வேதாகமத்தில் என்னை மிகவும் சிந்திக்க வைக்கும் வசனங்களில் ஒன்று “அவர் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி…(வெளி 13:8)” என்பதுதான். இந்த வசனத்தை விளங்கிக் கொண்டால் நாம் சத்தியத்தையே புதிய கோணத்தில் விளங்கிக்கொள்ளலாம். ஆதாமின் மீறுதலுக்குப் பின்பு வேறு வழியில்லாமல் Plan B-ஆக அவர் மீட்பின் திட்டத்தை வடிவமைக்கவில்லை என்பது இந்த வசனத்தின்மூலம் தெளிவாகத் தெரிகிறது.
இந்த வசனத்தை எப்படிப் புரிந்துகொள்வது? “மனிதனைப் படைப்போம், அவன் விழுந்துபோவான், பின்னர் அவனை மீட்க குமாரனை அனுப்புவோம்” என்று ஏற்கனவே முன்யோசனையாக அவர் மனதில் இருந்த திட்டத்தைத்தான் அவர் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்பதாகப் புரிந்துகொள்வதா என்றால் வேதம் அப்படிச் சொல்லவில்லை. அதை தேவனுடைய மனதில் இருந்த திட்டம் என்பதாகச் சொல்லாமல் அதை நடந்து முடிந்த ஒரு நிகழ்வாகத்தான் சொல்கிறது. அப்படியானால் உலகம் தோன்றியபொழுதே குமாரன் தன்னை தியாகபலியாக ஒப்புக்கொடுத்த சம்பவம் ஆவிக்குரிய பரிமாணத்தில் நடந்து நிறைவேறிவிட்டது. பின்னர் கிபி முதல் நூற்றாண்டில் அது பெளதிக உலகத்தில் வரலாற்று நிகழ்வாக பிரதிபலித்தது என்றுதான் கொள்ள வேண்டும்.
இந்த வெளிப்பாடு தேவன் எப்படி செயல்படுகிறார் என்கிற புதிய புரிதலை எனக்குக் கொடுத்தது. தேவன் காலத்துக்கு அப்பாற்பட்டவர், அவர் வாக்குத்தத்தம் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றுவதில்லை. ஆவிக்குரிய உலகில் அதை நிறைவேற்றிவிட்டுத்தான் தாம் நிறைவேற்றியதை வாக்குத்தத்தமாக நமக்குக் கொடுக்கிறார். இதைப் புரிந்துகொண்டால் அசைக்க முடியாத விசுவாசமும், தேவனுடைய காலத்தோடு இசைந்து செல்லும் மனப்பக்குவமும் நமக்கு வந்துவிடும். பொதுவாக நம்மால் தேவனுடைய சத்தியத்தோடு இசைய முடியும், அதை நிறைவேற்றும் விதத்துடனும் இசைய முடியும். ஆனால் அதை நிறைவேற்றும் காலத்துடன் இசைவது எளிதான விஷயமல்ல. ஆனால் அந்த முதிர்ச்சி கர்த்தராகிய இயேசுவுக்குள் இருந்தது.
தாம் சிலுவையில் மரித்து மீட்பின் திட்டத்தை நிறைவேற்றப்போவது ஏற்கனவே ஆவிக்குரிய பரிமாணத்தில் நடந்து முடிந்த நிகழ்வாக இருக்கிறபடியால் அதைத் தவிர வேறு எந்த விதத்திலும் தனக்கு மரணம் நிகழாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவேதான் கப்பலை உடைத்தெறியக்கூடிய கோரப் புயலின் நடுவிலும் அவரால் அதற்குள் நிம்மதியாக படுத்துத் தூங்க முடிந்தது. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்(லூக்கா 13:33) என்று ஏரோதுக்கே அவரால் சவால் விட முடிந்தது.
தேவன் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரானால் அதை அவர் ஏற்கனவே நிறைவேற்றிவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மாம்சத்தில் இருக்கும் நாம்தான் காலத்தின் ஊடாக 1 > 2 > 3 > 4 என்ற ஒருவழிப்பாதையில் பயணிக்க வேண்டும். காலத்தைக் கடந்த தேவனால் 4 > 3 > 2 > 1 எனவும் பயணிக்க முடியும், 3 > 1 > 4 > 2 எனவும் பயணிக்க முடியும். இப்பொழுது உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நீங்களே விழுந்துபோய்க் கிடந்தாலும் அவர் உங்களுக்குச் சொன்னது எதுவோ அது அதற்குரிய காலத்தில் நிறைவேறப்போவது சர்வ நிச்சயம். ஏனென்றால் அது ஏற்கனவே ஆவிக்குரிய பரிமாணத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. தான் ஏற்கனவே செய்து முடித்த வேலையைத்தான் நமக்கு அவர் வாக்குத்தத்தமாகக் கொடுத்திருக்கிறார்.
நடக்க வேண்டியதற்கு மாறாக எதுவும் நடக்காது, அப்படி மாறாக நடப்பது எதுவும் நிலைக்காது எனவே பதட்டமில்லாமல் தொடர்ந்து பயணிக்கலாம் என்ற மனப்பான்மை உங்களுக்குள் உருவாகிவிடும். அதன் விளைவாக நீங்கள் தானாகவே ஒரு இளைப்பாறுதல் நிலைக்குள் வந்துவிடுவீர்கள். அந்த இளைப்பாறுதல் உலகத்தாருக்கு ஏன் எட்டாக் கனியாக இருக்கிறதென்றால் “காலம்” என்பது அவர்களுக்கு ஒரு புரியாத புதிர். மரணம் என்பது தவிர்க்கமுடியாத எதிரி. இரண்டைக் குறித்த நிச்சயமும் அவர்களுக்கு இல்லாமல் இருப்பதால் தங்கள் காலத்துக்கு முன்பாக முடிக்க வேண்டியவைகளை முடித்து விட வேண்டும், சாதிக்க வேண்டியவைகளை சாதித்துவிட வேண்டும் என்று ஓடுகிறார்கள். இதன் விளைவாகத்தான் சகல பதட்டங்களும், பயங்களும், கோபதாபங்களும் அதன் விளைவாக வியாதிகளும், பெலவீனங்களும், துரித மரணமும் அவர்களுக்கு நேரிடுகின்றன.
அவர்களை பயம் இயக்குகிறது, நம்மை விசுவாசம் இயக்குகிறது. நீங்கள் இளைப்பாறுதலில் இருப்பதுதான் விசுவாசத்தில் வாழ்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அந்த இளைப்பாறுதல்தான் உங்களை ஆரோக்கியமாகவும், நீ…ண்ட ஆயுளோடும் வாழ வைக்கும் அருமருந்தாகும்.
விஜய்குமார் ஜெயராஜ்
www.brovijay.com