கிருபையின் சத்தியம் or கிருபை (vs) சத்தியம்?

பரிசுத்தத்திலிருந்து பாவத்தில் விழுவது ஒரு விழுகை, கிருபையிலிருந்து பிரமாணத்துக்குள் விழுவது இன்னொரு விழுகை (கலா 5:4). பாவத்துக்குள் விழுந்தவனுக்கு தான் விழுந்தது தெரியும், பிரமாணத்துக்குள் விழுந்தவனுக்கு தான் விழுந்ததே தெரியாது. எனவே முன்னதைவிட பின்னது ஆபத்தானது.

கிருபையைப் பேசும்போது சத்தியத்தையும் பேச வேண்டும் என்ற கருத்து இன்று கிறிஸ்தவ வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டையும் பேலன்ஸ் பண்ளி பேசுவதற்கு இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதா? சிலுவையில் வெளிப்பட்ட கிருபையைப் பேசுவதுதான் சத்தியம். நாள்தோறும் பாவிகள்மேல் சினங்கொள்ளுகிற தேவன் என்பதையல்ல, அந்த சினம் சிலுவையில் தணிக்கப்பட்டாயிற்று என்று அறைகூவி பாவிகளை பரமபிதாவிடம் அழைப்பதுதானே சத்தியம்!

கிருபையை அதிகமாகப் பேசினால் ஜனங்கள் பாவம் செய்ய துணிகரம் கொள்வார்கள் என்பது பலருடைய பயம். பாவம் ஒரு நோய், பாவி என்பவன் நோயாளி, கிருபையோ மருந்து! நோயின் வீரியத்தைவிட மருந்தின் வீரியம் அதிகம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. கிருபைக்கு Side Effects கிடையாது. ஏனெனில் அது தேவனுடைய ஆகச்சிறந்த மருந்து. மருந்தை அதிகமாகக் கொடுத்தால் நோய் வீரியம் பெற்றுவிடும் என்பது தேவையற்ற பயம். அத்தகைய பயமுள்ளவர்களின் ஆழ்மனதில் பாவத்துக்கு மருந்து கிருபையல்ல, தண்டனைதான் என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. வசனத்தின்படி பிரமாணம்தான் பாவத்தை வீரியம் கொள்ளச் செய்கிறதேயன்றி, கிருபையல்ல (ரோமர் 7:9).

தண்டனையைக் கண்டு ஏற்படும் பயமே தீர்வு என்பது உலகத்தின் தத்துவம்! பிசாசின் ஆயுதமாகிய பயத்தின் வழியாக அல்ல, தனது சொந்த ஆயுதமான கிருபையின் வழியாகவே தேவன் கடைசிவரை கிரியை செய்ய விரும்புகிறார். ஏதேனும் ஒரு கட்டத்தில் தன் ஆயுதம் பலனற்றது, வேறுவழியின்றி கொஞ்சம் பிசாசின் ஆயுதத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேவன் ஒருபோதும் முடிவெடுப்பதில்லை.

தேவகிருபையைப் பேசுவதை எங்கு எந்தப் புள்ளியில் நிறுத்திவிட்டு தேவகோபத்தையும், தண்டனையையும் பேசவேண்டும் என்பதற்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா என்பதை “சரிவிகிதமாக பேசவேண்டும்” என்று விவாதிப்பவர்கள் விவரிக்க வேண்டும். அப்படி ஒரு புள்ளி இருக்குமானால் கிருபை குறைவுள்ளது என்று பொருளாகிவிடும், நாம் புதிய ஏற்பாட்டை மூடி வைத்துவிட்டு கல்வாரியிலிருந்து இறங்கி மீண்டும் சீனாய் மலையில் ஏற வேண்டியதிருக்கும்.

கிருபை மன்னிப்போடு தொடர்புடையது, பிரமாணம் தண்டனையோடு தொடர்புடையது. என்னால் இந்த எல்லைவரைதான் மனிதனை மன்னிக்க முடியும் என்று எங்காவது ஆண்டவராகிய இயேசு சொல்லியிருப்பாரானால் நாம் அந்தப் புள்ளியில் நாம் கிருபை பேசுவதை நிறுத்திவிட்டு பிரமாணத்தை கையில் எடுக்கலாம். ஆனால் அவரோ தன்னை சிலுவையில் அறைந்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பாவ அறிக்கை செய்யாமலேகூட மன்னிக்குமளவுக்கு தயை பெருத்தவராக இருந்தார்.

ஒரு மனிதனிடம் பாவம் பெருகப் பெருக அவனுக்கு அளிக்கப்பட்ட கிருபை மென்மேலும் பெலப்படுமே தவிர பெலவீனமடையாது என்பதைத்தான் ரோமர் 5:20 பேசுகிறது. அதுதான் தேவனுடைய போர்யுக்தியும்கூட! இங்குதான் பிசாசின் தோல்வி உறுதியாகிறது.

ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே (ரோமர்6:1) என்ற வசனத்தைப் பிடித்துக் கொண்டுதான் பலர் கிருபைக்கு எங்காவது ஒரு இடத்தில் எல்லைக்கோடு கிழிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் பவுல் அந்த அதிகாரத்தில் கிருபையைப் பெற்றவர்கள் பாவத்துக்கு மரித்தவர்கள் எனவே அவர்களால் மீண்டும் பாவம் செய்ய முடியாது என்று கூறி அந்த கிருபையைப் பற்றித்தான் இன்னும் அதிகமாகக் கற்றுத்தருகிறார். “நீங்கள் கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநின்றீர்களானால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கிருபையை கீழே வைத்துவிட்டு பிரமாணப் பிரம்பைக் கையில் எடுக்கவில்லை.

நீங்கள் கொடும்பாவியாக இருந்து தேவனுடைய அளவற்ற கிருபையை ஒருநாள் ருசித்தபோது என்ன நினைத்தீர்கள்? ஆகா இந்தக் கிருபையை வைத்துக்கொண்டு பாவத்தில் இன்னும் மூழ்கித் திளைக்கலாம் என்று நினைத்தீர்களா? அப்படி நினைப்பதாக நினைப்பதுகூட அருவெறுப்பாக இருக்கிறதல்லவா? உங்களைப் போலத்தான் மற்றவர்களும்! உங்களிடமிருந்த உண்மையும், நேர்மையும், நன்றியுணர்வும் மற்றவர்களிடம் இருக்காது என்ற மோசமான சந்தேக மனநிலையை விட்டு தயவுசெய்து வெளியே வாருங்கள்!

கிருபையை பேலன்ஸ் பண்ணுவது குறித்து பேசுவதற்கு முன்னால் “நீங்கள் இரட்சிக்கப்பட கிருபை மட்டுமே போதுமனதாக இருந்ததா இல்லையா? நீங்கள் அந்த இரட்சிப்பில் நிலைநிற்க இப்போது உங்களுக்கு கிருபை மட்டுமே போதுமானதாக இருக்கிறதா இல்லையா? என்ற கேள்விக்கு உங்களுக்கு நீங்களே பதில் காணுங்கள்” உங்களுக்கு கிருபை மட்டும் போதுமானதாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதுவே போதும். ஏனெனில் பாவம் எல்லோருக்கும் பொதுவான வியாதி, கிருபை எல்லோருக்கும் பொதுவான மருந்து.

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply