கருத்துத் திணிப்புகள்

மகிழ்ச்சியான மரணங்கள்-1

ஆவிக்குரிய மரணமும், சரீர மரணமும் விரும்பத்தகாதது, அது சாபத்தின் வெளிப்பாடு. இயேசுவை விசுவாசிக்கிறவன் அந்த சாபத்துக்கு நீங்கலாகியிருக்கிறான்(யோவான் 11:25,26). ஆனால் ஆசீர்வாதமான, மகிழ்ச்சியான சில மரணங்கள் இருக்கிறன. அவை உடலில் ஏற்படும் மரணங்களல்ல, மனதில் ஏற்படும் மரணங்கள். அவைகளில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

#1 கருத்துத் திணிப்புகளுக்கு மரிப்பது

அடுத்தவர்களது openion-களுக்கு மரிப்பது ஒரு அருமையான மரணம். சபை ஐக்கியம் என்பது நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண புருஷனாக உருமாற்றும் ஒரு அருமையான பட்டறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு ஐக்கியத்தில் இருக்கும்போது நீங்கள் தேவையற்ற கருத்து திணிப்புகளுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது. அதற்காக நாம் ஐக்கியத்தை விட்டுவிட்டு தனிமையாக திரியவேண்டுமா என்றால் அப்படியல்ல, சபை கூடிவருதலை நாம் விட்டுவிடாதிருக்க நமக்கு எபிரெயர் 10:25 ஆலோசனை கூறுகிறது.

பாத்திரத்தின் வெளிப்புற சுத்தத்தில் அதிகமாக கவனம் செலுத்தும் நபர்கள் உங்களை ஒருவிதமான uniformity-க்குள் இழுக்கும் அபாயம் இருக்கிறது. இவர்களைப்போல வெளிப்புறத் தோற்றத்தை நான் மாற்றிக்கொள்ளாவிட்டால் நான் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டேனோ என்கிற இழுப்புக்குள் நீங்கள் சென்றுவிடக்கூடாது. தேவன் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் தனித்துவமுள்ளவர்களாக உருவாக்க விரும்புகிறார். உங்கள் தனித்துவத்தை நீங்கள் யாருக்காகவும் இழந்துவிடாதீர்கள். Unity என்பதுதான் சபையில் காணப்படவேண்டுமே தவிர uniformity அல்ல, அதுபோன்ற விஷயங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மீது திணிக்கும் இடம் சபையாக இருக்கமுடியாது, அதைத்தான் cult என்று அழைக்கிறோம்.

இன்னொரு விஷயம் உங்கள் சபையில் பலர் ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை வல்லமையாக செய்கிறார்கள், அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதைக் குறித்து நீங்கள் குற்ற உணர்வுகொள்ள வேண்டிய அவசியமில்லை. தேவன் உங்களுக்கு என்ன திட்டத்தை வைத்திருக்கிறாரோ, அதை மட்டும் நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். அந்த விஷயம் இதுவரை யாருமே உலகத்தில் செய்திராத புதுமையான ஒன்றாகக்கூட இருக்கலாம். அதை நிறைவேற்றி முடிப்பதுதான் உங்களுக்கு ஆசீர்வாதம். எனவே பாஸ்டருடைய மனதை வெல்ல வேண்டும், சக விசுவாசிகளின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காக தேவையற்ற நுகங்களில் உங்கள் கழுத்தைக் கொடுக்காதீர்கள். அடுத்தவருடைய குற்றச்சாட்டுகளுக்கு பயந்து தனித்துவத்தை இழப்பது மாத்திரமல்ல, அடுத்தவருடைய பாராட்டைப் பெறவேண்டும் என்பதற்காக தனித்துவத்தை இழப்பதும் தவறுதான். இரண்டுக்குமே நாம் மரிக்க வேண்டும்.

நீங்கள் யார்?, உங்கள் அழைப்பு என்ன?, நீங்கள் போகவேண்டிய பாதை என்ன? இவைகளையெல்லாம் பரிசுத்த ஆவியானவர் மூலம் நீங்கள் தெளிவாக அறிந்திருந்தால் கருத்துத் திணிப்புகளுக்கு மரிப்பது எளிதாகிவிடும். எனவே பரிசுத்த ஆவியானவருடைய குரலுக்கு மட்டும் எப்போதும் செவியைச் சாய்த்திருப்பதுதான் சரியான தீர்வாகும்.

விஜய்குமார் ஜெயராஜ்
www.brovijay.com

Leave a Reply