கர்த்தரின் இன்னொரு முகம்

அவர் அந்த ஊரில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரி. அந்த ஊர் கிரிமினல்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் காவல் நிலையத்தில் அவர் குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் பயங்கரமான treatment மறுபடி அவர்களுக்கு குற்றம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையே போக்கடித்துவிடும்.

அந்த அதிகாரிக்கு அருண் என்ற மூன்று வயது சின்ன மகன் இருந்தான். அருண் மகா சேட்டைக்காரன், அவனுக்கும் அப்பாவுக்குமான உறவு அலாதியானது. என்னதான் ஊரையே நடுக்க வைக்கும் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் தனது செல்ல மகனிடம் அவர் ஒரு சிறுபிள்ளையாக மாறி விளையாடுவார். அதே நேரத்தில் மகன் செய்யும் குறும்புகளை கண்டிக்கவும் அவர் தவறுவதில்லை. அருணும் தான் சேட்டை செய்வது அப்பாவுக்கு தெரிந்து அவர் சொல்லும் ஒரே ஒரு கண்டிப்பான வார்த்தைக்கு அவன் அடங்கிவிடுவான்.

அருண் புரிதலில் குறைவுள்ள குழந்தை, அவனது வயதுக்கு, அவன் புரிதலுக்கு ஏற்ப இறங்கி, அவனிடம் அன்போடுகூட எவ்வளவு கண்டிப்பைக் காண்பித்தால் அவன் கீழ்படிவானோ அந்த அளவுக்கு ஏற்ப தன்னை அவனுக்கு வெளிப்படுத்த அப்பாவுக்கு தெரியும். அப்பொழுதுதான் அப்பா-மகன் என்கிற பாசப் பிணைப்பு அழகாக வளரும்.

அருணை கீழ்படிய வைக்க அவர் தனது காவல்நிலையத்தில் வைத்து கொலை குற்றவாளிகளையும், கற்பழிப்புக் குற்றவாளிகளையும் நடத்தும் விதத்தைக் காண்பித்து, நீ கீழ்படியாவிட்டால் உனக்கும் இதுபோன்ற தண்டனைதான் என்று அவனை மிரட்ட வேண்டிய அவசியமில்லை.அப்படி மிரட்டினால் அந்தக் குழந்தையின் மனநிலையும், அவன் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஆனால் அப்படிச் செய்யாத ஒரு ஞானமுள்ள அப்பாவைப் பெற்றிருப்பது அருணின் பாக்கியம்! அப்பாவின் மிடுக்கான நடையையும், கம்பீரமான சுபாவத்தையும் கண்டு ஈர்க்கப்பட்ட அருணும் வளர்ந்து, ஐபிஎஸ் முடித்து ஒருநாள் காவல்துறை அதிகாரியாகிறான். தனது அப்பா கிரிமினல்களை எப்படி நடத்துவார், அப்படி நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பது அருணுக்கு அப்போது நன்றாகப் புரிந்துவிடுகிறது. அப்பாவின் பாணியை தானும் பின்பற்றி அவரைப்போன்றே அவனும் சிறந்த காவல்துறை அதிகாரி என்று பெயரெடுக்கிறான்.

வேதாகமத்தில் விசுவாசிகளை குழந்தைகள்(teknon) என்றும், புருஷர்கள்(huios) என்றும் இருபிரிவாகக் காண்கிறோம். இருவருமே விசுவாசிகள்தான். Teknon என்பது குழந்தையான அருண், Huios என்பது வளர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான அருண் அவ்வளவுதான் வித்தியாசம்.

வேதாகமத்தில் தேவன் சாத்தானையும், அவன் சேனைகளையும் எப்படி சங்கரிப்பார் என்பது எழுதப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் சில குறிப்பிட்ட இன மக்களைக் குறிவைத்து அவர்களது வித்தையே பூமியில் இராதபடிக்கு அழிக்கவேண்டும் என்று கட்டம் கட்டி இறங்கி அடித்ததையும் காணமுடிகிறது. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன் என்று சங்கீதம் 7:11 சொல்லுகிறது. அவர் களத்தில் இறங்கி எதிரிகளை பந்தாடும் சேனைகளின் கர்த்தர் என்று வேதம் அவரைக் கொண்டாடுகிறது.

இவையெல்லாம் குழந்தைகளை(teknon) பயமுறுத்த எழுதப்பட்டவை அல்ல, அந்த குழந்தை வளர்ந்து புருஷனானபின்(huios) எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மாதிரியைக் காண்பிக்க எழுதப்பட்டவை. அதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளிடம் பிரசங்கிக்கக் கூடாதவைகளை பிரசங்கித்து அவர்களை மனநிலை பாதிக்கப்பட்ட அடிமைகளாக வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு குழந்தைக்கு எப்படி போதித்து அவனை ஒழுக்கத்தில் நடத்த வேண்டும் என்பது அப்பாவுக்கு தெரியும். அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்!

Leave a Reply