எல்-ரோயீ!

சகல துதிகளுக்கும் ஆராதனைகளுக்குமுரிய சேனைகளின் கர்த்தருக்கு சிறப்புபெயர்கள் பல உண்டு, அந்த சிறப்புப் பெயர்களுள் சிறப்பான ஒரு பெயர்தான் “எல்-ரோயீ”. “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று அதற்கு அர்த்தமாம். இந்த நாமத்தை சூட்டியவள் அவரது இரக்கத்துக்கு பாத்திரமானவள். தன் எஜமாட்டியால் ஆகாதவள் என்று தள்ளப்பட்ட ஆகார் எனும் எகிப்திய அடிமை!

எல்லோராலும் எள்ளப்பட்டு ஏதிலியாக தள்ளப்பட்டவளை எல்ஷடாயின் கரம் அணைத்தது!

அடிமையென்பதே தாழ்வு. அதிலும் தன் ஆண்டையால் துரத்தப்பட்ட அடிமைக்கு ஏது வாழ்வு? உயிரை மட்டும் சுமந்து வந்தவள் அதையும் இழக்கும் தருவாயில் எல்-ரோயீயின் வார்த்தையை சூருக்குப்போகிற வழியில் நீரூற்றண்டையில் கேட்டபின் புத்துயிர் பெறுகிறாள். சர்வ வல்லவரின் கட்டளைப்படியே சாராளிடம் திரும்பிப் போகிறாள். உலகோர் பார்வையில் அவள் இனியும் அடிமைதான் என்றாலும், வரலாறு சொல்கிறது சாராளைப் போலவே அவளும் கோடான கோடிகளுக்குத் தாய்!

பொதுவாக ஆண்டைகள்தான் தங்கள் அடிமைகளுக்குப் பெயரிடுவர். இங்கோ ஒரு ஒரு அடிமை சர்வலோக ஏக சக்ராதிபதிக்கு பெயரிடுகிறாள். அந்தப் பெயரை தானும் ஏற்றுக்கொண்டு அவர் அதை மகிழ்ச்சியுடன் தனது வேதத்தில் பதிவு செய்தும் வைத்திருக்கிறார். இந்த நாமத்தின் மூலம் சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் தனது ஆளுகையின் கீழ் இருக்கும் தனது பணிவிடக்காரராகிய சகல ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும், தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும்,முதலாளிகளுக்கும் பொட்டில் அறைந்தாற்போல சொல்லும் தகவல் என்னவென்றால்!

“நான் திக்கற்றவர்களின் தேவன்”

எளியவர்களையும், திக்கற்றவர்களையும் சுரண்டிக் கொழுக்கும் பெல்ஷாத்சார்களின் எண்ணச் சுவர்களில் தோன்றும் கையுறுப்பு அவர்களின் ஈரக்கொலை நடுங்கும்படி இந்த நாமத்தைத்தான் எழுதும் “எல்-ரோயீ”
மத்தேயு 25-ஐ வாசித்துப்பாருங்கள். அங்கே இறுதிநாளின் தீர்ப்பை செலுத்தப்போகிறவர் இந்த எளியோரின் தேவன்தான்! அங்கே எளியோர்க்கு இரங்கியோர் மீது இரக்கமுள்ள நியாயத்தீர்ப்பு எழுதப்படுகிறது. இரங்காதோரை இரக்கமின்றி இருள் கவ்விக் கொள்ளுகிறது! இங்கே கவனிக்கப்பட வேண்டியது மிகவும் சிறியவர்களாகிய இவர்களுக்கு என்பதல்ல, மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் “ஒருவனுக்கு” என்பதே!

பழைய ஏற்பாட்டு ஆகாரிலிருந்து, புதிய ஏற்பாட்டு ஒநேசிமு வரைக்கும் அவர் அடிமைகளுக்கு அநுகூலக் கர்த்தர்!
எகிப்திய காளவாயில் ஈசாக்கின் பிள்ளைகள் அடிமைகளாய் ஆளோட்டிகளின் நிமித்தம் இட்டக் அபயக் குரலைக்கேட்டு ஓரேப்பிலே பச்சைப் புதரொன்று பற்றி எரிந்தது!

எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் “பார்க்கவே பார்த்து”… பாருங்கள்…இங்கும் வந்திருப்பவர் அடிமைகளின் இரட்சகராம் அதே எல்-ரோயீ!

