கருப்பு அங்கிக்குள் கர்த்தரின் பட்டயம்

மார்ட்டின் லூத்தரும் 16 ஆம் நூற்றாண்டு சபைப் புரட்சியும்

(இது ”எழுப்புதல் தொடரின்” நான்காம் அத்தியாயம். நீங்கள் கடந்த  மூன்று அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)

இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

இத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடுக்கவும்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் அரசாங்கங்களால் துரத்தித் துரத்தி சிதறடிக்கப்பட்ட கிறிஸ்தவமானது கான்ஸ்டான்டைன்-I என்ற ரோமப் பேரரசனால் கி.பி நான்காம் நூற்றாண்டில் அரசாங்க ”மதமாக” அறிவிக்கப்பட்டது. உபத்திரவங்களும் முடிவுக்கு வந்தன.  அதுவரை பல்வேறு தெய்வங்களை வணங்கி வந்த குடிமக்கள் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து ”இயேசு” என்னும் வேறொரு புதிய சாமியை(!) வணங்க ஆரம்பித்தனர். அரசர்கள் சபைக்காரியங்களில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். பின்னர் சபை படிப்படியாக வலுப்பெற்று பதினாறாம் நூற்றாண்டுவாக்கில் அரசாங்கங்களை விட அதிக வலிமையுடையதாக மாறியது. போப் நியமிக்கும் சில கிளர்ஜிகள் அரசாங்கச் சட்டத்துக்குக் கூட கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்ற நிலை உருவானது. முழு உலகத்தின் அதிகார மையமாக வாட்டிகன் மாறியது.

ஆதித் திருச்சபை காலத்தில் விசுவாசிகள் யாரேனும் ஒரு விசுவாசியின் வீட்டில் கூடி ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து வந்தனர். யூதமதம் உள்ளிட்ட பிற மதங்களில் உள்ளது போல ஒரு வழிபாட்டுத்தலம் கட்டி அதில்தான் ஆராதிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் புதிய ஏற்பாட்டு சபைக்குக் கொடுக்கப்படவில்லை. உபத்திரவம் மிகுந்த அந்தக் காலத்தில் அதற்கான சூழலும் இல்லை. ஆனால் இந்த காலகட்டங்களில் (16-ம் நூற்றாண்டு) விண்ணை முட்டும் கோபுரங்களோடு கூடிய பளிங்கு மாளிகை போன்ற பல  தேவாலயங்கள் கட்டப்பட்டன. ஆனால் ஆதி அனுபவங்களில் பாதி அனுபவங்கள் கூட இல்லை. பெரும்பாலான மக்களுக்குப் புரியாத லத்தீன் மொழி வேதமே பயன்படுத்தப்பட்டது. ஆராதனைகளும் லத்தீன் மொழியிலேயே இருந்தது. மேலும் மரியாள் வணக்கம், புனிதர் வணக்கம், குழந்தைகள் திருமுழுக்கு, உத்தரிப்புத்தலம் உள்ளிட்ட ஆதித்திருச்சபைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பல சம்பிரதாயங்களும் உபதேசங்களும் சபைக்குள் நுழைந்து விட்டிருந்தது. இயேசுவின் அப்போஸ்தலரும் முதல் நூற்றாண்டு இரத்தசாட்சிகளும் பார்த்துப் பார்த்துக் கட்டிய சபை தனது ஆதிநிலையை விட்டு வெகுதூரம் பயணப்பட்டிருந்தது.

அவ்வப்போது எழுந்த சிற்சில எதிர்ப்புக் குரல்களும் கூட இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டன. ஆனாலும் 16ஆம் நூற்றாண்டில் ஏற்படவிருந்த அந்த மாபெரும் ஆவிக்குரிய புரட்சிக்கு அதற்கு முந்தய நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஜான் விக்ளிஃப், ஜான் ஹஸ் போன்ற தேவனுடைய போராளிகள் ஏற்கனவே அற்புதமான பாதை அமைத்துக் கொடுத்தனர் என்றால் மிகையாகாது.

