ஏ மரமே கனிகொடு!

கனி என்பது ஒரு மரம் நல்ல மரமா, கெட்ட மரமா என்பதைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. அதுபோலவே கிரியையும் ஒரு மனிதன் பாவியா, நீதிமானா என்பதைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. ஒரு மனிதன் உள்ளே மாறாமல் வெளியே நீதியின் கிரியைகளை காட்டி மாய்மாலம் செய்ய முடியும். ஆனால் தேவன் அதனை விரும்பவில்லை. உள்ளார்ந்த மாற்றத்தின் மூலம் ஏற்படும் இயல்பான கனி கொடுத்தலையே அவர் எதிர்பார்க்கிறார்.

உள்ளார்ந்த மாற்றம் மனிதனின் சுய முயற்சியால் ஒருபோதும் வராது. லூக்கா 13:6-9 வசனங்களில் கர்த்தர் சொல்லும் உவமையில் “ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்” என்று சொல்லி மரத்துக்காக பரிந்து பேசும் அந்த தோட்டக்காரன், அடுத்த ஒரு வருஷமும் தினமும் அந்த மரத்திடம் போய் நின்று “ஏய் புத்தி கெட்ட மரமே கனிகொடு!, நன்றி கெட்ட மரமே கனிகொடு!” என்று சொல்லி அதை திட்டிக்கொண்டே இருக்கவில்லை. ‘கனிகொடாவிட்டால் உன்னை வெட்டிப்போடுவேன்” என்று சொல்லி அதை பயமுறுத்தவும் இல்லை. ஒருவேளை மரத்துக்கு பேசும் சக்தி இருந்தால் “வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்?” என்று நம்மில் பல விசுவாசிகளைப்போல தோட்டக்காரனிடம் திருப்பிக் கேட்டு கதறியழுது விடும்.

அந்த தோட்டக்காரன் என்ன செய்தான் பாருங்கள். அந்த மரத்தை அவன் ஒன்றுமே செய்யவில்லை, மாறாக அதைச் சுற்றி இருந்த நிலத்தை கொத்தி பண்படுத்தினான், மரத்துக்கு நல்ல உரம் இட்டான். அதை கண்ணும் கருத்துமாக பராமரித்தான். புத்தியுள்ள தோட்டக்காரன் செய்யும் வேலை அதுதான்.

விசுவாசிகளின் மனமாகிய நிலம் பண்படுத்தப்பட வேண்டும், நல்ல உரமான வேத வார்த்தையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். பின்னர் கனிகொடுத்தல் தானாய் வரும்!

Leave a Reply