கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

ஒரு கேள்வியோடு கட்டுரையை ஆரம்பிக்கலாம். ஒரு ஊரில் ஒரே இடத்தில் அருகருகே இரண்டு மேடைகள். இரண்டுமே கிறிஸ்தவக் கூட்டம். இரண்டிலும் ஒரே நேரத்தில் தேவச்செய்தி தொடங்குகிறது. ஒரே தலைப்பு, ஒரே சிந்தனை. ஒரு செய்தியாளர் செய்தியை இப்படி ஆரம்பிக்கிறார் “இன்றைக்கு தியானத்துக்காக எடுத்துக்கொண்ட வேதபகுதி மத்தேயு 5-ஆம் அதிகாரம்…” அடுத்த செய்தியாளர் தனது செய்தியை இப்படி ஆரம்பிக்கிறார் “நான் இந்தக் கூட்டங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் கர்த்தர் எனக்கு பிரத்தியேட்சமாக தரிசனமாகி உங்களுக்கு சொல்லும்படியாகச் சொன்ன செய்தி என்னவென்றால், மத்தேயு 5-ஆம் அதிகாரம்…” இந்த இருவரில் யாருடைய செய்தியை ஆவலாய்க் கவனிப்பீர்கள். இரண்டாமானவருடையதை அல்லவா? இருவரது செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்து யாருடைய செய்தியில் பாரம் இருக்கிறது? யாருடைய செய்தி இறைவார்த்தையோடு இசைந்து போகிறது என்பதைக் குறித்தெல்லாம் நமக்குக் கவலையில்லை.ஏதோவொரு “த்ரில்லிங்” உடன் வராத எதுவும் நம்மைப் பொறுத்தவரை உப்புசப்பில்லாதது. யூதர்கள் அடையாளங்களைத் தேடுகிறார்கள் கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. நாம் யூதர்களைப் போல அடையாளங்கள் பின்னால் ஓடுகிறவர்கள். ஆனால் இந்த சுபாவம் கிறிஸ்தவத்தில் இன்று ஏற்ப்படுத்தியுள்ள தாக்கம் அபாயகரமானது!

இந்த அமானுஷ்யக் கதைகேட்கும் நமது சுபாவமே சில நல்ல ஊழியர்களையும் மக்கள் கவனத்தை ஈர்க்கும்படி ஏதாவதொரு கதை சொல்ல வைத்துவிடுகிறது. இன்றைய ஊழியக்காரர்கள் சிலர் சொல்லும் வெளிப்பாட்டு அனுபவங்களையெல்லாம் கேட்டால் அடடே! ஆதித்திருச்சபையில் கூட இப்படி நடந்ததில்லையே என்று எண்ணத் தோன்றும். ஆனால் இக்காலக் கிறிஸ்தவத்தின் ஆவிக்குரிய வாழ்க்கைத்தரமோ சோதோம் கொமாராவோடு போட்டியிடுவதாக இருக்கிறது. சிலர் இப்படிப்பட்டவர்களை மாபெரும் தேவமனிதர்களென்று எண்ணி அவர்களுக்கு அடிமைகளாகவே மாறிப்போய் விடுகிறார்கள். வேறு சிலரோ அவர்களுக்கு தரிசனங்களிலோ, சொப்பனங்களிலோ நம்பிக்கையில்லாதிருப்பதால் இப்படிப்பட்டவர்களை ஒட்டுமொத்தமாக கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். இந்த இரு ஓரங்களுக்கும் செல்லாமல் நடுவில் நின்று வேத அடிப்படையில் காரியங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் இந்தக் கடைசி நாட்களில் தரிசனம் மூலமாகவும், சொப்பனம் மூலமாகவும் பேசுகிறார் என்று நான் ஆணித்தரமாக விசுவாசிக்கிறேன்.   நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள் என்பதே கடைசிகாலத்தைக் குறித்த யோவேலின் தீர்க்கதரிசனமாயிருக்கிறது (யோவேல் 2:28). ஆனால் தரிசனம் கண்டதாகச் சொல்லும் எல்லோரையும் நம்மால் நம்பமுடியாது. காரணம் பெரும்பாலோனோர் தங்கள் மனதில் தோன்றுவதை தரிசனம், இறைவாக்கு என்று நம்பி வஞ்சிக்கப்படுபவர்கள், வேறு சிலரோ வேண்டுமென்றே பொய்களை ஊதுகிறவர்கள். இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை இனங்கண்டு ஒதுக்கிவைத்தல் அவசியம். அதுவும் இன்றைய இந்திய கிறிஸ்தவத்துக்கு இது அவசர அவசியம்.

