வாட்ச்மென்
ஆலோசனைக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக! ஆதித்திருச்சபை என்ற அலங்காரமான கப்பல் இந்த உலகின் ஜனசமுத்திரத்தில் புயல்களையும், சுனாமிகளையும் தாண்டி கம்பீரமாக வலம்வந்து கொண்டிருந்தது. ஆனால் எந்த பெர்முடா முக்கோணத்துக்குள் சிக்கிக் கொண்டதோ நான்காம் நூற்றாண்டுக்குப் பின் திடீரென்று காணாமல் போனது. இன்று நாம் காணும் சபை அமைப்பில் ஆதித்திருச்சபையின் சாயல் எள்ளளவு கூட கிடையாது. ஒரு போலியான கிறிஸ்தவத்தைப் பற்றிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். நீரோ, டொமிஷியன், வெளரியன் போன்ற உபத்திரவ சுனாமிக்கெல்லாம் அசராத அந்தக் கப்பல் எங்கே உடைந்தது? எப்படிக் கவிழ்ந்தது?
நான் சமீபத்தில் எழுதிய ”இரண்டில் ஒன்று” என்ற கட்டுரையில் சமநிலைப் பிரமாணம் பற்றி எழுதியிருந்தேன். அதைக் குறித்து அதிகம் எழுதவேண்டுமென்று உணர்ந்தேன் ஏனெனில் 1நாளாகமம் 1 முதல் 9 அதிகாரங்கள் வரையிலுள்ள வம்ச வரலாற்று அட்டவணையிலிருந்து கூட நீங்கள் செய்திகளைக் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சமநிலைப் பிரமாணத்தைக் குறித்து ஒரு பிரசங்கம் கூட கேட்டிருக்க மாட்டீர்கள். நான் இரட்சிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிறது பல சபைகளுக்கு சென்றிருக்கிறேன். பல செமினார்களில், பல வேதபாட வகுப்புக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவரை ஒரேயொரு முறைகூட சமநிலைப் பிரமாணம் குறித்து ஒருவர் வாயிலும் ஒரு பிரசங்கமும் கேட்டதில்லை.
இந்தக் கட்டுரை வாசிக்கும் பலருக்கு என்மீது கடும்கோபம் பற்றி எரியலாம்! அதன் விளைவுகளை நான் அனுபவிக்கவும் நேரலாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! பவுல் சொன்னவைகளைக் கேட்கும்படிக்கு லீதியாளுடைய உள்ளம் திறக்கப்பட்டது போல அநேக உள்ளங்கள் திறக்கப்படுமானால் எனக்கு அதுவே போதும்.
பழைய ஏற்பாட்டு மக்களுக்கு ஏன் தசமபாகம் என்ற பிரமாணம் கொடுக்கப்பட்டது தெரியுமா? பரலோக பண்டகசாலையில் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஜனங்களிடம் கர்த்தர் கையேந்தவில்லை. ஒருமனிதன்பொருளாதாரவிஷயத்தில்கர்த்தருக்குகீழ்ப்படிகிறானாஇல்லையாஎன்பதைவைத்தேஅவனதுமுழுஆவிக்குரியவாழ்க்கையையும்எடைபோடமுடியும். கர்த்தர் ஜனங்களுடைய உண்மையைப் பார்த்து அவர்களை ஆசீர்வதிக்கும் படிக்கே அவர்களிடம் தசமபாகம் கேட்டார். தசமபாகம் கொடுப்பவன் உண்மையுள்ளவன், தசமபாகம் கொடாதவன் கர்த்தரை விசுவாசிக்காதவன். (அய்யா! நான் பழைய ஏற்பாட்டு மக்களைப் பற்றி சொல்றேன். யாராவது இந்த ஒரு பாராவை மட்டும் எடுத்து எங்கயாவது Copy&Paste பண்ணி வசூல ஆரம்பிச்சுடாதீங்க) ஆனால் பண்டைய இஸ்ரவேலர் அந்த விஷயத்தில் தோற்றுப் போனார்கள்.
