய்யான விக்கிரக ஆராதனை!!

மெய்யான விக்கிரகம் 

நான் மதங்களைக் குறித்த தர்க்கங்களில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. காரணம் உலகத்தில் மதத்தின் வழியாக கடவுளை அடைய முனைபவர்கள் மிகமிகச் சிலரே! பெரும்பான்மையானோர்கள் தங்கள் கடவுள் மூலம் உலகப் பொருளையே தேடுகிறார்கள். எனவே ஒருவனுடைய மத வைராக்கியத்தை உடைத்துவிட்டால் அவனை கிறிஸ்துவுக்குள் ஆதாயம் செய்துவிடலாம் என்பது தப்புக்கணக்கு. நீங்கள் ஒருவேளை உங்கள் வாதத்திறமை மூலமோ அல்லது அற்புத அடையாளங்கள் மூலமோ இயேசுவே மெய்யான தெய்வம் என்று நீங்கள் அவனுக்கு நிரூபித்து விட்டால் அவன் உங்களை நோக்கிக் கேட்கும் முதல் கேள்வி “இந்த இயேசு எனக்கு உலகப்பொருளைத் தருவாரா?” என்பதாகவே இருக்கும். இவர்கள் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்கள் சொல்லும் இயேசுவைப் பின்பற்றிய திரளான ஜனங்களைப் போன்றவர்கள். இயேசு தனது விண்ணக மகிமையைத் துறந்து தன்னைத்தானே வெறுமையாக்கி மனுஷரூபமெடுத்து பூமிக்கு வந்தது இந்தக் கூட்டத்தைச் சம்பாதிக்க அல்ல. இவர்களைப் பார்த்து இயேசு சொன்னது: 

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள் (யோவான் 6:27) 

இவர்கள் இயேசு வழியாக பிதாவை சேவிக்கிறவர்கள் அல்ல, இயேசு வழியாக உலகப்பொருளை சேவிக்க முயல்பவர்கள். எனவேதான் இயேசு தனக்கு நிகராக உலகப் பொருளை களத்தில் நிறுத்தி “என்னைச் சேவிப்பாயோ அல்லது உலகப் பொருளை சேவிப்பாயோ? ஒன்றைத் தெரிந்து கொள்!” என்ற கேள்வியை முன்வைக்கிறார். 

இறைபக்தி என்பது ஏதோ ஒரு மதச்சடங்கை நிறைவேற்றுவதோ அல்லது தொழுதுகொள்வதோ அல்ல. இறைபக்தியை புரியவைக்க வேதம் சொல்லும் விளக்கம் அற்புதமானது. 

இறைபக்தி என்பது கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழுஆத்துமாவோடும், முழுப்பலத்தோடும் முழுச்சிந்தையோடும் அன்புகூருதலாகும் (லூக்கா 10:27) நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடுதலுமாகும் அப்படித் தேடும்போது அவரைக் கண்டடையலாம் (உபா 4:29). இறைபக்தியுள்ள மனிதன் எவனும் தனது இறைவனை அறிந்துகொள்ள விரும்புவான். தனது இறைவனைப் பற்றிய வரலாறுகளையும், அந்த இறைவன் விரும்புபவை மற்றும் வெறுப்பனவற்றையும் அறிந்துகொள்ள வேதநூல்களை ஆவலாய் வாசிப்பான். அந்த இறைவனை மேலும் அறிந்துகொள்ளும் படி தன் மனதில் பல கேள்விகளைச் சுமந்தவனாக காணப்படுவான். 

ஒருவனிடம் ஒரு உருவத்தைக் காண்பித்து ”இதை வணங்கினால் இது உனக்கு உலகப்பொருளை அள்ளித்தரும்” என்று சொன்னவுடன் அவன் எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் வணங்கினானானால் அவன் இறைபக்தியுடையவனல்ல, அவன் இறைவன் வழியாக உலகப்பொருளைத் தேடுகிறவன். கடவுளைக் குறித்து ஒரு கேள்வியும் கேளாதவன் கத்திரிக்காய் வியாபாரியிடம் மணிக்கணக்காய் கேள்விகேட்டு பேரம் பேசி போராடுவான். இங்குதான் அவன் சாயம் வெளுக்கிறது காரணம் அவனது உண்மை தெய்வம் உலகப் பொருளே! அவனது தேடல் இரைதேடல்தானே தவிர இறைதேடலல்ல. சபைகளும்கூட இன்று இப்படிப்பட்ட மனதுடையவர்களால்தான் நிரம்பியிருக்கிறது. 

இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் புறமதத்தவர்கள் செய்யும் வைராக்கியமான மார்க்க காரியங்களைக்கண்டு. நமக்கு அவ்வளவு பக்தியில்லையே என்று வியப்படைகிறார்கள். நான் அங்ஙனம் வியப்படைவதில்லை. காரணம் அவர்கள் பெரும்பாலும் தங்கள் மார்க்கக் கிரியைகளை உலகப் பொருளை அடையும் நோக்கத்துக்காக வைராக்கியமாய்ச் செய்கிறார்களேயன்றி இறைவனை அடையும் நோக்கத்துடனல்ல. மற்றபடி மதத்தின் மூலம் ஜீவனை அடையப் பிரயாசப்படுபவர்கள் ஒரு சிலரே! துரதிர்ஷ்டவசமாக அவர்களில் பலர் தங்கள் ஆன்மீக அறிவைக் குறித்த பெருமையும், திருப்தியும் உள்ளவர்களாக இருக்கிறபடியால் அவர்கள் கர்த்தரை அறிந்துகொள்வது அரிதாக இருக்கிறது. தாழ்மையும் தேடலும் உள்ளவராக இருந்தால் எளிதில் கர்த்தரை அறிந்து கொள்வார்கள். ”இந்தியாவின் அப்போஸ்தலர்” என்று வருணிக்கப்படும் சாது சுந்தர்சிங் போன்றோர் இதற்கு ஒரு நல்லதொரு உதாரணம்.

8 thoughts on “சூரியனுக்குக் கீழ் சர்வமும் மாயை! (பாகம்-1)”

  1. Money is a transactional object. Man wants to earn that money to buy things, comforts, luxury, prestige, status etc., How he earns the money is a different question? either good or bad way. Even ministers also wants money for the same aspect. if he has less money, he things about basic needs, then more money for comforts, then luxury etc.,
    Those days this transactional object was gold, silver, land, people (soldiers), even strength, beauty etc., if he is strong enough, he can get this money, or anything. if she is beauty enough, she can get this money or anything.
    Now lets discuss why he needs this money or anything equivalent to that? for his basic needs, or anything above and beyond.
    Why he is slave to money? b’cas he things that he can do whatever what wants. But (my) analysis says that he is under FEAR, UNCERTIANITY, UNBELEIF, INSECURITY etc., And satan tells them that if you have money you can be fearless, secured etc.,
    The true people of God, they have the fearlessness, secureness, assurance, beleif and faith from and thru the Holy Spirit. so they dont worry about anything, dont fear about future. b’cas they have a Living God who can provide, protect.
    The people in the world and people dont have the Jehova God (even though they are Christians or a minister), they run after to money to somehow get all of the above. Amen.

  2. [The people in the world and people dont have the Jehova God (even though they are Christians or a minister), ]

    One small correction Brother. People Don’t have Jehova God CANNOT be a Christian. A christian in the one who has Son.

    1 John 5:12 “12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.”

    The One who has Son has Father also…

    1 John 2:23 “23. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.”

  3. [[அவனது தேடல் இரைதேடல்தானே தவிர இறைதேடலல்ல. ]]

    நல்லா எழுதுறீங்க சகோ.விஜய்!

  4. // இவர்கள் இயேசு வழியாக பிதாவை சேவிக்கிறவர்கள் அல்ல, இயேசு வழியாக உலகப்பொருளை சேவிக்க முயல்பவர்கள். எனவேதான் இயேசு தனக்கு நிகராக உலகப் பொருளை களத்தில் நிறுத்தி “என்னைச் சேவிப்பாயோ அல்லது உலகப் பொருளை சேவிப்பாயோ? ஒன்றைத் தெரிந்து கொள்!” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.//

    இந்த வரிகளையே ஜாண் அவர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு,

    // [The people in the world and people dont have the Jehova God (even though they are Christians or a minister), ]// அதற்கு விளக்கங் கொடுத்திருப்பதாக எண்ணுகிறேன்.

    சகோதரருக்கு ஒரு வேண்டுகோள்,தங்கள் பின்னூட்டம் தமிழில் இருந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்;வேறு வழியில்லாமல் ஆங்கிலத்தில் இருந்தாலும் கூட தாங்கள் மேற்கோள் காட்டுவது கட்டுரையில் அமைந்துள்ள வரிகளாகவே அமைந்திருக்கவேண்டும்; அதற்கு நீங்கள் அந்த குறிபிட்ட வரிகளை காப்பி பேஸ்ட் செய்தாலே போதும்; மேலும் தாங்கள் பின்னூட்டங்களில் விரிவான கருத்துக்களைச் சொல்லுவதைவிட கலந்துரையாடல் தளங்களில் பங்கேற்றால் தங்கள் கருத்து விரைவில் சென்றுசேர உதவியாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயமாகும்.

    ஆரோக்கிய உபதேசத்துக்காக எழுதும் தங்களைப் போன்ற நண்பர்களுக்காக யௌவன ஜனம் தளமானது ஆவலுடன் காத்திருக்கிறது.

    http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=35

    1. அன்பு சகோதரர் சில் சாம், நிச்சயமாக! ஆனால் என்னுடைய ID இன்னும் Pending Status ல் இருக்கிறது

  5. “ They lose their health to make money and then lose their money to restore their health. By thinking anxiously about the future, they forget the present, such that they live neither for the present nor the future And they live as if they will never die and they die as if they have never LIVED…” Copernicus

  6. அப்போஸ்தலர் 17 ம் அதிகாரம் 24ம் வசனம்: உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

    யோவான் 14: 23: இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

    I கொரிந்தியர் 6: 19: உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

    போதகர்களும் அவர்களது ஸ்தாபனங்களும் பல லட்சங்கள் செலவு செய்து ஆலயம் என்ற பெயரில் கட்டும் கட்டிடங்களில் தேவன் வாசமாயிருப்பதிலை என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

Leave a Reply