கர்த்தர் யாருடன் பேசுகிறார்?

நம் ஆத்தும நேசர் நம்மோடு அனுதினமும் பேச விரும்புகிறார். அவர் பகலின் குளிர்ச்சியான வேளையில் ஆதாம் ஏவாளோடு அளவளாவியவர், ஏனோக்கோடும், நோவாவோடும் ஒரு நண்பரைப்போல இணைந்து உலவியவர், மோசேயை மலையுச்சிக்கு வரவழைத்து 40 நாட்கள் அவனோடு முகமுகமாகப் பேசியவர். இயேசு மனிதராக உலவுகையில் அவரோடு ஒவ்வொரு நாளும் உறவாடிக் களித்தவர், ஆயிரம் பதினாயிரம் சேராபீன்கள் சூழ்ந்திருந்தாலும் மனிதருடன் உறவாடுவதிலேயே மனமகிழ்ச்சி கொள்பவர்.

ஏதோ நாம் அவரோடு உறவுகொள்ள தயாராக இருப்பதாகவும் ஆனால் அவரோ நாம் நெருங்க முடியாத உயரத்தில் தன்னை ஒளித்துக் கொண்டிருப்பதாகவும் சாத்தான் காட்டும் படம் பொய்! பொய்! பொய்!

ஆதாம் ஏவாளோடு கொண்டிருந்த உறவு பாவத்தின் விளைவாக முறிந்து போனதால் அந்த உறவைப் புதுப்பிக்க தனது சொந்தக் குமாரனையே பலியாகத் தத்தம் செய்ய முன்வந்தவரல்லவா நம் தேவன்? விட்டுப்போன அந்த உறவைப் புதுப்பித்துவிட்டு மறுபடியும் நம் வரவுக்காகக் காத்திருக்கிறார், நம்மோடு உறவாட வாஞ்சிக்கிறார்.

இயேசு பரலோக மகிமையனைத்தையும் துறந்து மனிதனாக வந்தது சாத்தானைப் பழிதீர்க்க அல்ல, நம்மை மீட்டெடுக்க, சாத்தானுக்கு விரோதமான கோபமல்ல நமக்காகப் பொங்கிவழியும் அன்பே அவரைக் கோரச்சிலுவை வரை கொண்டுசென்றது. சிலுவையில் மரணத்தை சந்தித்து உயிர்த்தெழுந்து அதே (மகிமையடைந்த) மனித உடலோடு இன்றுவரை பரலோகத்தில் கரைதிறையற்ற மணவாட்டியாக வரப்போகும் நமக்காக காத்திருப்பாரானால் நாம் அவர் பார்வையில் எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்பதை நினைத்துப்பாருங்கள்!!

பழையபடி பயப்படுகிறதற்கு இனி நாம் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் ”அப்பா” என்று அழைக்கத்தக்க குமாரனின் ஆவியைப் பெற்றுவிட்டோம். நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது ஆகியோர் அவருடன் பழகியதைக்காட்டிலும் நாம் அவருடன் இன்னும் இணக்கமாகப் பழக இனி எவ்விதத் தடையும் இல்லை, தடை செய்யும் உரிமை இப்போது சாத்தானிடமும் இல்லை. ஆனால் நமது இருதயம் இன்னும் மண்ணோடு ஒட்டிக் கொண்டிருப்பதாலும், தேவனை அறியவேண்டியபடி அறியாததாலும், சாத்தானின் வஞ்சக இருட்டுக்குள் தொடர்ந்து இருப்பதாலுமே இன்று நமக்குக் கிடைத்த விலையேறப்பெற்ற காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருக்கும் ஆயிரம் நாளைக்காட்டிலும் அவரது ஐக்கியத்தில் கழிக்கும் ஒரு நாள் வாசி என்ற உண்மையை உணராது பூமியில் வீணடித்த காலங்களை எண்ணி பரலோகம் சென்றவுடன் நாம் கண்ணீர்விட்டுக் கதறப்போவது உறுதி. பிரியமானவர்களே! கடிகார முட்கள் பின்னோக்கி நகராது. செலவழித்த நாட்களும் திரும்பாது. இனியாவது… இனியாவது…இனிவரும் காலத்தையாவது அவருக்காக அவரோடு செலவிடலாமா? ஆம் தேவனே அதையே நாங்கள் விரும்புகிறோம்!… எங்களுக்கு உதவி செய்யும்!!!

