சீனி vs பனங்கருப்பட்டி

இன்பம் இனிப்பு போன்றது. அது இருவகைப்படும்; பாவம் தரும் சிற்றின்பம், பரிசுத்தம் தரும் பேரின்பம்.

பாவம் தரும் சிற்றின்பம் வெள்ளைச் சீனி போன்றது. அது இனிப்பு போல தோற்றமளிக்கும் விஷம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது பட்டி தொட்டியெல்லாம் அந்தச் செய்தி பரப்பப்பட்டுவிட்டது. அது நன்கு தெரிந்தாலும் அது பார்வைக்கு அழகாக இருக்கிறது என்பதாலும், உலகம் முழுவதும் எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கிறது என்பதாலும் அதை வாங்கி உட்கொண்டு வியாதிக்குள்ளாகி சாகும் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பரிசுத்தம் தரும் பேரின்பம் பனங்கருப்பட்டி போன்றது. மேற்பார்வைக்கு வெள்ளை சீனிபோல அழகாக இருக்காது. எல்லா இடங்களிலும் அவ்வளவு எளிதாகவும் கிடைக்காது. ஆனால் உடலுக்கு அது அவ்வளவு நல்லது! ஆரோக்கியத்தின் மீது நாட்டங்கொண்ட வெகு சிலரே அதை தேடிப் பிடித்து வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

இப்போது ஆரோக்கியம் மற்றும் டயட் என்பது ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டதால் சீனி கலந்த பனங்கருப்பட்டியும் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. அந்தக் கலப்படக் கருப்பட்டியை உண்மையென நம்பி சில “சுயநல வியாபாரிகளிடம்” வாங்கி ஏமாறுவோர் அநேகர். இன்றும் ஆவிக்குரிய கூட்டங்களில் சத்தியத்துடன் உலக சரக்குகளைக் கலந்து மேடைவித்தை காட்டி ஏமாற்றுவோர் பெருகிவிட்டனர். இதற்குப் பெயர்தான் “வஞ்சிக்கப்படுதல்”. நீங்கள் கேட்கும் சுவிசேஷத்தில் உலக கவர்ச்சி கலந்திருக்கிறதா? துதி ஆராதனைகளில் சினிமாவுக்கு இணையான உலகக் கவர்ச்சி கலக்கப்படுகிறதா? நீங்கள் கேட்கும் சத்தியம் உங்களை பரலோக ராஜ்ஜியத்துக்கு நேராக நடத்தாமல் உலக ஆசீர்வாதங்களுக்கு நேராக மட்டுமே இழுக்கிறதா? எச்சரிக்கை, அது கலப்படச் சரக்கு!

உங்களுக்கு சுத்தமான பனங்கருப்பட்டி வேண்டுமென்றால் நம்பகமான நபர்களிடம், அதை தயாரிக்கும் இடங்களில் தேடிச்சென்று வாங்க வேண்டும். அது சிரமம்தான். ஆனால் அதுதான் சிறந்தது. கலப்படமற்ற சுத்த சத்தியம் போதிக்கும் சபைகளை நீங்கள் தேடிப் பிடித்துத்தான் செல்ல வேண்டும். அங்கு கவர்ச்சி இருக்காது. ஆனால் ஆரோக்கியம் நிச்சயம் இருக்கும்!

Leave a Reply