காலத்தை வென்றவன் நீ!

ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் உள்ளானவர்கள் இவர்கள்.

ஆவிக்கும் மாம்சத்துக்கும் நடக்கும் இடையறாத யுத்தம் போலவே இவர்களுக்குள்ளும் ஒரு இடையறாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும். அது தேவனுடைய ஞானத்துக்கும், மனிதனுடைய அவசரத்துக்கும் நடக்கும் யுத்தம். இந்த யுத்தத்தில் பக்குவப்பட்டு “பொறுமை” எனும் கனியைப் பெற்றுக்கொண்டவர்கள் இவர்கள்.

மனிதனுடைய அவசரத்துக்குக் காரணம் “காலத்தைக்” குறித்த பயம். அவன் காலம் எனும் சிறைக்குள் கட்டுண்டவன்தானே! காலம் இளமையைப் பறித்துக்கொண்டு முதுமையை வழங்கிவிடும், ஜீவனைக் கரைத்து மரணத்தைத் தந்துவிடும். கால்களின் பெலனையும், கண்களின் ஒளியையும் திருடிக்கொள்ளும்.

“காலம் போன கடைசியிலா வாக்குத்தத்தத்தை நிறைவேற்றப் போகிறீர்?”, “நீர் சொன்னதைத் தரும்போது அந்த ஆசீர்வாதத்தை அனுபவிக்க எனக்கு சரீரத்தில் பெலன் இருக்குமா?” என்றெல்லாம் இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது தேவனை நோக்கிப் புலம்பியிருப்பார்கள். நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்(நீதி 13:12) என்று வேதமும் சொல்லுகிறதல்லவா?

தான் காலத்துக்கு அப்பாற்பட்டவரை நம்பியிருப்பவன் என்பதை ஒரு காலத்துக்கு அப்புறம் புரிந்துகொள்வார்கள். அதுமட்டுமல்ல, காலத்துக்கு அப்பாற்பட்டவரை நம்பினதால் தானும் காலத்தை வென்றுவிட்டதை பின்நாட்களில் உணர்ந்துகொள்வார்கள். கண்டங்களைக் கட்டியாளும் சக்கரவர்த்திகளாலும் இயலாத காரியமல்லவா இது!

காலத்தால் எல்லாவற்றையும் விழுங்க முடியாது. காலத்தின் கடிகாரமுள்ளை நிறுத்திவைக்கும் சக்தி வாக்குத்தத்தத்துக்கு உண்டு. வனாந்திரத்தில் திரிந்தாலும் வாக்குத்தத்த வேலிக்குள் இருந்த இஸ்ரவேல் மக்களின் உடைகளையும் பாதரட்சைகளையும் காலத்தால் தேய்மானத்துக்கு உட்படுத்தவே முடியவில்லை.

கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை (உபாகமம் 29:5)

ஒன்று தேய்மானம் இருக்காது, அப்படித் தேய்ந்தாலும் உடலின் செல்கள் தன்னைப் புதுப்பித்து இளமை தானாய்த் திரும்பும். உலகிலேயே முதுமையடைந்து பின்னர் மீண்டும் இளமையைத் திருப்பிக்கொள்ளும் சக்தி கழுகுக்கு மட்டும்தான் உண்டு. அந்தக் கழுகைப்போல தங்களைப் புதுப்பித்துக்கொள்ளும் சிலாக்கியம் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு” மட்டுமே பிரத்யேகமாகத் தரப்பட்டுள்ளது.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40:31)

என்னையொத்த வயதுடையவர்கள் முதுமையடைந்து தளர்ந்த போதிலும் நான் இன்னும் இளமையுடனும், பெலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேனே என்று ஆச்சரியப்படுவீர்களானால் சற்று உங்கள் அருகே திரும்பிப்பாருங்கள். உங்களுடன் நடந்து வந்துகொண்டிருக்கும் வாக்குத்தத்தம்தான் இதற்குக் காரணம். ஆபிரகாமுக்கு தாடி நரைத்தாலும், அவன் நாடிகளையெல்லாம் இளைமையோடு வைத்திருந்தது இந்த வாக்குத்தத்தம்தான்.

உலகத்தான் சுயபெலத்தில் ஓடி எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொண்டு பின்னர் காலச் சுழற்ச்சியில் சிக்கி காலத்தோடு சேர்ந்து கரைந்து போகிறான். கர்த்தருக்குக் காத்திருக்கிறவனோ காலத்தை வென்று வாக்குத்தத்தங்களையும் நிறைவேறப்பெற்று அவைகளை ஆண்டு அனுபவிக்கிறான்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24)

Leave a Reply