’எழுப்புதல்’ இன்று கிறிஸ்தவ உலகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. முன் எப்போதயும் விட சமீப காலங்களில் இன்னும் அதிகமாகப் எழுப்புதலைப் பற்றிப் பேசப்படுவதைக் கேட்கிறோம். எழுப்புதல் கூட்டங்கள், எழுப்புதல் செய்திகள், எழுப்புதல் பாடல்கள், எழுப்புதல் நடனம் என்று பயன்படுத்துகிற எல்லா சொற்களுக்கும் முன்பாக எழுப்புதல் என்ற வார்த்தையை இனிஷியல் போல பயன்படுத்துவது இப்போது பேஷனாகி விட்டது.
எழுப்புதல் அல்லது உயிர்மீட்சி என்றால் என்ன?
எழுப்புதல் என்பது முழுக்க முழுக்க பரிசுத்த ஆவியானவரால் நிகழும் ஒரு காரியமாகும். பரிசுத்த ஆவியானவரையும் எழுப்புதலையும் பிரிக்க முடியாது. ஒரு எழுப்புதல் நிகழும் விதத்தை அறிய வேண்டுமென்றால் பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் 37ஆம் அதிகாரத்தைப் புரட்டிப் பாருங்கள். உலர்ந்த எலும்புகள் உயிரடைவதே எழுப்புதல். அப்படி உயிரடைந்த எலும்புகள் என்ன செய்வார்கள் என்பது அந்த அத்தியாயத்தில் இல்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துப் பாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட சபை மீதோ, அல்லது பல சபைகள் மீதோ பரிசுத்த ஆவியானவர் பலமாக இறங்கி அவர்களை உலுக்கி, உயிரூட்டி தங்கள் ஆதிமகிமையில் மீண்டும் கொண்டு வந்து அவர்களை நிறுத்துவதுதான் எழுப்புதல். நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டியது எழுப்புதல் பிரதானமாக பாவிகளுக்கல்ல, இரட்சிக்கப்பட்டோருக்கே என்ற உண்மையைத்தான். ஆனால் எழுப்புதல் அத்தோடு முற்றுப் பெறுவதில்லை. அவ்வாறு தேவனால் எழுப்பப்பட்ட சபைகள் வெளி உலகத்தைப் பாதிக்கத் தொடங்கும். உயிர்மீட்சி பெற்ற சபை காந்தம் போல உலக மக்களை தன் வசம் இழுக்க ஆரம்பிக்கும். பரலோகத்திலிருந்து சபைப் பீடத்தில் விழுந்த அக்கினி ஊரின் தெருக்களில் பற்றி எரியத் துவங்கும். பட்டி தொட்டியெல்லாம் பற்றிப்பரவும். பாவத்தோடு ஒட்டி உறவாடி வந்த மக்களோடு மகாப்பரிசுத்த தேவன் நேரடியாக இடைப்படுவார். எங்கும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வுகள் நிகழும். ஒரு ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சபையில் தேவன் எழுப்புதலை ஊற்றியிருப்பாரானால் அந்த ஊர் முன்னிருந்தது போல இருக்காது. இருக்கவும் முடியாது.
