கொரோனாவும் அதனால் ஏற்பட்ட அழிவும் தேவசித்தம் அல்ல. கொள்ளை நோய்களும், அதனால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மரிப்பதும் தீர்க்கதரிசனமாக இருக்கலாம்(மத் 24:7). ஆனால் மனிதர்களுடைய மரணம் அல்ல, அவர்கள் தங்கள் வழிகளை விட்டு திரும்பிப் பிழைக்க வேண்டும் என்பதே தேவசித்தம்(எசே 33:11). இங்கு “பிழைத்தல்” என்பது நமது பேச்சு வழக்கில் மாறிப்போனதுபோல “வேலை செய்து சம்பாதித்தல்” என்ற பொருளில் அல்ல, “உயிரோடு வாழ்தல்” என்ற அர்த்தத்திலேயே எழுதப்பட்டுள்ளது. நடக்கப்போவதை முன்னறிவித்தல் என்பது வேறு பிதாவின் சித்தம் என்பது வேறு. இரண்டையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.
கொரோனாவும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் பிசாசின் சித்தம். நம்மிடம் திருடுவதும், நம்மைக் கொல்வதும், அழிப்பதுமே அவன் சித்தம். ஆனால் நமக்கு ஜீவன் உண்டாயிருப்பதும், அந்த ஜீவன் பரிபூரணப்படுவதும் தேவசித்தம் (யோவா 10:10). ஒற்றை உலக ஆட்சிக்காக மக்கள் தொகையைக் குறைப்பது பிசாசின் திட்டம். ஆனால் “பலுகிப் பெருகுங்கள்” என்பதே அன்றும், இன்றும், என்றும் தேவதிட்டம்.
இந்தக் கட்டுரையை நான் வெளியிட்ட இந்நாள் வரை கொரோனா 4 லட்சத்து 63 ஆயிரம் பேரைக் காவு வாங்கியிருக்கிறது. பொருள் நஷ்டத்துக்கோ கணக்கில்லை. வாழ்வாதாரங்களை இழந்து பல குடும்பங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
ஆனால் சத்துரு எதிர்பார்த்திராத வேறு பல எதிர்விளைவுகளும் இந்த லாக்டவுன் காலத்தில் ஏற்பட்டுள்ளன. லாக்டவுனின் விளைவால் கடந்த மார்ச்சிலிருந்து வரும் டிசம்பருக்குள் இந்தியாவில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று UNICEF அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இக்காலகட்டத்தில் 11 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை baby boom என்று அழைக்கிறார்கள். மனுக்குலம் எவ்வளவாய் ஒடுக்கப்பட்டதோ, அவ்வளவாய் பெருகியிருக்கிறது!
பிசாசு வெறுக்கும் பிரதான காரியம் “குடும்பம்” என்பதாகும். ஏனெனில் அது பரலோகத்தின் மாதிரி அமைப்பு. உலகம் முழுவதும் குடும்ப அமைப்பு சிதையத் துவங்கியுள்ள இக்கால கட்டத்தில் லாக்டவுன் விளைவாக மறுபடியும் குடும்பத்தினர் உட்காந்து கூடிப்பேசவும், அரட்டையடிக்கவும் துவங்கியுள்ளனர். பல உறவுகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியிருக்கிறது. வீட்டில் எவ்வளவு நேரந்தான் செல்போனிலும் டிவியிலும் மூழ்கியிருக்க முடியும்?
ஃபேஸ்புக்கில் செய்வதெல்லாம் ஒரு ஊழியமா என்று ஒருகாலத்தில் எங்களைப் பகடி செய்தவர்கள்கூட வேறு வழியின்றி ஆன்லைன் ஊழியத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேவ வார்த்தை இணையத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருக்கிறது. இண்டெர்நெட்டே பாவம் என்று நினைத்திருந்த பல ஊழியர்களுக்கு இணையத்தின் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்ற புதிய வெளிச்சம் இப்போது கிடைத்திருக்கிறது. நிர்பந்தத்தின் மூலம் லாக்டவுனில் ஆராதனை நடத்தத் தொடங்கியவர்கள் இனி லாக்டவுன் முடிந்தபின்னும் இணைய ஊழியத்தை விடமாட்டார்கள். இனி இணையம் இயேசு மயமாகும்.
மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் படைப்பு தன்னை குணப்படுத்திக் கொண்டுள்ளது. ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை மூடியுள்ளதாக ஐரோப்பிய செயற்கைக்கோளான கோபர்நிகஸ் கண்டறிந்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவே காரணம் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இந்த திடீர் மாசுபாடு குறைவுக்கு கடந்த மார்ச் முதல் லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் இயங்காததும், வாகனங்கள் பயன்படுத்தப்படாததுமே காரணம் என்பது நாம் அறிந்ததே..
சதுரங்கத்தில் எதிரியின் மூவ்வை வைத்தே அவனை காலி செய்வது சாம்பியன்களின் வழக்கம். தேவனும் எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே அவனை அழிக்கிறார், அவன் திட்டங்களை சிதைக்கிறார் என்பதை வேதாகம வரலாறுகள் பலவற்றிலும் பார்த்திருக்கிறோம். இப்போது நமது வாழ்நாளில் அனுபவமாகவும் காண்கிறோம்.