தேவனுடைய சபையின் எதிர்காலத்தை காரிருள் சூழ்ந்திருப்பதாகக் கருதப்பட்ட அந்த வேளையில்தான் ஹான்ஸ் மற்றும் மார்கிரேத்தா லூத்தர் என்ற ஜெர்மானியத் தம்பதியருக்கு மகனாக 1483 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தேதி மார்ட்டின் லூத்தர் பிறந்தார். மார்ட்டினுடன் பிறந்தவர்கள் நிறைய சகோதர சகோதரிகள். மார்ட்டின் எல்லோருக்கும் மூத்தவராகையால் அவரை வழக்கறிஞராக்கிப் பார்க்க அவரது தந்தை ஆசைப்பட்டார். மார்ட்டினும் அப்பாவின் ஆசைப்படியே தனது 21 ஆவது வயதில் முதுகலைப் படிப்பை முடித்த கையோடு எர்ஃபர்ட் சட்டக் கல்லூரியில் சேர்க்கப் பட்டார். ஆனால் சுவற்றில் அடித்த பந்தாக போன வேகத்தில் சட்டக் கல்லூரியை  விட்டு வெளியேறிவிட்டார். 

காரணம்… அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த முக்கியத் திருப்பம்.

அந்த நாளில் எர்ஃபர்ட் நகரத்தின் அமைதியை கோடை இடிமுழக்கம் கெடுத்துக் கொண்டிருந்தது. மார்ட்டின் வீட்டிலிருந்து தனது கல்லூரிக்கு குதிரையில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு வெகு அருகாமையில் விழுந்த இடியொன்று அவரை “ புனித ஆன்! காப்பாற்று, நான் துறவியாகிறேன்!” என்று பயத்தில் அலற வைத்தது. தப்பிப் பிழைத்ததும் தாம் இட்ட ஆணையைக் காக்க தம் சட்டப் படிப்பைத் துறந்தார். இடியால் தம் மகன் துறவறம் பூண்ட செய்தி அவரது தந்தையின் தலையில் இடியை இறக்கியது. தன் தந்தையின் கடும் எதிர்ப்பையும் மீறி அகஸ்டினியன் மடத்தில் சேர்ந்து துறவியானார்.

மார்ட்டின் லூத்தரை தைரியத்தின் மொத்த உருவமாக கற்பனை செய்து வைத்திருந்த எனக்கு, அவர் இடிக்குப் பயந்து ஊழியத்துக்கு வந்தார் என்ற செய்தி உண்மையிலேயே உலுக்கியது. இப்படிப்பட்ட பயந்த மனுஷனைக் கொண்டா தேவன் ஒரு யுகப்புரட்சியையே நடத்தினார்??!! என்று மலைத்துப் போனேன். அடேங்கப்பா!….நம் தேவன் சுண்டெலியை சிங்கமாக்கி சேனைக்குள் பாயச்செய்பவர், சித்தெறும்பைச் சிறுத்தையாக்கி மதில்களைத் தாண்டச் செய்பவர் (சங்கீதம் 18:29).

மார்ட்டின் துறவற வாழ்க்கையில் தன்னை முற்றிலுமாக ஊற்றி விட்டார். உலக இன்பங்களையெல்லாம் துறந்த அவரால் தன்னை ஆட்கொண்டிருந்த வெறுமையைத் துறக்க முடியவில்லை. வெறுமையை வெறுமையாக்கி சமாதானத்தைத் தன் உரிமையாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவரது சுயம்வெறுத்தலும், உபவாசங்களும், நீண்ட ஜெபங்களும், புனித யாத்திரைகளும் அவரை விடுவிப்பதற்க்குப் பதில் அவரது பாவசுபாவத்தையே அவருக்கு மேலும் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டின. அவரது மனப்போராட்டத்தை அறிந்த அவரது மூப்பர் அவருக்கு ஒரு மாறுதல் தேவை என்று கருதி அவரை இறையியல் படிக்க அனுப்பி வைத்தார். மார்ட்டினது அடுத்த சில ஆண்டுகள் இறையியல் கல்லூரியில் கழிந்தன. முடிவில் அவர் இறையியல் படிப்பை முடித்து முனைவராக (Doctor of Theology) வெளியே வந்தார். இறையியல் படிப்பு அவருக்கு வேதத்தில் ஒரு ஆழமான அறிவையும் தெளிவையும் கொடுத்திருந்தது.

