சிங்காசனம் அசைக்கப்படுமா?

listen

யூதர்களை ஆளுவதற்கு சிங்காசனத்தில் தாவீது போன்ற ஒரு ஹீரோவை வைக்க வேண்டுமா அல்லது நீரோவை வைக்க வேண்டுமா என்பது யூதர்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்தே கர்த்தர் முடிவெடுக்கிறார் என்பதற்கு வேதாகமமே சாட்சி!

பெலிஸ்தியர், பாபிலோனியர், மீதியானியர் போன்றோர் பிடியில் சிக்கித் தவிக்கும் தேவஜனங்கள் தங்களைத் தாங்களே ஆராய்ந்து மனந்திரும்பி கர்த்தரிடம் கதறும்போது அவர் மனமிரங்கி கொடுங்கோலர்களின் சிங்காசனத்தை அசைப்பார், ஜனங்கள் விடுதலை அடைவார்கள். அதுவரை அவர்களது சிங்காசனம் அசைக்கபடுவது சாத்தியமல்ல. காரணம் கர்த்தரே அதை நிலைப்படுத்தியிருக்கிறார்.

எனவே நமது உடனடித் தேவை மனந்திரும்புதலே! ஆவிக்குரிய யுத்தமல்ல…

இது நரேந்திர மோடிக்களுக்கும், யோகி ஆதிநாத்துகளுக்கும் சவால் விடும் நேரமல்ல! இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு பாகாலிடம் திரும்பும்போதுதான் இதுபோன்ற எதிர்மறைச் சூழல்கள் ஏற்படுகிறது. நாம் கர்த்தரைச் சேவிக்கிறோமா அல்லது உலகப்பொருளைச் சேவிக்கிறோமா என்று இந்தியக் கிறிஸ்தவர்கள் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம்!

எரேமியாவின் காலத்து பாபிலோனிய சிறையிருப்பும் ஜனங்களின் கீழ்ப்படியாமை காரணமாகவே வந்தது. ஜனங்கள் பாபிலோனியருக்கு விரோதமாக கொந்தளித்துக் கொண்டிருந்தபோது இந்த சிறையிருப்பு கர்த்தர் அனுமதித்தது, எனவே மனந்திரும்புங்கள் என்றான் எரேமியா. அவனது வார்த்தைகள் யூத தலைவர்களுக்கும், ஜனங்களுக்கும் கசப்பாயிருந்தது. அவர்கள் கர்த்தரிடம் திரும்பவில்லை இதன் விளைவாக நிலைமை மோசமானதே தவிர அவர்களின் எதிர்ப்புகளால் பாபிலோனின் சிங்காசனங்கள் அசைக்கப்படவில்லை.

எரேமியா காலத்தில் சரி, இப்போது நாம் என்ன பாகாலையா சேவிக்கிறோம்? கர்த்தரைத்தானே சேவிக்கிறோம்? என்று நீங்கள் கேட்கலாம்.

இன்றைய இந்திய கிறிஸ்தவம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? சபைகளின் நிலை என்ன?

விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்? தேவனையா உலகப்பொருளையா? சற்று ஆராய்ந்து பாருங்கள்!

நமது வாழ்க்கையிலும், சபைகளிலும் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா? ஆவியானவர்தான் நம்மை ஆளுகிறாரா அல்லது மனிதர்களும் பாரம்பரியங்களும் நம்மை ஆளுகிறதா?

தங்கள் வஸ்திரங்களைக் கிழித்கொண்டு ‘சபையே மனந்திரும்பு’ என்று கதறிய தீர்க்கதரிசிகளின் குரலுக்கு நாம் செவிகொடுத்தோமா?

பிசாசு நம்மைக் கண்டு பயந்து நம்மை ஒடுக்கும்படி மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கிறான் என்று நினையாதிருங்கள். தேவன் நம்மை நேசிக்கிறதினால் நம்மை அவரிடம் திருப்பும்படியே மோடி போன்றவர்களை அரியணையில் அமர்த்தியிருக்கிறார்.

நம்மைநாமே ஆராய்ந்து மனந்திரும்புவோம் வாருங்கள் என்று யார் அழைத்தாலும் நாம் அங்கு சென்று கூடுவோம்! முழங்கால் யுத்தம் செய்து சிங்காசனத்தை அசைப்போம் என்று யார் கூறினாலும் அங்கு செல்லாதிருங்கள் அதனால் பயனில்லை. மாறாக இரும்புப்பிடி மேலும் இறுகும்.

மீண்டும் சொல்கிறேன், நமது உடனடித் தேவை மனந்திரும்புதலே! முழங்கால் யுத்தமல்ல…

வார்த்தைகள் கசப்பாயிருக்கலாம், கேட்பதும் கேளாதிருப்பதும் அவரவர் விருப்பம்! கர்த்தர் நம்மை நடத்துவாராக!

2 thoughts on “சிங்காசனம் அசைக்கப்படுமா?”

Leave a Reply