மேற்கண்ட பத்திகளை நான் எழுதக் காரணம் கர்த்தர் தனது பிள்ளைகள் எல்லோருடனும் பேச விரும்புகிறார் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தவே! பழைய ஏற்பாட்டுக் காலம் போல அரசன், தீர்க்கதரிசி, ஆசாரியன் பொதுமக்கள் என்ற பிரிவினை இப்போது இல்லை. நம் எல்லோரையும் அவர் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக்கி இருக்கிறார்(1பேதுரு 2:9) அதற்காகவே அவர் அவ்வளவு பெரிய விலையும் கொடுத்து இருக்கிறார். ஆனால் இன்று அநேக ஊழியர்கள் மக்களை தொடர்ந்து ஆவிக்குரிய இருளிலேயே இருக்கச் செய்து அவர்கள் தங்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கு தம்மையே நம்பியிருக்கும்படி அவர்களைக் கட்டிவைத்து தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

கர்த்தரோடு நெருக்கமான உறவில் உள்ளவனும், வசனத்துக்குக் கண்கள் திறக்கப்படவனும் தற்கால ஊழியர்கள் சிலரின் அண்டப்புழுகை சுத்தமாக நம்பமாட்டான். சுருக்கமாகச் சொன்னால் ஊழியக்காரன் என்பவன் தன்னை மறைத்துக் கொண்டு கர்த்தரை முன்னிறுத்தி ஜனங்களை அவரண்டைக்கு நடத்துகிறவன். கர்த்தரின் பெயரைப் பயன்படுத்தி ஆனால் தன்னை முன்னிறுத்தி ஜனங்களைத் தன்னண்டைக்கு இழுக்கிறவன் சாத்தானின் கூட்டாளி.

”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்” என்பது ஒரு தமிழ்ப் பழமொழியாகும். இதன் பொருள் கடவுளை மெய்யாகவே கண்டவர்கள் அதைக் குறித்து தம்பட்டம் அடிப்பதில்லை. தம்பட்டம் அடிக்கும் எவரும் கடவுளை கண்டவரில்லை என்பதாகும். எவ்வளவு உண்மை!!

 இயேசு பூமியில் உலவின காலங்களில் அவர் செய்த பிரசங்கங்கள் ஏராளம் ஆனால் ஒன்றில் கூட அவர் தனது தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்களை அதாவது பரலோக தரிசனங்களை மேற்க்கோள் காட்டி பிரசங்கித்ததாகச் சொல்ல முடியுமா? அவர் தனது முப்பத்தி மூணரை ஆண்டுகால வாழ்க்கையில் அவர் ஒரு முறை கூட பிதாவையோ, தூதர்களையோ தரிசித்ததில்லையா? பின்னர் ஏன் அவர் தனது தரிசனங்களையும், தேவதூதர் கதைகளையும் சொல்லி ஜனங்களை ஈர்க்கவில்லை? அவர் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே பேசினார். தான் பேசுவது தேவவார்த்தை என்றும் அது எந்தத் துணையுமின்றி தன்னில் தானே நிலைநிற்க்கும் வல்லமையும் ஜீவனும் உடையது என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார், சத்தியத்துக்கு எந்தச் சப்பைக்கட்டும் தேவையில்லை.

ஆவிக்குரிய அறியாமையும் குருட்டுத்தனமும் நிறைந்த உலகில் தான் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட தளத்தில் வாழ்வதாகக் காட்டிக் கொள்ளுவதென்பது வெகு சீக்கிரம் பிரபலம் அடையவும், மற்றவர்களுக்குத் தன்னைக் குறித்த பயத்தை உண்டாக்கவும் பயன்படும் ஒரு அபாரமான, அபாயமான குறுக்கு வழியாகும். இயேசு இதை ஒருபோதும் செய்யவில்லை. எந்தப்பாவியும் தன்னிடத்தில் எளிதில் வந்து பழகக் கூடிய ஒரு தளத்திலேயே தன்னை எப்போதும் நிறுத்தியிருந்தார். குருவே செய்யாத ஒன்றை அவரைப் பின்பற்றும் சீஷர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் இன்று ஏன் செய்கிறார்கள்? குருவானவர் எல்லா அனுபவங்களையும் பெற்றிருந்தும் ஒன்றுமில்லாதவராக எளியவராகத் தன்னைக் காட்டிகொண்டார், அவரது (போலி) சீடர்களோ ஒன்றுமே இல்லாதிருந்தும் எல்லாம் இருப்பவர்களைப் போல மார்தட்டுகிறார்கள்.