அந்த நேரத்தில் ரோம் நகரில் தூய.பேதுரு தேவாலயம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. கட்டுமானப்பணிக்கு பெரும் பணம் தேவைப்படவே தேவையை சமாளிக்க இன்றுபோல அன்றும் ஒரு ஆவிக்குரிய(?) குறுக்குவழி கையாளப்பட்டது. டெட்சல் என்ற டொமினிகன் துறவி இன்றைய கார்ப்பரெட் கம்பெனிகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு ஒரு மாபெரும் வியாபாரத் தந்திரத்தைக் கண்டுபிடித்தார் (M.B.A படிச்சிருப்பாரோ?!). அதுதான் பாவமன்னிப்புச்சீட்டு விற்பனை. ஆலயக் கட்டுமானப் பணிக்கென்று விற்கப்படும் பாவமன்னிப்புச்சீட்டை விலைக்கு வாங்கினால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று போப் அறிவிக்க, பாவச்சீட்டு விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. பரிசுச்(லாட்டரி) சீட்டை பாவச்சீட்டு என்று அரசாங்கம் தடைசெய்கிறது இன்று, ஆனால் பாவச்சீட்டை பரிசுச்சீட்டு போல திருச்சபை விற்றது அன்று. இந்த அக்கிரமம் ஏற்கனவே சபையின் உபதேசங்களோடு ஒத்துப்போக முடியாமல் தனக்குள் கனன்று கொண்டிருந்த மார்ட்டின் லூத்தரை அணுகுண்டாக வெடிக்கச் செய்தது.

திருச்சபையின் போக்கைக் கண்டித்து தனது 95 கோட்பாடுகள் அடங்கிய கடிதத்தை ஆர்ச்பிஷப்புக்கு அனுப்பினார். அதில் கோட்பாடு 86-இல் “போப்பாண்டவர் உலகத்தின் மாபெரும் செல்வந்தராய் இருக்க தனது சொந்தப்பணத்தில் தூய.பேதுரு ஆலயத்தைக் கட்டாமல் ஏழை எளிய மக்களின் பணத்தை யாசிப்பது ஏன்?” என்ற கேள்வியும் அடங்கும். டெட்செல்லின் பாவச்சீட்டு வியாபாரத்தை கடுமையாக விமர்ச்சித்ததோடு பாவத்தை பணம் வாங்கிக் கொண்டு மன்னிக்கும் உரிமையை யார் கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31, உலகை அதிரச் செய்த மாபெரும் எழுப்புதலுக்கான உள்ளங்கை மேகம் எழும்பிய நாள். விட்டன்பர்க் தேவாலயக் கதவுகளில் 95 கோட்பாடுகளோடு சேர்த்து லூத்தரால் அறையப்பட்ட ஆணியானது திருச்சபையின் இருளின் அதிகாரத்துக்கும் சேர்த்து அடிக்கப்பட்ட ஆணியாகவே இறங்கியது. தங்கள் மீட்பானது விட்டன்பர்க் ஆலயத்தினுள் சிலுவையின் ஆணியில் தொங்கும் சேசு சொரூபத்தில் அல்ல, அந்த ஆலயக் கதவின் ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கும் சத்தியத்தில் என்று அறிந்த தாகமுள்ள மக்கள் புற்றீசல் போல ஆலயத்தை மொய்க்கத் தொடங்கினர்.

95 கோட்பாடுகளும் லத்தீனில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டு பரபரப்பாக விநியோகம் ஆனது. இரண்டு வாரங்களுக்குள் ஜெர்மனி முழுவதிலும், இரண்டு மாதங்களுக்குள் முழு ஐரோப்பியக் கண்டத்தையும் காட்டுத்தீ போல பற்றிப்பிடித்தது. லூத்தரது எழுத்துக்கள் மக்கள் உள்ளங்களில் எழுப்புதல் கனலைக் கிளறிவிட்டது. லூத்தரது பேச்சைக் கேட்க மாணவர்கள் பல்வேறு திசைகளிலிருந்து விட்டன்பர்க்குக்கு வந்து குவிந்தவண்ணம் இருந்தனர்.

ஆர்ச்பிஷப் லூத்தரின் கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை, மாறாக அந்தக் கடிதத்துக்கு “தெய்வ நிந்தனை” என்ற முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி ரோமுக்கு அனுப்பி வைத்தார். போப் லூத்தரை திருச்சபையை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்தார். லூத்தர் தனது 95 கோட்பாடுகளையும், மற்ற எழுத்துக்களில் சிலவற்றையும் வாபஸ் பெறுவதாக 60 நாட்களுக்குள் நேரில்  வந்து அறிவிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப் பட்டது. லூத்தரின் படைப்புகள் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த சலசலப்புகளுக்கெல்லாம் சற்றும் அஞ்சாத லூத்தர் போப்பிடமிருந்து அனுப்பப்பட்ட சம்மனை விட்டன்பர்க்கில் மக்கள் முன்னிலையில் தீக்கொளுத்தினார்.

பிரச்சனை இன்னும் தீவிரமடையவே அரசாங்கம் தலையிட ஆரம்பித்தது. மார்ட்டின் லூத்தர் 1521 இல் Worms என்ற இடத்தில் சக்கரவர்த்தி முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தரும்படி பணிக்கப்பட்டார். சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லஸ் மற்றும் இளவரசர் மூன்றாம் பிரடரிக் ஆகியோருக்கு முன் மதத்தலைவர்கள் புடைசூழ மார்ட்டின் லூத்தர் குற்றவாளி போல நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டார். தனது விசுவாசத்தைக் கைவிடும்படியும் தனது படைப்புகளை திரும்பப் பெறும்படியும் மிரட்டப்பட்டபோது அதற்குப் பதிலாக மார்ட்டின் பேசிய வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை,

”தங்களுக்குள்ளாகவே மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போப்புக்கும் பிற மன்றங்களுக்கும் முன்பாக என் விசுவாசத்தைக் கைவிட்டு மண்டியிட முடியாது. வேதவசனத்தின் ஆதாரம் கொண்டு தவறு என்று நிரூபிக்கப் பட்டாலொழிய எனது விசுவாசத்தை விட்டு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இதுவே எனது இறுதி நிலைப்பாடு. தேவனே எனக்கு உதவிடும், ஆமேன்!”

”Here I stand. I can do no other”  என்று சிம்மக்குரலில் அவர் செய்த கர்ஜனை அந்த அரங்கத்தின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. சத்தியத்தின் நிமித்தம் அரசர்களுக்கு முன்னும் அதிகாரங்களுக்கு முன்னும் பயப்படாமல் நெஞ்சு நிமிர்த்திப் பேசிய அந்த மாவீரனை கர்த்தர் பரலோகத்திலிருந்து பெருமிதத்தோடு நோக்கியிருந்திருப்பார். லூத்தரின் அசாத்தியமான தைரியமும் உறுதியான பேச்சும் அரசரைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ”லூத்தர் ஒரு கொடூரமான மதக் குற்றவாளி எனவும் அவருக்கு ஜெர்மனியில் தங்க இடமோ உணவோ தருபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றும் ஆணையிடுவித்தார். அவரை யாராவது கொலை செய்தால் கூட அது குற்றமாகாது என்றும் அறிவிக்கப் பட்டது.

