உலகம் என்றாலே உல்லாசம், ஆடம்பரம், இச்சைகளை அனுபவிப்பது, பொழுதுபோக்கு, ஃபேஷன் என்றுதான் பல கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வேதம் சொல்லும் ‘உலகம்’ என்பது அதுமட்டுமல்ல, உலகத்துக்குரிய ஆன்மீகம்கூட உண்டு. அது இயேசுவின் சிலுவையின் ஆன்மீகத்துக்கு முற்றிலும் எதிரானது.
மனிதர்கள் கடவுளாகலாம் என்று ஆசை காட்டுகிறது உலகத்தின் ஆன்மீகம் (ஆதி 3:5), மனுபுத்திரரை தேவபுத்திரர் ஆக்கும்படி தேவகுமாரன் மனுஷகுமாரன் ஆன வரலாற்றை முன்னிறுத்துகிறது சிலுவை ஆன்மீகம்.
சமாதி அடைந்தவர்களைக் காட்டுவது உலகத்தின் ஆன்மீகம், சமாதியிலிருந்து எழுந்தவரைக் காட்டுகிறது சிலுவையின் ஆன்மீகம்.
உலகத்தின் ஆன்மீகம் துறவிகள் கற்றுக்கொடுத்தது; அது சிங்காசனங்களை துறந்து ஓடச் சொல்லுகிறது, சிலுவையின் ஆன்மீகம் ராஜாவிடமிருந்து வந்தது; அது சிங்காசனத்தை நோக்கி ஓடச் சொல்லுகிறது (கொலோ 1:3, 2 தீமோ 2:12). அரசாண்டவர்களை ஆண்டிகளாக்கியது உலகத்தின் ஆன்மீகம், ஆண்டிகளை அரசாள அழைப்பது சிலுவையின் ஆன்மீகம் (வெளி 5:10, 20:6). அதிகாரங்களைக் கைவிடுவது உலகத்தின் ஆன்மீகம், அதிகாரத்தைக் கைப்பற்றுவது சிலுவையின் ஆன்மீகம் (மத் 28:18, மாற்கு 3:15, லூக்கா 10:19).
சிங்காரங்களை துறந்து சாம்பலைப் பூசிக்கொள் என்கிறது உலக ஆன்மீகம், உன்னை சாம்பலிலிருந்து சிங்காரத்துக்குத் தூக்குவேன் என்கிறது சிலுவையின் ஆன்மீகம் (ஏசா 61:3). அனைத்தையும் துறக்கவைத்து திராட்சைரசத்தை தண்ணீராக்கி முடிகிறது உலக ஆன்மீகம், தண்ணீரை திராட்சைரசமாக்கிய அற்புதத்தில் தொடங்குவது சிலுவை ஆன்மீகம் (யோவா 2:1-10).
நிர்வாணமாக்குவது உலக ஆன்மீகம் (ஆதி 3:7), ராஜவஸ்திரம் தரிப்பிப்பது சிலுவை ஆன்மீகம் (லூக்கா 15:22).
நுகங்களுக்கு தப்பி ஓடுவது உலகத்தின் ஆன்மீகம், நுகங்களை முறிப்பது சிலுவையின் ஆன்மீகம் (யோவா 8:36). தொடாதே, ருசிபாராதே என்று பயமுறுத்துவது உலகத்தின் ஆன்மீகம், பிதாவிடமிருந்து பெற்று துதியோடு அனுபவி என்பது சிலுவையின் ஆன்மீகம் (1 தீமோ 4:4). கட்டுப்படுத்துவது உலக ஆன்மீகம், கட்டவிழ்ப்பது சிலுவை ஆன்மீகம்.
சாகடிக்க முடியாத சுயத்தை பட்டினிபோட்டு செயலிழக்க கற்றுக்கொடுப்பது உலகத்தின் ஆன்மீகம், சுயத்தின் அடக்க ஆராதனையோடுதான் துவங்குகிறது சிலுவையின் ஆன்மீகம்! உலக ஆன்மீகத்தின் கிளைமாக்ஸே முக்திதான், ஆனால் சிலுவை ஆன்மீகத்தின் முதல் காட்சியே முக்தியில்தான்(இரட்சிப்பு) தொடங்குகிறது. பழைய மனிதனுக்கு மேக்கப் போடுவது உலக ஆன்மீகம், புதிய சிருஷ்டியின் விடுதலை வாழ்வு சிலுவை ஆன்மீகம்.
உன் மீட்புக்காக குண்டலினியை எழுப்பிக்கொள் என்கிறது உலக ஆன்மீகம், உன் மீட்புக்காக குமாரனை எழுப்பினார் என்கிறது சிலுவையின் ஆன்மீகம். மூச்சைப் பிடிக்க பயிற்சியளிப்பது உலக ஆன்மீகம், மூச்சைத் தந்தவரைப் பிடித்துக் கொள்வது சிலுவை ஆன்மீகம். மனித முயற்சிகளை நம்பியிருயிருக்கிறது உலகத்தின் ஆன்மீகம். இயேசு செய்து முடித்தவைகளின் மேல் கட்டப்பட்டது சிலுவையின் ஆன்மீகம் .
படைப்புகளையெல்லாம் நமக்குக் கடவுளாக்கியது உலகத்தின் ஆன்மீகம், படைப்புகளுக்கெல்லாம் நம்மை எஜமானாக்கியது சிலுவையின் ஆன்மீகம் (ஆதி 1:28) . தூதர்களுக்கு பணிவிடை செய்வது உலக ஆன்மீகம் (கொலோ 2:19), தூதர்களின் பணிவிடைகளைப் பெற்றுக்கொள்வது சிலுவை ஆன்மீகம் (எபி 1:14).
உலகத்தால் கலங்கிய ஆன்மா தெளிவுபெறப் போராடுவது உலக ஆன்மீகம். தெளிவுபெற்ற ஆன்மா உலகத்தைக் கலக்குவது சிலுவையின் ஆன்மீகம்! (அப் 17:6). மூளைச் சுரப்பிகளைத் தூண்டி பரவசம் தருவது உலக ஆன்மீகம், பரிசுத்த ஆவியாவனவர் தரும் பரலோக சந்தோஷமே சிலுவையின் ஆன்மீகம்! உலகத்தின் ஆன்மீகம் பகல்வேஷம், சிலுவையின் ஆன்மீகமே சுவிசேஷம்!