இவர்கள் இப்படி எடுத்ததற்கெல்லாம் பரலோக தரிசனம், தேவதூதன் என்று பொய்களை ஊதுவது ஏன்? இதனால் இவர்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன? விடைக்கு இக்கட்டுரையின் முதல் பத்தியைத் திரும்ப வாசியுங்கள்.

ஏதோவொரு ஆவிக்குரிய ரகசியத்தை வெளிப்படுத்தி போதிக்க சில சொப்பனங்களையோ தரிசனங்களையோ சொல்லி விளக்குவது குறித்து நான் இங்கு பேசவில்லை. வெளிப்படுத்தல், தானியேல்,எசேக்கியேல் போன்றன இத்தகைய வெளிப்படுகளால் நிறைந்த புத்தகங்களே. முக்கியமாக, மேலும் அப்புத்தகங்களிலேயே அந்த தரிசனங்களைப் பதிவு செய்து வைக்கவும், பிறருக்கு சொல்லவும் ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்றதாக எழுதப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது (வெளி 1:19 ) என்பது போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம். இங்கு நான் குறிப்பிடுவது தேவன்/தேவதூதன் எனக்கு தரிசனமாகி இதைச் செய்யச் சொன்னார், அதைச் சொல்லச் சொன்னார் என்று பலர் நா கூசாமல் பொய் சொல்லுவதையே. மேலும் தங்கள் எல்லாப் பிரசங்கங்களையும், எழுதும் பாடல்களையும், இராகங்களையும் கூட அவர்கள் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்திலேயே பெற்றுக்கொண்டதாகக் காட்டிக் கொள்ளுவார்கள். உண்மையான தேவமனுஷன் எவனும் தான் பெற்றுக்கொண்ட தரிசனத்தை தேவ கட்டளையின்றி பிறருக்கு வெளிப்படுத்தமாட்டான். உடனே நாங்களும் தேவன் சொல்லச் சொன்னதினாலேயே சொல்லுகிறோம் என்பார்கள். ஆம், போலியும் அசலைப் போலவேதானிருக்கும். எனவேதான் அவர்களை அவர்களது கனிகளினால் அறியலாம் என்று வேதம் சொல்லுகிறது.

பவுல், பேதுரு போன்ற அப்போஸ்தலர்கள் வெகு அவசியம் என்ற சூழ்நிலையில்தான் தனது இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் குறித்து வாயைத் திறந்தார்களே தவிர தங்களது பிரசங்கங்களிலெல்லாம் அவற்றைத் தம்பட்டமடித்து தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளவில்லை. அதிலும் பவுல் தனது மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்ட அனுபவத்தை சொல்ல நேர்ந்தபோது அதிலிருந்து துளியும் தனக்கு மகிமை கிடைத்துவிடாமல் வெகு ஜாக்கிரதையாக வேறு யாருக்கோ கிடைத்த அனுபவம் போல சொல்ல முற்படுவதை சற்று கவனியுங்கள்:

மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்;

ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன். (2கொரி 12: 1-6)

மிக முக்கியமானதொன்றை இங்கே கவனியுங்கள்! “மேன்மை பாராட்ட நான் தகுதியற்றவன், ஒருவனும் என்னைக் குறித்து எண்ண வேண்டியதற்க்கு மிஞ்சி எண்ணிவிடாதபடிக்கு ஒருபோதும் தேவையில்லாத ‘பில்ட்-அப்’ கொடுக்க மாட்டேன்” என்கிறார். இவர் உண்மையான சீஷன்!!