மார்ட்டின் லூத்தர் இந்த நெருக்கடிகளிலிருந்து லாவகமாகத் தப்புவிக்கப்பட்டு வார்ட்பர்க் என்ற இடத்தில் இரகசியமாகத் தங்க வைக்கப்பட்டார். தாடியும் மீசையும் வளர்த்து, தன்னுடைய பெயரை “ஜங்கர் ஜார்ஜ்” என்று தற்காலிகமாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். வெறும் பதினோறு வாரங்களில் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் இருந்து ஜெர்மானிய மொழிக்கு மொழிபெயர்த்து முடித்தார். இதைத் தொடர்ந்து பழைய ஏற்பாடும் மொழிபெயர்க்கப்பட்டது.

இதற்கிடையே மார்ட்டின் பற்றவைத்த எழுப்புதல் தீ விட்டன்பர்க்கில் கொளுந்துவிட்டு எரியத்துவங்கியது. கத்தோலிக்க ஆதிக்கத்திலிருந்து தனியாகப் பிரிந்த விசுவாசிகள் ஒன்றுகூடி ஆராதிக்கத் துவங்கினர். ஆராதனை முறைகள் மாற்றப்பட்டன. கத்தோலிக்க சபையில் இருந்து விலகிய மூன்று துறவிகள் தங்கள் துறவறத்தைத் துறந்து திருமணம் செய்தனர். மார்ட்டின் மீண்டும் விட்டன்பர்க்கிற்கு திரும்பினார். தனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தும் அயராது உழைத்தார். திருச்சபை வளர்ந்து பெருகியது. இந்த நேரத்தில் மடத்துக்குள் கைதிபோல அடைபட்டுக் கிடந்த சில கன்னியாஸ்திரீகள் அங்கிருந்து லூத்தரின் உதவியோடு தப்பி விட்டன்பர்க்கில் அடைக்கலம் புகுந்தனர். அவர்களில் ஒருவரான கேத்தரீனா எனும் பெண்ணை லூத்தர் மணந்தார். ஆரம்பத்தில் இவரது திருமணம் ”சீர்திருத்தத்தின் வீழ்ச்சி” என்று சிலரால் விமர்ச்சிக்கப்பட்டாலும். கேத்தரீனா எல்லாவற்றிலும் லூத்தருக்கு பக்கபலமாக விளங்கினார். அவர்கள் நடத்திய சாட்சியுள்ள இல்லற வாழ்க்கை எதிர்ப்புகளையெல்லாம் அடங்க வைத்தது.

”இயேசுகிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு” என்ற முழக்கம் எங்கும் கேட்கத் துவங்கியது. திருச்சபையில் விக்கிரக வழிபாடு நிறுத்தப்பட்டது. வேத புத்தகத்தின் அதிகாரமே சபையில் மேலான அதிகாரம் என்று பிரகடனப் படுத்தப்பட்டது. அனைவருக்கும் புரிந்த ஜெர்மானிய மொழியில் ஆராதனை நடத்தப்பட்டது. சபை நூற்றாண்டு காலங்களாக இழந்திருந்த பல போதனைகள் மீட்கப்பட்டன. மார்ட்டின் சபை ஆராதனை, திருமணம் போன்றவற்றை நெறிப்படுத்தினார். பல ஆராதனைப் பாடல்களையும் எழுதினார்.

எசேக்கியேல் 22:30 ”ஒரு மனுஷனைத் தேடினேன்” என்ற வசனத்தைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு இந்த மனுஷனின் ஞாபகமே வருகிறது. தேவனுக்கென்று தன்னை முழுமையாக விற்றுப்போட்ட ஒரு மனிதனை, ஒரே ஒரு மனிதனைக் கொண்டு தேவன் உலக சரித்திரத்தையே மாற்றி எழுத முடியும் என்பதற்கு இந்த லூத்தர் ஒரு சாட்சி, இவரது வைராக்கியமும் தைரியமும் இவரைப் போலவே உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த பலரையும் உலுக்கிவிட்டது. கத்தோலிக்க சபைக்குள்ளிருந்து வெளியேறிய பல குருமார்கள் மார்டின் பின்னால் அணிவகுத்தனர். சீர்திருத்த சபையின் அசுர வளர்ச்சி கத்தோலிக்க சபையை எதிர் சீர்திருத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இந்த எதிர்சீர்திருத்தத்தில் விளைவாகத்தான் உலகெங்கும் கத்தோலிக்க மிஷனரிகள் அனுப்பப்பட்டனர். சமூகசேவை கத்தோலிக்க சபையின் முக்கிய அங்கமாக மாறியது.