கர்த்தர் இஸ்ரவேலரின் சமய வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், குடும்பம் எல்லாவற்றிற்க்கும் தெளிவான பிரமாணங்களை எழுதிக் கொடுத்திருந்தார். அதின்படி இஸ்ரவேலர் நடந்தாலே அவர்களுக்கு ஆசீர்வாதம். இல்லாவிட்டால் சாபம் (உபாகமம் 30:15-19). அவர்களது பொருளாதார வாழ்க்கைக்கு தேவன் கொடுத்த பிரதான கட்டளையே தசமபாகம் ஆகும். பழைய ஏற்பாட்டு மக்களுக்கே தெளிவாக நியமங்களை வகுத்துத் தந்த தேவன் அதனிலும் மேலான புதிய ஏற்பாட்டு சபையான மணவாட்டிக்கு தேவையான நியமங்களை வகுத்துத் தராமல் இருப்பாரா? நமக்கு தேவனுடைய வார்த்தை இருதயத்தில் எழுதப்பட்டிருப்பதாலும் நாம் ஆவியானவரால் நடத்தப்படுவதாலும் பழைய ஏற்பாட்டைப் போல மிக விரிவான சட்டநூல் நமக்கு இல்லை ஆயினும் வெகு அவசியமான காரியங்களில் சபை எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது நிருபங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆராதனைகள், வரங்கள், சபைத் தலைவர்களை நியமிப்பது, சபை ஒற்றுமை, விதவைகள் எதிர்காலம் என்று பல காரியங்களில் தேவனுடைய வீட்டில் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகளை நிருபங்கள் நமக்கு திட்டமும் தெளிவுமாக போதிக்கிறது. சிறு காரியங்களைக் கூட அலசி ஆராய்ந்து சபைக்கு பாதை வகுத்துத் தந்த அப்போஸ்தலர்கள் மிகப் பிரதானமான சபையின் பொருளாதார காரியம் குறித்த கட்டளை வகுத்துத் தராமல் இருந்திருப்பார்களா? பழைய ஏற்பாட்டு சபைக்கு தசமபாகம் என்றால் புதிய ஏற்பாட்டு சபைக்கு என்ன பிரமாணம்?
அதுவே சமநிலைப் பிரமாணம்…
இதுபற்றி புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் அநேகருடைய கண்கள் அவற்றை காணவோ பின்பற்றவோ விரும்புவதில்லை. கர்த்தர் புதிய ஏற்பாட்டு சபைக்கு நியமித்த பொருளாதார முறை “சமநிலைப் பிரமாணம்” அல்ல என்று யாராகிலும் வாதிட விரும்பினால் வேறு என்ன பிரமாணம் என்பதையும் விளக்க வேண்டும்.
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். (அப் 2:44-47)
பிரியமானவர்களே! சோஷலிசத்தை அமல்படுத்தியது முதன் முதலாக ஆதித்திருச்சபைதான். இது வலியவனிடமிருந்து பிடுங்கி எளியவனுக்குக் கொடுக்கும் ராபின்ஹூட் பாணி அதிரடி சோஷலிசம் அல்ல. வலியவனே வலிந்து வந்து எளியவனுக்குப் பகிர்ந்து கொடுத்து அவனையும் தனக்கு சமமாக உயர்த்தி அழகுபார்க்கும் அன்பின் சோஷலிசம். ஆதித்திருச்சபையின் வலிமைக்கு ஆதாரமாக விளங்கியதே இந்த சமநிலைப் பிரமாணம்தான்.
ஆதித் திருச்சபையின் வலிமைக்கு ஆதாரம் ஆவியானவரே! நீங்க என்ன அவர்களது பொருளாதார முறைன்னு சொல்றீங்க? என்று யாராகிலும் வாதிட வந்தால் அவர்களிடம் அடியேன் வைக்கும் வாதம். அதே ஆவியானவரைப் பெற்றுள்ளதாகச் சொல்லும் உங்களிடம் ஆதித்திருச்சபையின் அக்கினி இல்லையே ஏன்??? என்பதே ஆகும். ஆதித்திருச்சபையின் வல்லமைக்கு ஆதாரமாய் விளங்கியவர் ஆவியானவர்தான். அதில் மாற்றுக் கருத்து எனக்கும் இல்லை. ஆனால் அந்த ஆவியானவர் ஆனந்தமாக அவர்களிடம் அசைவாடக் காரணமாயிருந்தது. உலகத்தின் மனிதகுலம் காணாத மாபெரும் அதிசயம் அவர்களுக்குள் காணப்பட்டதே ஆகும். அந்த அதிசயம் என்ன தெரியுமா?
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப் 4: 32)
சுயநலமிக்க மனிதர்களை இப்படி மாற்றியதும் அந்த ஆவியானவர்தான், ஆனால் அவர்கள் ஆவியானவர் தங்களை மாற்றுவதற்கு விட்டுக் கொடுத்தார்கள். இந்த மாற்றம் ஏன் நம்மிடம் இல்லை??. ஒன்று நாம் ஆவியானவருக்கு விட்டுக் கொடாதபடி கடினப்பட்டிருக்கிறோம் அல்லது நாம் பெற்றிருப்பது ”அந்த ஆவியானவர்” அல்ல. இந்த இரண்டில் ஒன்றே காரணமாயிருக்க முடியும்.
காணியாட்சிகளையும் சொத்துக்களையும் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்து பொதுவாக அனுபவிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கொடுக்கப்பட்ட தற்காலிக தீர்வு என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. இது மிகவும் விவாதத்துக்குரிய கருத்தாகும். இதைக் குறித்து பின்னால் விரிவாகப் பார்க்கலாம்.
இன்றைய வேத வல்லுநர்கள் ஆதித்திருச்சபையை ”குழந்தை சபை” (Infant Church) என்கிறார்கள். ”உலகத்தைக் கலக்குகிறவர்கள்” என்று யாரைப்பார்த்து ஜனங்கள் கூச்சலிட்டார்களோ, யார் நரகத்தின் அஸ்திபாரங்களை ஆட்டங்காண வைத்தார்களோ, யார் சிங்கங்களின் வாய்க்குள்ளே தைரியமாய் கிறிஸ்துவுக்காக தலையை விட்டார்களோ, யார் ஜெபித்த போது பூமி அசைந்ததோ அவர்கள் குழந்தைகளாம்!! ஒரு வேதாகமக் கல்லூரி பட்டம் வாங்கிவிட்டு ஏசி அறைக்குள் உட்கார்ந்து புத்தகங்களை மேய்ந்து கொண்டு ஜெபித்து ஒரு தலைவலியைக் கூட சுகமாக்க வக்கில்லாத இவர்கள் முதிர்ந்த கிறிஸ்தவர்களாம்!! தன்னுடையவைகளை தன்னுடையதென்று சொல்லாமல் இல்லாதவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் குழந்தைகளாம், ”என்சபை, என் மந்தை, என் ஊழியம்” என்று அடித்துகொள்ளும் நாமெல்லாம் முதிர்ந்த கிறிஸ்தவர்களாம்.
அவர்கள் குழந்தை போன்ற மனதுடையவர்கள் என்று சொன்னால் அது உண்மை. ஆனால் Infant Church என்று சொல்வதன் அர்த்தம் அவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சியும் முதிர்ச்சியும் அற்றவர்கள் என்ற அர்த்ததிலாகும். அதற்காக ஆதித்திருச்சபை பரிபூரணமான திருச்சபை என்று நான் சொல்லவில்லை. அங்கும் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். கொரிந்து சபையில் விபச்சாரம் செய்பவர்கள் இருந்தார்கள், கலாத்தியா சபையினர் கிருபையை விட்டு நியாயப்பிரமாணத்துக்குத் திரும்ப முனைந்தார்கள் இப்படி ஆங்காங்கே குழப்பங்கள் இருந்ததை மறுக்கமுடியாது. ஆனாலும் நம்மிடம் ஆதித்திருச்சபையை விட சிறந்த வேறொரு நல்மாதிரி இல்லை. அப்போஸ்தலர் நடபடிகள் நமக்கு சிறந்த முன்மாதிரி ஆனால் நிருபங்கள் நமக்கு சட்டபுத்தகம்.
சமநிலைப்பிரமாணம்என்பதுஎன்ன?
கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்குள் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகள் இருக்கக் கூடாது. எல்லோரும் சமம் என்ற நிலை வேண்டும். விசுவாசிகள் பணத்தை தங்களுக்குள் சேகரித்து திருச்சபை அதற்கென நியமித்த ஊழியர்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அந்த பணத்தைப் பிரித்து தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். இதன்மூலம் இவன் வசதி படைத்தவன் இவன் தரித்திரன் என்ற வேறுபாடுகளைக் களைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை நீங்கள் விளக்கமாக 2 கொரிந்தியர் 8,9 அதிகாரங்களில் வாசிக்கலாம். என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து அந்த வேதபகுதியை ஜெபத்தோடு வாசித்துப்பாருங்கள்.
அவர்கள் தங்கள் சொந்த சபைக்குள் மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. மற்ற சபைகளில் உள்ள தரித்திரரான விசுவாசிகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். ஒரு சபை சமநிலைப் பிரமாணத்தை பின்பற்றினாலும் அதை தங்கள் சொந்த சபைக்குள் மட்டும் செயல்படுத்துவார்களானால் அது ஒரு CULT ஆகும். ஏனெனில் கிறிஸ்துவின் சபை என்பது உலகளாவியது, அதை நான்கு சுவர்களுக்குள் அடக்க முடியாது. முழு சர்வாங்க சபையும் என்னுடையது என்ற உணர்வுடையவனே அவரது சரீரத்தில் அங்கமாக இருக்கமுடியும். அன்று மக்கொதோனியா சபை விசுவாசிகள் கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும் தங்களுக்குள் காசு சேர்த்து வேறொரு சபையான எருசலேமில் அவர்களைவிட கடும் தரித்திரத்திலிருந்த விசுவாசிகளுக்கு உதவினார்கள். இந்த நான்கு சுவர்களைத் தாண்டிய அன்பில்தான் ஆதித்திருச்சபையார் அதற்குப்பின் வந்த எல்லா தலைமுறைக் கிறிஸ்தவர்களையும், நம்மையும் விஞ்சி விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்கள்.
இதில் ஒரு பேரதிசயம் என்னவென்றால் சமநிலைப் பிரமாணம் பற்றிய இந்த பகுதியை பவுல் கி.பி 50களின் பிற்பகுதியில்தான் எழுதினார். ஆனால் அவர் இரட்சிக்கப்படும் முன்னர் சவுலாக வாழ்ந்த காலங்களிலேயே ஆதித்திருச்சபையார் ஆவியானவரால் ஏவப்பட்டு அதைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். உங்கள் சொத்துக்கள் ஆஸ்திகள் எல்லாவற்றையும் விற்று விட்டு சகலத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அப்போஸ்தலர்கள் எங்குமே சட்டம் போடவில்லை. அவனவன் தன் தன் திராணிக்குத் தக்கதாக உற்சாகமாகக் கொடுக்கவேண்டும். அது பகிரப்பட்டு குறைவில் உள்ள விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும். இப்படியாக சபைக்குள் இல்லாமை இல்லாது போகும். இதுவே அப்போஸ்தலர் விதித்த நியமம். (2 கொரி 8:11-15).
ஆனால் ஆதித்திருச்சபை விசுவாசிகள் காட்டியது உச்சக்கட்ட அன்பின் வெளிப்பாடாகும். அந்த அளவுக்கு அவர்கள் பரிசுத்த ஆவியில் மூழ்கித் திளைத்திருந்தார்கள். எனக்கு இயேசு போதும் வேறு எதுவுமே வேண்டாம்! எல்லாவற்றையும் விற்று அவருக்காக அவருடையவர்களுக்குக் கொடுக்கிறேன் என்ற அவர்களது செயலே உண்மையிலேயே மறுரூபமடைந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இதில் இன்னொரு பேரதிசயம் அவர்கள் அனைவர் சொத்துக்களையும் பெற்றுக் கொண்டு அப்போஸ்தலர்கள் கோடீஸ்வரர்களாக மாறவில்லை. மாறாக எல்லாவற்றையும் பகிர்ந்தளித்துவிட்டு வெறுங்கையராய் அலைந்தார்கள் (அப் 3:6). எனவேதான் அவர்கள் மத்தியில் எழுப்புதல் அணுகுண்டாக வெடித்துக் கிளம்பியது. அப்போஸ்தரரின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து ஆயிரங்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.
ஆதித்திருச்சபையார் சொத்துக்களை விற்று அப்போஸ்தலர் பாதப்படியில் வைத்து சகலத்தையும் பகிர்ந்து உண்டது உபத்திரவத்தின் காரணமாக வந்த ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்பது முற்றிலும் தவறான வாதம். இந்த ஏற்பாட்டை அவர்களுக்கு நியமித்தது யார்? அப்போஸ்தலர்கள் அதை வலியுறுத்தினார்களா? இல்லை சபையோரே அதை ஆவியானவரால், அன்பினால் ஏவப்பட்டு செய்தார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமும் உள்ளவர்களாய் இருந்தார்கள்(அப் 4:32). இந்த அன்பின் ஒருமனமே அவர்களை இந்த அளவுக்கு உந்தித் தள்ளியது.
பிரியமானவர்களே! இங்கே ஒரு மிக மிக முக்கியமான காரியத்தைச் சொல்லுகிறேன் கவனமாகக் கேளுங்கள். நரகத்தை நடுநடுங்க வைத்த இந்த எழுப்புதலில் நிலை குலைந்த பிசாசானவன். இந்த எழுப்புதலின் ஆணிவேரை ஆராயத் தொடங்கினான். இந்த எழுப்புதல் பிள்ளைகளின் கலப்படமற்ற அன்பைப் பார்த்து அப்பா ஆசையோடு அள்ளிக் கொடுத்தது. இந்த எழுப்புதலை அடியோடு சாய்க்க வேண்டுமென்றால் ஆணிவேரை அசைத்துப் பிடுங்க வேண்டும். இந்த உலகமே பணத்தைச் சுற்றி இயங்குகிறது. இந்த சிறு கூட்டம் மாத்திரம் இந்த மாயவட்டத்துக்குள் சிக்காமல் தனித்து வாழ்கிறது. ஆம் இவர்கள் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் இந்த பொல்லாத பிரபஞ்சத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டவர்கள். (கலா 1:4), தனக்கென பிழைக்காமல் தனக்காக மரித்து எழுந்தவருக்கெனெ பிழைக்கத் தொடங்கிவிட்டவர்கள். இவர்களை மீண்டும் பழைய வட்டத்துக்குள் சிக்க வைப்பது மாத்திரமே இந்த எழுப்புதலை நிரந்தரமாக உடைக்க வழி!! பிசாசு ஊக்கமாக செயல்படத் தொடங்கிவிட்டான். அவனது திட்டப்படியே கி.பி நான்காம் நூற்றாண்டில் ஆதித்திருச்சபை என்னும் இந்த அலங்காரக் கப்பல் ”மதம்” என்ற பெர்முடா முக்கோணத்துக்குள் சிக்கிக் கொண்டது.
இன்று சிங்கப்பூரின் வர்த்தகமயமான நவநாகரீக வீதிகளில் நடந்து செல்லும்போதும், பணத்தைச் சுற்றி இயங்கும் இயந்திரமயமான வாழ்க்கையைப் பார்க்கும்போதும் இனி மறுபடியும் ஆதித்திருச்சபையார் போல எல்லாவற்றையும் பொதுவாக வைத்து சபையார் ஒரே குடும்பம் போல வாழ முடியுமா? என்று சிந்தித்துப் பார்க்கிறேன். அது முதல் நூற்றாண்டு, இது 21ஆம் நூற்றாண்டு கிட்டத்தட்ட 20 நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்டோம். முதல் நூற்றாண்டு LifeStyle வேறு 21 ஆம் நூற்றாண்டு LifeStyle வேறு. கைதொலைபேசி, மடிக்கணிணி, ஐபேட் என்று வாழ ஆரம்பித்து விட்டோம். கர்த்தரின் உள்ளத்தைக் குளிரச் செய்த அந்த முதல் நூற்றாண்டு வாழ்க்கை இனியும் சாத்தியமா???
என்னை நானே கேட்டுப் பார்க்கிறேன். இது காலச்சக்கரத்தின் சுழற்சியால் ஏற்பட்ட இயற்கையான மாற்றமா? ஆனால் எனக்குள் இருந்து ஒரு குரல் ஓலமிட்டு அலறுகிறது! “இல்லை! இது தற்செயலான மாற்றமல்ல! இது திட்டமிடப்பட்ட வஞ்சகம்!!” ஆம், சத்துரு இதைச் செய்தான். இன்று முதலாளித்துவம், புதிய பொருளாதாரம் என்று என்னன்னவோ சொல்லுகிறார்கள். விளைவு உலகம் போகிற போக்கில் கிறிஸ்தவனும் பொருளாதாரக் கைதியாகிப் போனான். சத்துரு நம்மைக் கெடுக்க முழு உலகத்தையும் கெடுத்தான் என்கிறேன்! அவன் ஒரு குழந்தையை அழிக்க ஊரிலுள்ள குழந்தையையெல்லாம் கொன்றவன். இது வரலாற்றில் இருமுறை நடந்தேறியிருக்கிறது. (மோசே, இயேசு)
பிரியமானவர்களே! இன்று Mega Church என்னும் பெயரில் இயங்கும் எல்லாம் பணமயமாகிப் போன ஆவிக்குரிய விபச்சார கிளப்புகளுக்கு முன்னால் நின்று தன் ஒரே பிள்ளையைப் பறி கொடுத்த தாய் போல வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதற வேண்டும்போல இருக்கிறது.
“கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும். திக்கற்றவர்களானோம், (ஆவிக்குரிய) தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
எங்கள் (ஜீவ) தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது. பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம். எங்கள் (ஆவிக்குரிய) பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
(பணத்துக்கு)அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை. வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் (வசனத்தை)அப்பத்தைத் தேடுகிறோம். (வசனப்)பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று. எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
பாழாய்க்கிடக்கிற (சபையாகிய) சீயோன் மலையின்மேல் நரிகள்(கள்ளப் போதகர்கள்) ஓடித்திரிகிறது.கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?(புல 5)”
(தொடரும்)
விசுவாசிகள் சமநிலைப் பிரமாணத்தை நோக்கி முதலாவது முன்னேற கடன் பிணையிலிருந்து விடுபட்டாக வேண்டும்; சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு விசுவாசி 20 வருட பிணையில் ஒரு வீட்டை வாங்குகிறார்;அதாவது தன்னுடைய வாரிசையும் அவருடைய அனுமதியில்லாமல் கடன்காரனாக்குகிறார்..!
தமது விசுவாசத்தை கடன்பட்டு சோதிக்கும் விசுவாசிகளே போலியான பொருளாதார செழிப்பின் போதகங்களில் விழுகிறார்கள்;எனவே வேரிலிருந்து சோதித்தலே பரிகாரமாகும்.
இதே சமநிலைப் பிரமாணத்தைக் குறித்து கடந்த 8 வருடமாக தியானித்தும் எழுதியும் வருகிறேன்;நான் எழுதிய பத்திரிகையின் பிரதியை விரைவில் பதிக்கிறேன்.
சகோதரரே! தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. தயவு செய்து தங்கள் பதிப்பை விரைவில் வெளியிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். கடன் பிரச்சினை குறித்து அடுத்த பகுதியில் எழுதுகிறேன் ஏனெனில் நானும் அதே பாதையில் கடந்து வந்தவன்தான்.
நண்பரே இப்படித்தான் ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருந்தேன். வந்துவிட்டீர்கள். செழிப்பு உபதேசக்காரர்கள் ஊதிய பலூன்களை ஊசி யெழுத்துக்களால் உடையுங்கள்.
கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும் பிரதர்!!! அவர்தான் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியங்களைப் பயன்படுத்துகிறவர்.
Vijay, no doubt, the first century was in its infancy but the standards of present day church are far below the first century church. Of course, there were some traditions like women not being allowed to preach in churches, etc, in the early church.
please pray for me brother
I want to be that first century Christian…………………….
Dear Brother,
Thank you so much for speaking the truth as it is… Church organization will try to bite into pieces. Be strong and courageous . May the LORD grant you strength ,more wisdom, favor to you Amen.
Thanks Brother !!
“என்று யாராகிலும் வாதிட வந்தால் ”–அண்ணே இந்த line -க்கு பதிலா இன்னும் ரெண்டு நல்ல லைன் எழுதியிருக்கலாம் … வாதிட வராம இருந்தா தானே கவலைபடுனும் ! அண்ணே உங்க எழுத்துக்காக வாதிடுங்க , உங்க எழுத்துல வாதிடாதீங்க please … Just a feedback from your Brother…