வஞ்சிக்கப்படாதிருங்கள்:

இன்றைய தமிழ் கிறிஸ்தவ சமுதாயம் கிறிஸ்தவத் தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் சில ஊழியக்காரர்கள் தரிசனம் என்ற பெயரில் சொல்லும் அம்புலிமாமாக் கதைகளில் லயித்துப் போய் இருக்கிறார்கள். காரணம் கேட்க நன்றாக இருக்கிறது! என்ன செய்வது! சினிமாவோ, மெகாசிரியலோ பார்த்தால் பாழும் குற்றமனசாட்சி வாதிக்கிறது. ஆனால் இந்த ஊழியர்கள் சொல்லும் பரலோகக் கதையோ ஸ்பீல்பெர்க் படம் பார்த்த effect-ஐ இலவசமாகக் கொடுக்கிறது, இது ஆவிக்குரியது என்று நம்பப்படுகிறபடியால் அங்கு மனசாட்சியும் மவுனித்துவிடுகிறது.  நமது இந்த “அரிக்கும் காதுகள்” இன்று அநேகருக்கு மூலதனமாகிவிட்டது. கர்த்தர் தரிசனம் தந்து கல்லூரி ஆரம்பிக்கச் சொன்னார், தேவதூதன் தோன்றி பங்காளர்திட்டம் தொடங்கச் சொன்னான், இயேசுவே காட்சியளித்து ஜெபகோபுரம் கட்டச் சொன்னார் என்று ரீலுக்கு மேல் ரீலாகச் சுற்றுகிறார்கள். ரீலில் காட்டப்படும் படம் எவ்வளவு பிரமாண்டமாக உள்ளதோ அவ்வளவு வசூலும் குவிகிறது.

பிரியமானவர்களே! ஒன்றைக் கவனியுங்கள், வேதாகமத்தில் கர்த்தரை முகமுகமாக தரிசித்தவர்களது reaction எப்படியிருந்ததென்று சற்று தியானிக்கலாமா?

ஏசாயா: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5 )

எசேக்கியேல்: இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன். (எசே 1:28)

பவுல்: அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். (அப் 9: 3-6)

யோவான்:  நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்;(வெளி 1:17)

தேவனை முகமுகமாக தரிசிப்பதென்பது விளையாட்டல்ல. உண்மையிலேயே தேவனை தரிசித்தவர்கள் நடந்துகொண்ட விதங்களை மேற்கண்ட உதாரணங்களில் கண்டீர்களல்லவா? ஆனால் நமது ஊழியர்கள் வெகு அநாயாசமாக தங்கள் தரிசனத்தை விவரிக்கும் விதத்திலிருந்தே அது இட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். ஏதோ எதிர்வீட்டுக்காரரோடு கதைப்பது போல தேவனிடத்தில் பேசியதாக இவர்கள் சொல்லும் கதைகளை எப்படி உங்களால் நம்பமுடிகிறது? பக்கதிலுள்ள நகரத்துக்குச் சென்றுவருவதைப்போல நரகத்துக்குச் சென்று வந்ததாகச் சொல்லுகிறார்களே! நரகத்துக்குச் சென்று அங்கு ஆத்துமாக்கள்படும் பேரவதிகளைத் தன் கண்களால் கண்டவன் இவர்களைப் போலத்தான் புதுப்புது “திட்டங்களைக்” கண்டுபிடித்து ஜனங்களைச் சுரண்டுவானோ???

தேவனை ஒருமுறை, ஒரே ஒருமுறை முகமுகமாக தரிசித்தவனுடைய வாழ்க்கை எப்படி மாறும் என்பதற்க்கு பவுல், சாதுசுந்தர்சிங் இருவருடைய வாழ்க்கை உதாரணங்களே போதும். அவருடைய மகிமையை ஒரே ஒரு முறை தரிசித்தார்கள் எல்லாவற்றையும் குப்பை என்று விட்டுவிட்டார்கள். தேவனைத் தரிசித்தவன் எதற்க்கும் அஞ்சமாட்டான், சூழ்நிலைகளைக் கண்டு பதறமாட்டான். இவர்களோ தேவனோடும் தூதர்களோடும் உலவியதாகக் கதைகளெல்லாம் சொல்லிவிட்டு நிகழ்ச்சிகளின் முடிவில் “தயவுசெய்து எங்கள் ஊழியத்தைத் தாங்குங்கள்! நீங்கள் பணம் அனுப்பாவிட்டால் எங்களால் ஊழியத்தைத் தொடரவே முடியாது” என்று நம்மிடமே கையேந்துகிறார்கள். சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரைக் கண்டவன் செய்யும் செயலா இது என்பதை ஞானமுள்ளவர்களே சிந்தியுங்கள்!!