பிரியமானவர்களே! எழுப்புதலோடு சம்பந்தப்பட்ட அதிமுக்கியமான காரியங்களை இனிமேல்தான் சொல்லப்போகிறேன் கவனமாகக் கேளுங்கள். எழுப்புதல் காலங்களில் இரண்டு விதமான சத்தங்களை எங்கும் அதிகமாகக் கேட்கலாம். ஒன்று மகிழ்ச்சியான ஆராதனையின் குரல் மற்றொன்று மனம் குத்தப்பட்டு மனம் திரும்புகிறவர்களின் அலறுதல். இந்த இரண்டு சத்தங்களும் என்று அடங்குகிறதோ அன்று எழுப்புதல் அக்கினியும் அவிந்துவிட்டது என்று அர்த்தம். குருடர் பார்ப்பதும் செவிடர் கேட்பதும் சப்பாணிகள் நடப்பதும் ஒருபக்கம் இருந்தாலும் அதைவிட மகா முக்கியமாக உலக மக்கள் ஏன் பல கிறிஸ்தவர்களும் சபைகளும் கூட தாங்கள் இடைவிடாமல் ஆராதிக்கும் மேமன் அல்லது பணம் என்கிற கடவுளிடம் இருந்து விடுதலை பெறுவார்கள். இதை அப்போஸ்தலர் 4ஆம் அதிகாரம் 32 ஆம் வசனத்தில் பார்க்கலாம். அது மாத்திரமல்ல புகை, மது விபச்சாரம் போன்ற அடிமைத்தன நுகங்கள் உடைக்கப்படும். சபைகளுக்குள்ளே சகோதர சிநேகம் பொங்கி வழியும். உடைந்த குடும்பங்கள் ஒன்றிணையும். ஏழைகள் மீதும் திக்கற்றவர்கள் மீதும் சபைக்கு கரிசனை பெருகும். தரித்திரருக்கு உதவி செய்வது சபையின் முக்கியக் கடமைகளுள் ஒன்றாக எண்ணப்படும். கலாத்தியர் 2:10 இல் இதைக் காணலாம். சகோதரி ஹெய்தி பேகர் தனது செய்தி ஒன்றில் கூறிய வாசகத்தை என்னால் உயிருள்ளவரை மறக்க முடியாது. அவர்கள் சொன்னது “ எழுப்புதலுக்கு ஒரு முகம் இருக்கிறது அது எப்பொழுதும் தரித்திரரையே நோக்கிக் கொண்டிருக்கிறது” என்பதுதான். மேலும் உயிர்மீட்சி அடைந்த ஊரில் மதுபானக்கடைகள் வருமானமின்றி நிரந்தரமாக மூடப்படும். இரவும் பகலும் ஆராதிக்கக் கூட்டம் அலைமோதுவதால் தேவாலயங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். மொத்ததில் எழுப்புதல் என்பது “உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக” என்ற ஜெபத்தின் நிறைவேறுதலாக இருக்கும்.
எழுப்புதலையும் மனந்திரும்புதலையும் எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியே எழுப்புதலையும் உபத்திரவத்தையும் பிரிக்க முடியாது. ஆம், எழுப்புதல் காலங்களில் உயிர்மீட்சி பெற்ற சபைத்தலைவர்களும் விசுவாசிகளும் அந்த உயிர்மீட்சியைப் பெற்றுக்கொள்ளாத அல்லது பெற்றுக்கொள்ள விரும்பாத சபைத்தலைவர்களாலும் விசுவாசிகளாலும் சொல்லொண்ணா உபத்திரவங்களுக்கு ஆளாவார்கள் என்பது வேதமும் வரலாறும் நமக்குத் தெரிவிக்கும் உண்மை. மட்டுமல்லாது உலகத்தார் தங்கள் வாழ்வாதாரத்திலும் வருமானத்திலும் மண் விழுவதால் எழுப்புதலுக்குக் காரணமான கூட்டத்தார் மீது கொலை வெறியோடு பாய்வார்கள் என்பதும் வேதமும் வரலாறும் கூறும் உண்மை. முதலாம் நூற்றாண்டு எழுப்புதலில் ஆசியாவில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்துக்குக் காரணம் அங்கு ஏற்பட்ட உயிர்மீட்சியானது அங்கு இருந்த “டயானா” எனப்பட்ட அவர்களுடைய தெய்வத்தின் கோவிலையும் அந்தக் கோவிலைச் சுற்றி அமோகமாக நடந்து கொண்டிருந்த சிலை வியாபாரத்தையும் பாதித்ததுதான். அந்த சம்பவம் அப்போஸ்தலர் 19:23-41 இல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எழுப்புதலடைந்த சபைக்கு மற்ற கிறிஸ்தவர்களாலேயும் பிற மதத்தாராலும் தாக்கப்படும் அபாயம் எப்பொழுதும் உள்ளது. அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையால் அரசாங்கமும் இதில் தலையிட்டு சபையை நசுக்க முயலவும் வாய்ப்புகள் பல உள்ளன. உயிர்மீட்சி பெற்ற சபை செத்த சபைகளால் “துர் உபதேசக்காரர்கள்” எனவும் உலகத்தாரால் “மனநோயாளிகள்” என்றும் அரசாங்கத்தால் “தேசவிரோத சக்திகள்” என்றும் அழைக்கப்படுவது வரலாறு.