இந்த சூழ்நிலையில் மார்டின் லூத்தரது சம காலத்தவரான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்விங்லியும் அவருக்குப் பின்வந்த ஜான் கால்வினும் சீர்திருத்தத்தை இன்னும் அதிவேகத்தில் முன்னெடுத்துச் சென்றனர்.

சீர்திருத்தம் ஆரம்பித்ததும் பரவியதும் அசாத்திய வேகம் என்றாலும் அதிலும் தவறுகளும் குளறுபடிகளும் இல்லாமல் இல்லை. புரட்சியை ஆரம்பிக்கும் முன்னால் லூத்தர் காட்டிய வேகம் அதன் பின்னால் சபையை சீரமைப்பதில் இல்லை என வாதிடுவோரும் உண்டு. ஸ்விங்லி சீரமைப்பதில் லூத்தரை விட அதிக வேகம் காட்டினார். விரைவிலேயே லூத்தருக்கு ஸ்விங்லியுடனும் கால்வினுடனும் உபதேச முரண்பாடுகள் ஏற்பட்டது. திருமுழுக்கு மற்றும் திருவிருந்து ஆகிய சடங்குகளைக் குறித்து லூத்தருக்கும் ஸ்விங்லிக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ”தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்” (Predestination) என்ற காரியத்தில் கால்வினும் லூத்தரும் முற்றிலும் மாறுபட்டார்கள்.

திருவிருந்து குறித்த ஒரு சர்ச்சையில் ஒரு குறிப்பிட்ட வசனத்தைச் சுட்டிக்காட்டி ஸ்விங்லி “இந்த வசனத்தில் உமது கழுத்து உடைபடுகிறது” என்று லூத்தரைச் சாடினார். அதற்கு லூத்தர் “மிகவும் பெருமை கொள்ளாதீர், ஜெர்மானியக் கழுத்துக்கள் அவ்வளவு சீக்கிரம் உடைபடாது” என்று பதிலடியாக தனக்கு சாதகமான இன்னொரு வசனத்தை எடுத்து வீசினார். ஜெர்மானியக் கழுத்து உடைந்ததோ இல்லயோ இவர்களது உபதேசச் சண்டையால் சீர்திருத்தசபை உடைந்தது. நாளடைவில் லூத்தரன், சீர்திருத்த சபை, கால்வினிஸ்ட், பிரிஸ்பிடேரியன் மற்றும் ஆங்கிலிகன் என்று பல கூறுகளாக சிதறியது. பல எழுப்புதல்கள் தணிய முக்கியக் காரணம் உபதேசக் குளறுபடிகள்தான். உபதேச முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்றாலும் சிறு சிறு உபதேச வேறுபாடுகளைக் கூட சகோதர சிநேகத்துக்கும் மேலாக தூக்கிப் பிடிக்கும்போது பிளவுகள் தடுக்க முடியாததாகி விடுகிறது.

நமது இந்திய கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் சபையும் அரசியலும் இருவேறு துருவங்களாக இருக்கின்றன. அது மிகவும் நல்லதும் கூட. ஆனால் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த நிலை வேறு. சபையும் அரசியலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து இருந்தது. கத்தோலிக்க சபை அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது போலவே சீர்திருத்த சபையும் அது பரவியிருந்த நாடுகளின் அரசியலில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது. கண்ணீரும் உதிரமும் சிந்தி ஆவியில் ஆரம்பித்த எழுப்புதலானது பாதை மாறி பயணிக்க ஆரம்பித்தது. எழுப்புதல் பெற்றெடுத்த “புராட்டஸ்டண்டு” எனும் புதுக்குழந்தையை ஆண்டவரோடு நெருங்கி ஜீவிப்பதிலும் உலகத்தை விட்டு பிரிந்து ஜீவிப்பதிலும் பழக்குவியாமல் அதன் தலைவர்கள் கனியற்ற அரசியல் இருளுக்குள் தள்ளினார்கள். தேவையற்ற போர்களும், கலகங்களும் நிகழ்ந்தன.