உண்மையிலேயே தேவனோடு ஆழ்ந்த உறவுள்ள சான்றோர் தங்கள் ஆவிக்குரிய அனுபவங்களை பொக்கிஷமாக தங்கள் மனதுக்குள்ளேயே போற்றிப் பாதுகாப்பார்கள் வெளியே எல்லாரிடமும் சொல்லித்திரிய மாட்டார்கள். ஒளியின் தூதன் வேடமணிந்த இருளின் அதிபதியால் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஜனங்களிடையே தங்களை உயர்த்திக்காட்டி ஊழியத்தை வளர்க்க விரும்புகிறவர்களும் ஆண்டவரைப் பார்த்ததில்லை. பார்த்திருந்தாலும் அது ஆண்டவரில்லை. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். ஏமாற வேண்டாம், எச்சரிக்கை!!!

12 thoughts on “கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”

 1. ஒளியின் தூதன் வேடமணிந்த இருளின் அதிபதியால் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஜனங்களிடையே தங்களை உயர்த்திக்காட்டி ஊழியத்தை வளர்க்க விரும்புகிறவர்களும் ஆண்டவரைப் பார்த்ததில்லை.”…..இதை தான் உண்மை என்று நம்பி ஏமாந்து போகிறார்கள் நம் நல்லவர்கள்!!!
  கர்த்தர் தாமே இவர்கள் கண்களை திறப்பாராக.. பதிவுக்கு மிக்க நன்றி பிரதர்…

 2. குருவே செய்யாத ஒன்றை அவரைப் பின்பற்றும் சீஷர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் இன்று ஏன் செய்கிறார்கள்?

  Thats a valid question bro. !

 3. மனதில் எழுந்த அனேக கேள்விகளுக்கு தங்கள் கட்டுரை பதில் தந்தது
  நரகதில் போய் ஆத்துமாக்களை பார்த்ததாக இவர்கள் சொல்கிறார்கள்
  உயிர்த்தெழுதல் நியாயதீர்ப்பு இவற்றிற்கு முன்னமே நரகத்தில் ஆத்துமாக்கள் தள்ளபடுவார்களா
  1 கொரி15:32 ல் பவுல் சொல்வதை கவனியுங்கள் தங்கள் கருத்தை எதிர்பர்க்கிறேன்
  கு.பிரகலாதன்
  கிளினொச்சி
  இலங்கை

  1. நரகம் வேறு, பாதாளம் வேறு…..
   இரட்சிப்படையாத ஆத்துமாக்கள் பாதாளம் செல்லும்…. இயேசு கூறிய ஐசுவரியவான், லாசரு உண்மை சம்பவம் மூலம் ஆத்துமாக்கள் பாதாளம் செல்லும் என்பதே உண்மையாகும். இயேசு இல்லாத காரியத்தை கூற மாட்டார். ஆகவே பாதாளம் என்பது நிகழ்காலம் ஆகும். ஆனால் பாதாளத்தில் பூவுலகிற்கு சென்று உண்மையை சொல்ல வேண்டும் என்ற உணர்வு காணப்படும். எதிர்காலத்தில் நியாயத்தீர்ப்பு நடைபெற்ற பின்னே தான் அந்த ஆத்துமாக்கள் நரகத்தில் தள்ளப்படும். ஆகவே நரகம் என்பது ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின் நடைபெறும் காரியம் ஆகும். நியாயத்தீர்ப்பு செய்தல் அவர் நீதியுள்ள தேவன் என்பதை காட்டுகின்றது. வெளிப்படுத்தல் 20:7 ற்கு பின் வாசித்தால் நகரம் எதிர்காலத்தில் தான் உள்ளது என்பதை அறியலாம். (இதிலிருந்து நகரத்திற்கு சென்று வந்தேன் என்று கூறும் ஊழியர்களின் நிலையை அறியலாம்).

 4. k.pirahalathan :உயிர்த்தெழுதல் நியாயதீர்ப்பு இவற்றிற்கு முன்னமே நரகத்தில் ஆத்துமாக்கள் தள்ளபடுவார்களா

  இறந்த பின் இரட்சிக்கப்பட்ட மனிதனின் ஆவியும், ஆத்துமாவும் பரலோகம் செல்லும். இரட்சிக்கப்படாத மனிதனின் ஆவியும், ஆத்துமாவும், இப்போதைக்கு பிசாசின் கையில் இருக்கும் நரகத்திற்குப் போகும்.

