கவர்ச்சியான சுவிசேஷம்

“நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் சாப்பிடாதீர்கள்., நீங்கள் தேவஜனங்கள், நீங்கள் தேவதூதர்களின் உணவை சாப்பிடவேண்டியவர்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசியைப் போல இருக்கும், தேனிட்ட பணியாரம் போல இருக்கும்!”

இப்படியொரு சுவிசேஷத்தை மோசே எகிப்திலே பிரசங்கித்திருந்தால் மேலும் ஒரு நாற்பது ஆண்டுகள் அங்கு பிரசங்கித்தே மரித்திருப்பார். ஒருவனும் மோசே சொன்னதற்கு செவிகொடுத்திருந்திருக்க மாட்டான். காரணம் ஜனங்களின் சரீரம் அந்த உணவுகளுக்குப் பழகியிருந்தது. தாங்கள் காணாத தேவதூதரின் உணவு எப்படியிருந்தால் அவர்களுக்கென்ன? அவர்களுக்கு ஒலிவ எண்ணையும் தெரியாது, தேனும் தெரியாது, பணியாரமும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பது அவர்களது பிரச்சனையுமல்ல, அதைவிட சிறந்த உணவு ஒன்று இருப்பது அவர்களுக்கு நற்செய்தியுமல்ல.

அவர்களுடைய பிரதான பிரச்சனை அடிமைத்தனம், பார்வோனின் நுகத்தடி, இடையறாத ஓய்வற்ற உழைப்பு, இயந்திரம் போன்ற வாழ்க்கை. இதிலிருந்து மோசே விடுதலை தருவதாகச் சொன்னவுடன்தான் அவருக்குப் பின்னாக அனைவரும் அணிதிரண்டார்கள்.

லூக்கா 2:10 சொல்லும் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் அந்த “நற்செய்தி” என்ன?

நீங்கள் ஒரு மனிதனிடம் போய், “நண்பரே நான் மது அருந்துவதில்லை, சிகரட் புகைப்பதில்லை, வேசித்தனம் செய்வதில்லை, கேளிக்கைகளில் ஈடுபடுவதில்லை” என்று சொல்லிப்பாருங்கள். அவன் “ஏன்?” என்று கேட்பான்.

நீங்கள் அதே மனிதனிடம் போய், “நண்பரே நான் யாரிடமும் உதவி கேட்பதில்லை, கடன் வாங்குவதுமில்லை, பணம் சம்பாதிக்க குறுக்கு வழிகளில் ரிஸ்க் எடுப்பதில்லை, வேலை செய்கிறேன் ஆனால் அதற்காக என்னை நானே வருத்திக்கொள்வதில்லை, ஆனாலும் நிகழ்காலத்தில் பற்றாக்குறையும் இல்லை, எதிர்காலத்தைக் குறித்த பயமும் இல்லை” என்று சொல்லிப்பாருங்கள் அவன் “எப்படி?” என்று கேட்பான்.

இந்த “ஏன்” என்ற கேள்விக்கும், “எப்படி” என்ற கேள்விக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. “ஏன்” என்ற கேள்விக்குப் பின்னால் உங்களை தன்னிடமிருந்து அந்நியப்படுத்திப் பார்க்கும் ஒரு உணர்வும், “எப்படி” என்ற கேள்விக்குப் பின்னால் “எனக்கும் இது வேண்டும்” என்கிற ஆரோக்கியமான எதிர்வினையும் ஒளிந்திருக்கிறது.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் இயேசுதான். ஆனாலும் எப்படி என்ற கேள்விக்கு இயேசு என்கிற பதில் வரும்போது அந்த பதில் நிச்சயம் அந்த மனிதனைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

மாம்சம், உலகம் இரண்டுமே மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கும் எதிரிகள்தான். ஆனால் மாம்சம் உள்ளிருந்து செயல்படும் எதிரி. அது “இச்சை” எனும் கயிறு கொண்டு மனிதனைக் கட்டிவைத்திருக்கிறது. மனிதன் விருப்பப்பட்டு இணங்கி அதனுள் கட்டுண்டு கிடக்கிறான். அது தரும் சிற்றின்பம் அவனுக்குப் பிடித்திருக்கிறது. மனசாட்சி குத்தும்போதும், மாம்ச இச்சை மரணத்துக்கு நேரே அவனை இழுத்துச் செல்லும்போதும் மட்டுமே அதிலிருந்து விடுபட விரும்புவான். அதிலிருந்து விடுபடுவது தன்னால் இயலாது என்பதை உணரும்போது இந்த அடிமைத்தனத்தை அவன் இயற்கையென்றும், இயல்பென்றும் ஏற்றுக்கொண்டு அதனால் ஏற்படும் மரணத்தையும் ஏற்றுக்கொள்கிறான்.

ஆனால் உலகம் என்பது வெளியிலிருந்து செயல்படும் எதிரி. அது தன்மேல் வைத்திருக்கும் நுகத்தடியை அவன் அறிந்திருக்கிறான். அது தன்னை அழுத்தும் பாரம் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அந்த பாரத்திலிருந்து ஒருநாள் தற்காலிகமாகக் கிடைக்கும் விடுதலையைக் கூட லாசருவின் விரல் நுனியிலிந்து சொட்டும் நீரைப் பெற்ற ஐசுவரியவானைப்போல கொண்டாடுகிறான். அதை நேரடியாகக் காணவேண்டுமானால் “இன்று மழை பெய்வதால் நம் மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை” என்ற செய்தியைக் கேட்டதும் துள்ளிக்குதிக்கும் ஒரு குழந்தையைப் பாருங்கள். உலகம் அந்தக் குழந்தை மீது சுமத்தியிருக்கும் பாரம் எத்தனை அழுத்தமானது என்பதை அது உணர்த்தும்.

இந்த நுகத்தடியை சுமந்து சோர்ந்து போனவர்களைத்தான் கர்த்தராகிய இயேசு அழைத்தார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28).

மனுக்குலம் உலகக் கட்டமைப்பு தரும் அழுத்தத்தை தாங்க முடியாமல் திணறுகிறது, தன்னை யாரேனும் மீட்கமாட்டார்களா? தனக்கு ஒரு நற்செய்தி கிடைக்காதா என ஏங்குகிறது. ஆனால் சபைக்கோ உலகக் கட்டமைப்பு என்ற ஒன்று இருப்பதும் தெரியாது, அதைப்பற்றி பேசுவதும் கிடையாது. அதிலிருந்து இயேசு விடுவிக்கிறார் என்ற நற்செய்தியை(கலா 1:4) பிரசங்கிப்பதும் கிடையாது. அவிசுவாசிகள் மாம்சம் தரும் அழுத்தத்தை எப்படி இயல்பானது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்களோ அப்படியே சபையும் உலகக் கட்டமைப்பு தரும் அழுத்தத்தை இயல்பானது என்று நம்பிக் கொண்டிருக்கிறது.

அப்படியிருந்தும் ஒரு பெருங்கூட்ட ஜனங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களென்றால் அது சுவிசேஷத்தின் வல்லமையேயன்றி வேறல்ல. தேவமனிதர்களின் ஆத்துமபாரத்தையும், அயராத உழைப்பையும், தியாகத்தையும், அவர்களைப் பயன்படுத்தும் ஆவியானவரின் கிரியைகளையும் குறைத்து மதிப்பிடுவதல்ல இப்பதிவின் நோக்கம். மனுக்குலத்தின் எதிரியை அதிலும் சபையின் பரம எதிரியாகிய “உலகக் கட்டமைப்பை” விட்டு வைத்திருக்கிறோமே என்கிற ஆதங்கம்தான் இப்பதிவு. மாம்சத்தின் வஞ்சகத்தைக் குறித்து பிரசங்கிக்கக்கூடாது என்பதும் எனது கருத்தல்ல, மாம்சத்தின் வஞ்சகத்தைக் குறித்தும் அதற்கு மாற்றாக உள்ள பரிசுத்த வாழ்வு குறித்தும் நாம் பிரசங்கித்த அதே அளவு உலகக் கட்டமைப்பின் வஞ்சகத்தைக் குறித்தும் அதற்கு மாற்றாக உள்ள பரலோக ராஜ்ஜியம் குறித்தும் பிரசங்கித்திருந்தால் அறுவடை இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்குமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை.

மாம்சத்துக்கு எதிரான போராட்டம் என்பதும், பாவத்திலிருந்து விடுதலை என்பதும் படிப்பறிவற்ற ஒரு மனிதனுக்கு பி.ஹெச்.டி பாடத்தை கற்றுக்கொடுக்க முயற்சிப்பது போல. அது அவனுக்கு புரியவும் புரியாது, அது அவனைக் கவரவும் கவராது. அது அவனைக் கவரவில்லை என்பதால் கவர்ச்சியை சேர்க்க சினிமா நடிகர்களைக் கொண்டு சுவிசேஷம் அறிவிக்கவும், பிரம்மாண்ட மேடைகளும், விளக்கு வெளிச்சங்களும், ஒப்பனைகளும், டெக்னாலஜிகளும் தேவைப்படுகிறது. மனித குலத்தை மொத்தமாக கட்டியிழுக்கும் கவர்ச்சி “உலகக் கட்டமைப்புக்கு எதிரான” சுவிசேஷத்தில் இயல்பாகவே அடங்கியிருக்கிறது. அதை சாட்சியாகப் பிரசங்கித்துப் பாருங்கள். வரலாறு காணாத எழுப்புதலைக் காணமுடியும். அதுமட்டுமல்ல அந்த சுவிசேஷம் இந்த பூமியின் வண்ணத்தையே மாற்றிவிடும்.

இதென்ன வேறொரு சுவிசேஷமா என்றால் இல்லை, நமக்கு இருப்பது ஒரே சுவிசேஷம்தான். நமது புரிந்துகொள்ளுதலில்தான் பிரச்சனை. சுவிசேஷத்தை மாம்சத்துக்கு எதிரானது என்ற நோக்கிலேயே பார்த்துப் பழகிவிட்டோம். அது உண்மைதான். அந்த நோக்கில் பார்க்கும்பொழுது அது நம்மை பரிசுத்தத்துக்கு நேராக இட்டுச் செல்கிறது. சுவிசேஷத்தை உலகக் கட்டமைப்புக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளத் துவங்குங்கள். அதுவும் உண்மைதான். அந்த நோக்கில் பார்க்கும்பொழுது அது பரலோக ராஜ்ஜியம் பற்றிய புரிதலை நமக்குத் தரும்.

நாம் செய்ய வேண்டியது என்ன? உலகக் கட்டமைப்பிலிருந்து விடுபட்ட ஒரு சாட்சியான வாழ்வை நாம் வாழ்ந்து, அதை உலகத்துக்கு மாதிரியாகக் காட்ட வேண்டும், அதையே சாட்சியாக, சுவிசேஷமாகப் பிரசங்கிக்க வேண்டும். அப்பொழுது மோசேக்குப் பின்னால் திரண்ட கூட்டத்தைப் போல சபைக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் திரளும். ஆதித்திருச்சபையின் மகத்தான ஆத்தும அறுவடையை நாம் மீண்டும் காண முடியும்.

Leave a Reply