மார்டின் லூத்தரின் யூத விரோதப் போக்கு இன்றுவரை சர்ச்சைக்குரியதாக விவாதிக்கப் படுகிறது. யூதர்களை அவர் வெறுக்க அவர் காட்டும் காரணம் யூதர்கள் இயேசுவை சிலுவையில் அடித்து ஆதிச் சபையை உபத்திரவப் படுத்தினார்கள் என்பது. லூத்தரை ஹீரோவாகக் காட்ட விரும்பும் யாரும் அவருடைய இந்த பக்கத்தை உலகுக்குக் காட்டமாட்டார்கள். லூத்தரை வில்லனாகக் காட்ட விரும்பும் யாரும் அவரது தியாகத்தையும் சத்தியத்துக்காக அவர் காட்டிய வைராக்கியத்தையும் முழு இருட்டடிப்பு செய்து விடுவார்கள். நமக்கோ இரண்டையும் அறிவது இன்றியமையாதது. மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூல் யூதர்களுக்கு எமனாய் அமைந்தது. பின்னாட்களில் ஹிட்லர் போன்ற பல யூத விரோதிகளை உசுப்பேற்றி விட்டதில் இந்நூலுக்கும் பங்கு உண்டு. ஆனால் ஹிட்லர் யூத விரோதியாய் மாற இந்நூலே காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் ஹிட்லர் இந்நூலில் இருந்த சில கருத்துக்களை எடுத்து தனது யூதவிரோதப் போக்குக்கு சப்பைக் கட்டு கட்டினார் என்பதே உண்மை. எது எப்படியோ லூத்தருடைய அந்தப் புத்தகத்தை இன்றய லுத்தரன் சபைகளே புறக்கணித்து விட்டன.

நான் ஒரு மடுவை விட சிறியவனாயிருந்து லூத்தர் எனும் ஒரு விசுவாச மலையை அண்ணாந்து பார்க்கிறேன். அந்தப் பெருமகனார் அன்று சத்தியத்துக்காக துணிந்து நிற்காவிட்டால் இன்று நமக்கு வெளிச்சம் இல்லை. லூத்தரை வானளாவப் புகழ்ந்த நான் அவரிடம் காணப்பட்ட சில  முரண்பாடுகளைக் குறித்தும் இங்கே எழுதக் காரணம் நமக்கு தனிமனிதர்கள், தலைவர்கள், ஊழிய நிறுவனங்களை விட தேவனுடைய இராஜ்ஜியமே முக்கியம் என்பதைப் ஓங்கிப் பறைசாற்றவே ஆகும். இந்தக் காரியங்களை அறிந்திடாவிடில் நமது கையில் ஒருகாலத்தில் எழுப்புதல் தரப்படும்பொழுது அந்தத் தீயை வளர்க்கும் மாபெரும் பொறுப்பை எப்படி நிறைவேற்றுவோம்? ஒரு ஆவிக்குரிய தலைமைக்கு அடங்கி அவருக்காக வைராக்கியம் பாராட்டவேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதைவிட அதிகமாக தேவனுடைய இராஜ்ஜியத்துக்காக வைராக்கியம் பாராட்ட வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். அதைத்தான் லூத்தரும் அன்று செய்தார்.