  உயிர்த்தெழுதல் நடைபெற்ற பின், சரீரத்தோடு(ஆவி,ஆத்துமா, சரீரம்) இதே நிலை தொடரும். பிசாசும் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டிருப்பான்.

 5. Golda :

  k.pirahalathan :உயிர்த்தெழுதல் நியாயதீர்ப்பு இவற்றிற்கு முன்னமே நரகத்தில் ஆத்துமாக்கள் தள்ளபடுவார்களா

  இரட்சிக்கப்படாத மனிதனின் ஆவியும், ஆத்துமாவும், இப்போதைக்கு பிசாசின் கையில் இருக்கும் நரகத்திற்குப் போகும்.

  வேதாகமத்தில் எந்த அதிகரத்தில் என்று தயவு செய்து கூற முடியுமா

 6. சில கிறிஸ்தவர்கள் நரகம் பிசாசின் கையில் இருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் நரகமானது பிசாசினுடைய கையில் இல்லை. நரகம் உண்டாக்கப்பட்டதே பிசாசிற்காக தான்…. சிலர் நரகத்தில் பிசாசு மனிதனை வேதனைப்படுத்துவது போல் காட்சிகளை தர முற்படுகின்றனர். இதுவும் பொய்யான காரியம் தான். லாசரு பாதாளத்திலிருக்கும் போது அவனுக்கு பிசாசினால் எந்த துன்புறுத்தலும் ஏற்படவில்லை. ஆவனுக்கு ஏற்பட்டது அக்கினியினால் துன்பமும், நீர் தாகமும் மட்டுமே. பிசாசிற்கு தெரியும் தனக்குள்ள காலம் கொஞ்சமே… அதற்குப்பின் நரகத்தில் தள்ளப்படுவேன் என… ஆதலால் தான் வேதாகமம் சொல்கின்றது பிசாசு தனக்கு கொஞ்ச காலம் உண்டென அறிந்து எவனை வஞ்சிக்கலாம் என அலைகின்றது.

 7. ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5 )

  Well done,I will pray 4 U, please pray for me

 8. // சுருக்கமாகச் சொன்னால் ஊழியக்காரன் என்பவன் தன்னை மறைத்துக் கொண்டு கர்த்தரை முன்னிறுத்தி ஜனங்களை அவரண்டைக்கு நடத்துகிறவன். //

  பொன்னான வரிகள்..நன்றி..!

  Joshua:-
  // லாசரு பாதாளத்திலிருக்கும் போது அவனுக்கு பிசாசினால் எந்த துன்புறுத்தலும் ஏற்படவில்லை. ஆவனுக்கு ஏற்பட்டது அக்கினியினால் துன்பமும், நீர் தாகமும் மட்டுமே. //

  இந்த வரிகளில் ஏதோ கருத்து பிழை இருக்கிறதே…லாசரு அல்ல,ஐசுவரியவான் என்று இருக்கவேண்டும்.மேலும் இது இனிவர இருக்கும் காலத்தின் ஒரு முன்னோட்டமே தவிர உண்மை நிகழ்வல்ல.இதை ஒரு உவமையாகவே ஆண்டவர் சொல்லுகிறார்.எனவே நரகம் என்பது இப்போதைக்கு இல்லை என்று நிதானிக்கிறோம்.

  எனவே // சங்கீதம் 115:17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். ” // என்று வேதம் சொல்லுகிறது.

 9. இவர்களோ தேவனோடும் தூதர்களோடும் உலவியதாகக் கதைகளெல்லாம் சொல்லிவிட்டு நிகழ்ச்சிகளின் முடிவில் “தயவுசெய்து எங்கள்
  ஊழியத்தைத் தாங்குங்கள்! நீங்கள் பணம் அனுப்பாவிட்டால் எங்களால் ஊழியத்தைத் தொடரவே முடியாது” என்று நம்மிடமே கையேந்துகிறார்கள். சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரைக் கண்டவன் செய்யும் செயலா இது என்பதை ஞானமுள்ளவர்களே சிந்தியுங்கள்!

  சிந்திக்கிறேன்

  சிந்தியுங்கள்!!

Leave a Reply