சபை வரலாற்றில் எழுப்புதல்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு சபையானது தனது இரண்டாயிர வருட நீண்ட பயணத்தில் பல்வேறு எழுப்புதல்களைக் கண்டிருக்கிறது. நான் அதிகமான வரலாற்றுச் சான்றுகளுக்குள்ளும் புள்ளி விவரங்களுக்குள்ளும் போக விரும்பவில்லை. அப்படிச் செய்தால் இது ஒரு வேதாகமக் கல்லூரியின் பாடம் மாதிரி ஆகிவிடும். இந்தத் தொடரின் நோக்கம் உங்களை ஒரு பரீட்சைக்கு ஆயத்தப் படுத்துவதல்ல. ஒரு எழுப்புதலுக்கு ஆயத்தப் படுத்துவதுதான். இருந்தாலும் சில வரலாற்றுக் குறிப்புகளை மேலோட்டமாகப் பார்த்துச் செல்வது நமக்கு நல்லது என நினைக்கிறேன்.
முதலாம் நூற்றாண்டில் ஆசியாவையே குலுக்கிய ஆதித் திருச்சபையின் எழுப்புதல் எழுப்புதல்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி எனக் கொள்ளலாம். புதிய ஏற்பாட்டில் உள்ள அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதிலும் இதை நீங்கள் விளக்கமாக வாசிக்கலாம். கி.பி நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அரசாங்க மதமாக அறிவிக்கப்படும் வரைக்கும் நிலவிய உபத்திரவத்தினால் எந்த கிறிஸ்தவ இலக்கியத்தையும் பாதுகாக்க முடியாத சூழல் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதனாலெயே முதல் நான்கு நூற்றாண்டுகளில் இருந்த சபைகள் பற்றியும் சபைத்தலைவர்கள் பற்றியும் நமக்கு அதிகமான சான்றுகள் இல்லை. ஆனாலும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜஸ்டின் மார்ட்டைர் (கி.பி 100-165) என்பவர் எழுதிய “Dialogue with Trypho” என்ற நூலில் அந்த காலத்திலேயும் கூட ஆவியின் அபிஷெகமும் வரங்களும் கனிகளும் நிறைந்த விசுவாசிகள் அநேகர் இருந்ததாகச் சொல்கிறார்.
ஆனால் அந்த அனல் சபைக்குள்ளே பிற்காலங்களிலே ரோம ஆதிக்கம் வந்த பின்பு படிப்படியாக மங்கி பின்னர் ஒரேயடியாக இருண்டு விட்டது. இந்த சூழலிலும் கூட தேவன் புனித அசிசியின் பிரான்சிஸ் போன்ற வல்லமையான தேவ மனிதர்களை எழுப்பி சாதாரண மக்களையும் ஏன் இஸ்லாமிய சுல்தான்களையும் கூட சந்தித்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி 15 ஆம் நூற்றாண்டுகளில் திருச்சபையில் காணப்பட்ட ஒழுக்கக்கேடுகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிரலாமோ சவோனொரோலோ இவர் தனது பிரசங்களில் “ ஆதித்திருச்சபையில் பாத்திரங்கள் மரத்தாலானவையாக இருந்தன ஆனால் சபை ஊழியர்களோ சொக்கத் தங்கங்களாக ஜொலித்தார்கள். ஆனால் இக்காலத் திருச்சபைகளிலோ பாத்திரங்கள் பொன்னாக மின்னுகின்றன ஊழியர்களோ மரக்கட்டை போல உணர்வற்று இருக்கிறார்கள்” என்று கூறுவாராம். இப்படிப்பட்ட பிரசங்கங்களை அந்த கால கட்டத்தில் செய்வது அரிதானது. ஆபத்தானதும் கூட. இறுதியில் சவோனொரோலோ உயிரோடு எரிக்கப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார் என்கிறது சரித்திரம்.
இப்படி இருண்டு கிடந்த சபைக்குள் தீப்பந்தமாக எழும்பி இருளை விரட்டியவர்தான் மார்ட்டின் லூதர் (கி.பி 1483-1546) . பதினாறாம் நூற்றாண்டில் இவரைக்கொண்டு தேவன் ஒரு யுகப்புரட்சியே நடத்தினார் என்றால் மிகையாகாது. இவரும் இவருக்குப்பின் வந்த ஸ்விங்லி மற்றும் ஜான் கால்வின் போன்றோர்தான் இன்று இருக்கும் புராட்டஸ்டாண்டு சபைகள் உருவாகக் காரணமானவர்கள். எனவே திருச்சபை வரலாற்றில் கி.பி பதினாறாம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையான நூற்றாண்டாகும். அடுத்ததாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 17ஆம் நூற்றாண்டிலும் பலமடைந்த “ப்யூரிட்டன்” இயக்கத்தை பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த ப்யூரிட்டன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனி மனிதனுடைய பரிசுத்தத்தை அதிகமாக வலியுறுத்தினார்கள். இவர்கள் அடிக்கடி நரகத்தைப் பற்றிப் பற்றி பிரசங்கித்து ஜனங்களை எச்சரிப்பார்கள். நாம் அனைவருக்கும் தெரிந்த “மோட்சப் பிரயாணம்” நூலை எழுதிய ஜான் பன்யன் இந்த ப்யூரிட்டன் இயக்கத்தைச் சார்ந்தவர்தான்.
1727 ஆம் ஆண்டு ஜெர்மனியில் வாழ்ந்த மொரேவியன் மக்களிடையே வெடித்துக் கிளம்பிய எழுப்புதல் வரலாற்றில் பதிவான ஒரு குறிப்பிடத்தக்க எழுப்புதலாகும். கிறிஸ்துவின் சபையானது இரண்டாகப் பிரிந்து ஒருவரையொருவர் குற்றம்சாட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜின்செண்டார்ஃப் என்ற தேவமனிதன் எழும்பி அவர்களிடையே சமாதானம் செய்து வைத்து அவர்களை ஒன்றிணைத்து ஜெபித்த வேளையிலே ஆவியானவர் அளவில்லாமல் அவர்கள் மத்தியில் ஊற்றப்பட்டார். அன்று ஊற்றப்பட்ட எழுப்புதலானது அந்த நூற்றாண்டின் மாபெரும் மிஷனரிகளை உலகுக்கு உருவாக்கிக் கொடுத்தது. இப்போது நான் இந்த நிகழ்வுகளை மேலோட்டமாக எழுதிக் கொண்டு போனாலும் வருகிற தொடர்களில் ஒவ்வொரு முக்கியமான எழுப்புதல்களையும் பற்றி விலாவாரியாகப் பார்க்கப் போகிறோம். இந்த நூற்றாண்டில்தான் ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, ஜோனத்தான் எட்வர்ட்ஸ், ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் போன்ற மாபெரும் தேவமனிதர்கள் கர்த்தரால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் ஊழியம் செய்த இந்த கால கட்டத்தைத்தான் The first great awakeing என்று அழைப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கை மற்றும் இறைப்பணி குறித்து பின்வரும் தொடர்களில் விரிவாகப் பார்க்கலாம். இந்தத் தொடரின் நோக்கம் எது எழுப்புதல் யார் எழுப்புதல் வீரன் என்ற சரியான புரிதலை விசுவாசிகளுக்கு தருவதாகும். இதன் மூலம் இன்றைய கள்ளப் பிரசங்கிகள் தங்கள் மாம்சத்தில் உருவாக்கும் போலி எழுப்புதல் என்கிற அந்நிய அக்கினிக்குத் தப்பலாம்.
19 ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற எழுப்புதல்களை The second great awakeing என்பார்கள். இதில் தேவனால் பயன்படுத்தப் பட்ட பாத்திரங்களுள் முக்கியமானவர் சார்லஸ் ஃபின்னி என்பவராவார். இந்த 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் டி.எல்.மூடி, வில்லியம் பூத், ஹட்சன் டெய்லர், ஜார்ஜ் முல்லர் போன்ற மகத்தான தேவ மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் வேல்ஸ் தேசத்தில் உருவான எழுப்புதல் பொன் எழுத்துக்களால் சபை சரித்திரத்தில் பொரிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்த எழுப்புதலில் தேவன் பயன்படுத்திய பாத்திரம் இவான் ராபர்ட்ஸ் என்ற இளைஞன். இனி வருகிற தொடர்களில் ஒவ்வொரு எழுப்புதல்கள் குறித்தும் அது உருவாகக் காரணமாயிருந்த சூழ்நிலைகள் யாவை?, எழுப்புதலில் தேவன் பயன்படுத்திய மனிதர்கள் யார்? அதற்காக அவர்கள் செலுத்திய விலைக்கிரயம் என்ன? என்பதை விலாவாரியாகப் பார்போம்.
இன்று எழுப்புதல் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களைப் பார்க்கும்போது;
”அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க, சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!”