மாபெரும் விலையைச் செலுத்தி எழுப்புதலைப் பெற்றுவிடலாம் ஆனால் பெற்ற எழுப்புதலை எங்ஙனம் காக்கப் போகிறோம் என்பதையே பரலோகம் கூர்ந்து கவனிக்கிறது. செருபாபேல் இடிந்து கிடந்த ஆலயத்தைக் கட்டி  எழுப்பினார், அதைத் தொடர்ந்து நெகெமியா எருசலேமைச் சுற்றி அலங்கம் எழுப்பினார். தேவாலயம் கட்டப்படுவது எழுப்புதலைக் குறிக்கும். அலங்கம் எழுப்பியதோ உலகத்துக்கும் சபைக்கும் நடுவாக எழுப்பப்பட்ட பிரிவினைச் சுவரைக் குறிக்கும். உலகத்தை விட்டுப் பிரிந்து கிறிஸ்துவுக்காய் பிரதிஷ்டை வாழ்க்கை வாழவே சபை அழைக்கப்பட்டிருக்கிறது. சபையைக் குறிக்கும் எக்ளீஷியா என்ற கிரேக்கப்பதத்தின் அர்த்தம் “வேறு பிரிக்கப்பட்டவர்கள்” என்பதாகும். எழுப்புதல் என்பது ஒரு முடிவல்ல அது ஆரம்பமே! சர்தை சபை போல செத்த நிலையில்(வெளி 3:1)  இருக்கும் நம்மை உயிர்ப்பித்து கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்ற நமக்குக் தேவன் கிருபையாகக் கொடுக்கும் இன்னொரு வாய்ப்பே எழுப்புதலாகும். எனவே ஒவ்வொரு மீட்கப்பட்ட தேவ பிள்ளையும் தன் இருதயத்தில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு வார்த்தை:

“நான் இந்த உலகத்துக்குரியவன் அல்ல” (யோவா15:19) என்பதே

 மீண்டும்  அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்…

இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

8 thoughts on “கருப்பு அங்கிக்குள் கர்த்தரின் பட்டயம்”

  1. நீங்களும் பலரை போல மார்டின் லூதரின் யூத வெறுப்பை சொல்லாமல் விடுவீரோ என்று எண்ணினேன். ஆனால் நல்ல வேளை அதை எழுதினீர். மோட்சபயணத்தில் குறிப்பிடப்படுவது போல “என் ஜனங்களின் பாவங்களை இவர்கள்(ஹிட்லரை போல)தின்று அவர்கள் அக்கிரமத்தின் மேல் பசிதாகமாக இருக்கிறார்கள். (ஓசியா 4:8).

    இப்படிக்கு,
    சரவ்

    1. வேதம் பரிசுத்தவான்களின் இன்னொரு பக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அது நமது நன்மைக்கே. ஆனால் இன்றய கிறிஸ்தவமோ தேவநீதியைவிட மனிதர்களைப் பிரியப்படுத்த எண்ணுவதாலும் Hero Worship செய்வதாலும்தான் இந்த நிலையில் இருக்கிறது. தாவீதின் தவறை வேதம் எழுதி வைத்திருப்பதால் நாம் யாரும் தாவீதை அவமதிப்பதில்லை மாறாக அதில் எத்தனை சத்தியங்களைக் கற்றுக் கொள்ளுகிறோம்! இது ஏனோ இன்றைய தலைவர்களுக்குப் புரிவதில்லை. தங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி!

  2. Thank God for the saint Martin Luther for his sacrificial life, faith on God , boldness to stand against the whole religious system even it means his life. He used to say sin is essentially separation from God. Let us also have the same spirit to PROTEST whichever come between us and God. It may be small sin, religious duty, even religious leader etc. Let us not Martin Luther’s misdeed mislead us. Therefore, since we have so great a cloud of witnesses surrounding us, let us fix our eyes on JESUS the author and perfecter of faith and fulfill our calling in the body of Christ however insignificant it may be.

    Thank you for your effort,
    Anbu

  3. Hi Dear Bro Vijay,

    Your articals are nice. I do agree with you regarding the Revival. I expect the revival should come in India.Iam allso praying for that.

    thanks
    karthik.
    Uganda.

    1. Dear Brother in christ,

      Thank you for your visit and comments. Thanks a lot for your prayers for Revival in India. Lets hope our churches and country will see a great awakeing soon.

      Regards
      Vijay

  4. சகோ. விஜய் அவர்களுக்கு,

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
    தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply