நாம் பரிசுத்தமடைய, பரிசுத்தமடைய சக மனிதர்களைவிட்டு தனிமைப்பட்டுப் போய்விடுவோம் என்று சிலர் கருதுகிறார்கள். பரிசுத்தம் நம்மை தேவசாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதனை விட்டு ஒருநாளும் தனிமைப்படுத்தாது. மாறாக பரிசுத்தம் திரளான மனிதர்களை நம்மிடத்தில் ஈர்த்துக் கொண்டுவரும்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எப்போதும் திரளான மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். “இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே(யோவா 12:1)” என்று பரிசேயர்கள் புலம்பினர். சரி, இயேசு செய்த அற்புதங்களின் நிமித்தம்தான் ஜனங்கள் அவரைத் தேடிவந்தார்கள் என்பதை ஒரு வாதமாகக் கொண்டாலும். யோவாஸ் ஸ்நானகன் ஒரு அற்புதமும் செய்யாதிருந்தும், தனியே வனாந்திரத்தில் அவன் உலவிக்கொண்டிருந்தபோதும் திரளான ஜனங்கள் அவனைத் தேடி வந்ததை வேதத்தில் வாசிக்கிறோம்.
இனிப்பைதேடி எறும்புகள் வருவதுபோல ஒரு தேவனுடைய மனுஷனைத் தேடி ஜனங்கள் வரவேண்டும். பரிசுத்தம் என்ற பெயரில் ஒரு மனிதன் தனித்து வாழ்வானானால் அவன் பரிசுத்தனாக வாழவில்லை, பரிசேயனாக வாழ்கிறான் என்று பொருள். பரிசுத்தம் என்ற பெயரில் சந்நியாசத்தைத் தரித்துக்கொள்ளாதீர்கள்.
“இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு” என்று வேதமே சில விதமான மனிதர்களைக் குறித்து, சில இடங்களில் அறிவுறுத்துகிறது. விசுவாசத்தில் பலவீனமாக இருக்கும் ஆரம்பக் காலங்களில் அது தேவைதான். ஆனால் கர்த்தருக்குள் வளர வளர் யாரைவிட்டு விலகினோமோ அவர்களே நம் வசம் ஈர்க்கப்பட்டு நம்மோடு வந்து இணைந்து கர்த்தரைப் பற்றிக்கொள்வார்கள். அதுதான் நம்மிடம் காணப்படவேண்டிய உண்மையான வளர்ச்சி. ஆயக்காரரும், பாவிகளும், விபசாரக்காரரும் கர்த்தராகிய இயேசுவை தேடிவந்து அவரோடு இருந்து புதுவாழ்வு பெற்றதை நினைவுகூருங்கள்.
பல பிரசங்கியார்கள் மனுக்குலத்தை எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். மனிதன் விழுந்துபோனவன் என்பது மெய்தான், ஆனால் அவன் தேவசாயலாகப் படைக்கப்பட்டவன் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவனுக்குள் இருக்கும் வெறுமையை தேவன் மட்டும்தான் நிரப்பமுடியும். அந்த தேவபிரசன்னத்தை சுமந்துகொண்டு ஒரு மனிதன் வரும்போது காந்தத்திடம் போய் ஒட்டிக்கொள்ளும் இரும்பைப்போல மனிதர்கள் அவன் வசம் இயல்பாகவே ஈர்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட காந்தமாக கர்த்தர் நம்மை மாற்றுவாராக!