என்ற ஒரு பாரதிதாசனின் தமிழ் கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு நாட்டுக்கு அரசியல் சுதந்திரம் என்பதே அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அதற்காக எத்தனையோ தலைமுறைகளாக ஜீவமரணப் போராட்டம் நடத்தி இரத்தம் சிந்தி பல உயிர்களைத் தியாகம் செய்து அடைய வேண்டியதாய் இருக்கிறது.
”தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ”
என்று நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்துக்குக்காகக் கொடுத்த விலைக்கிரயத்தை நினைவுகூர்ந்து பாரதியார் பாடுகிறார். நீங்கள் பள்ளியில் படித்த இந்தக் கவிதைகளை நான் ஏன் இங்கு நினைவுபடுத்துகிறேன் என்றால் ஒரு நாட்டின் அரசியல் விடுதலைக்கே இவ்வளவு விலைக்கிரயம் செலுத்த வேண்டுமானால். உன்னதமான தேவன் அருளும் ஆவிக்குரிய விடுதலையான எழுப்புதல் என்பது எவ்வளவு மகிமையானது, விலையேறப்பெற்றது என்பதை நாம் உணரவேண்டும். இன்று எழுப்புதல் கடைச்சரக்கு போல சிலரால் கூறுகட்டி விற்கப் படுகிறது.
இந்த மகிமையான எழுப்புதலுக்கென்று விலை ஒன்று உண்டு அந்த விலையை எழுப்புதலை வாஞ்சிக்கும் ஒவ்வொரு ஊழியரும், விசுவாசியும் சபையும் செலுத்த வேண்டும் என்பதை மறக்கக் கூடாது. அந்த விலை மெய்யான மனந்திரும்புதல் மற்றும் ஒன்றுபட்ட ஜெபமென்பதாகும். அதற்கும் மேலாக எழுப்புதல் என்பது முழுக்க முழுக்க தேவ சித்தம் சம்பந்தப்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். அதை ஊற்ற வேண்டிய நேரத்தில் ஊற்ற வேண்டிய இடத்தில் ஊற்றுவது அவரது உரிமை. அதை இறைஞ்சி மன்றாடுவது மாத்திரமே நம் கடமையாகும். நாம் தேவனை நமது கிறிஸ்தவக் கலாச்சாரத்துக்குள் இழுத்து உட்கார வைக்க முயல்கிறோம். தேவனோ நம்மை தமது வேதத்துக்குள் இழுத்து உட்கார வைக்க விரும்புகிறார். இந்த இருவருக்குமான போராட்டமே நாம் அடையவேண்டிய உன்னதமான கடைசிகால எழுப்புதலைத் தாமதப்படுத்துகிறது.
இந்தத் தொடரில் கடந்த காலத்தில் அருளப்பட்ட மாபெரும் எழுப்புதல்கள் தணிந்துபோன காரணங்களையும் எழுப்புதல் வீரர்கள் சிலரது தோல்விகளையும் கூட ஆராயப் போகிறோம். தேவமனிதர்களது வெற்றிகளிலிருந்து மாத்திரமல்ல தோல்விகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது அதனால்தான் வேதத்தில் தேவமனிதர்களது வெற்றியும் தோல்வியும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நமது நன்மைக்காக எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தொடரில் “போலி எழுப்புதல்கள்” குறித்து ஆராய்வோம்.
(தொடரும்…)
இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
This article is very good and inspiring. thanks for publishing.
ஆதித்திருச்சபையில் பாத்திரங்கள் மரத்தாலானவையாக இருந்தன ஆனால் சபை ஊழியர்களோ சொக்கத் தங்கங்களாக ஜொலித்தார்கள். ஆனால் இக்காலத் திருச்சபைகளிலோ பாத்திரங்கள் பொன்னாக மின்னுகின்றன ஊழியர்களோ மரக்கட்டை போல உணர்வற்று இருக்கிறார்கள்”
அருமையான வரிகள். உங்கள் படைப்புகள் அருமை. நாம் ஏன் நண்பர்களாகக் கூடாது?
அன்பு நண்பரே! தங்கள் அளித்த உற்சாகத்துக்கு மிக்க நன்றி.
Dear brother,
This message brought me tears in my eyes. Yes we need more and more revolutionary christ centered leaders to reach this pervert world .
“Every knee shall bow down and every tongue confess that JESUS is the only Lord saviour”