அவ்வளவுதான்…பிடித்தது பார்வோனுக்கு அனத்தம்… எகிப்திய ஆண்டையின் ஆட்டத்தை அடக்க பத்து வாதைகள் எனும் எறிகுண்டுகளைச் சுமந்தபடி கையில் பிரம்புடன் புறப்பட்டு வந்தான் பக்தனொருவன்…மோசே எனும் சரித்திர நாயகன்! ஆண்டவரின் பலத்த கரம் அடித்த அடியில் அடங்கியது வல்லரசு! அடிமைகளுக்காக பரலோகம் தொடுத்த அந்த பிரம்மாண்டப் போரைக் கண்டு அன்று பிரமிடுகளும் பிரமித்துப் போயிருக்கும்!

ஆக்கினையின் பிடியில் ஐசுவரியவானும், ஆபிரகாமின் மடியில் லாசருவும்! இது நமக்கு தெரிந்த கதைதானே! இக்கதை சொல்லும் பாடம் என்ன? ஒருநாள் தலையெழுத்துகள் தலைகீழாக திருப்பப்படும், இன்று லாசருக்களிடம் தனது மேஜைகளின் “துணிக்கையை” வீசுவோர், நாளை அதே லாசருவின் “நுனிக்கையில்” இருந்து சொட்டும் நீருக்காக ஏங்க வேண்டியிருக்கும்! அவர் அனைத்தையும் காண்கிற தேவன்! நீதியுள்ள நியாயாதிபதி!!

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற (நீதி 31: 8,9) என்பது இராஜாவாகிய லெமுவேலுக்கு அவன் தாய் உரைத்த வசனங்கள். கர்த்தரின் பிரமாணங்களை உணர்ந்தவள் அவள்! பேசமுடியாதோருக்காக பேசாதவனின் கரங்கள் செங்கோல் பிடிப்பதற்கே தகுதியற்றவை! ஊருக்கே உணவளிக்கும் உழவர்கள் வாழ வழியற்று விஷமருந்தி மடிவது கண்டும் மனம் பதறாத அதிபதிகள் அமர்ந்திருப்பது சிம்மாசனமல்ல, அது யாருக்கும் பயனற்ற ‘சும்மா’சனம்! அப்படிப்பட்ட அரசுகளின் சிரசுகள் தாங்கள் அணிந்திருக்கும் மணிமுடிகளை இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. வலியோரின் நன்மைக்காக எளியோர் சுரண்டப்படும்போது எளியோர் இடும் கூக்குரல் கேட்டு எல்-ரோயீ இறங்கி வரத்தான் செய்வார். அவர் களத்தில் இறங்கிய பின்னர் மலைகளே…குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே என ஓலமிட்டு ஓடி பயனில்லை!கார்ப்பரேட்டுகள் தங்கள் கரன்சிகளைக் கொட்டி கட்டித்தந்த கான்கிரீட் கோட்டைகள் அன்று யாரையும் பாதுகாக்காது!

இன்று வியாபாரத்திலும், அதிகாரத்திலும் கோலோச்சுபவர்கள் யூதர்கள்! இன்று வேண்டுமானால் அவர்கள் இறையாசியால் பில்லியன்களில் புரளலாம். ஆனால் அவர்களை தேவன் தெரிந்துகொண்ட விதம் கூறுகிறார் கேளுங்கள்!

கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.

உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.நான் உன் அருகே கடந்துபோகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன் (எசேக்கியேல் 16: 3-6)
மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் “கண்டு”, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் “பார்த்து” – அன்று எல்-ரோயீயின் இரக்கப் பார்வையில் சிக்கியது அந்த சின்னஞ்சிறு சிசு! அவர் அதை நோக்கி “பிழைத்திரு” என்று சொன்ன ஒரே வார்த்தை, இன்றுவரை யுகங்கள் பல சென்றும், பிரளயங்கள் பல கடந்தும் இன்னும் யூத இனத்தின் வித்தை ஜீவனோடு காத்துக் கொண்டிருக்கிறது!

எளியோரை வாட்டும் வலியோரை வதம் செய்ய ஒருபோதும் தயங்கியதில்லை தேவன்!

வலியோரிடம் லஞ்சம் பெற்று, எளியோரை குற்றவாளியாக்கும் நீதிபதிகள், கூலிக்காரரின் கூலியை வஞ்சிக்கும் முதலாளிகள், அதிகார பலம் காட்டி ஏழை நாபோத்துகளின் நிலங்களை அபகரித்த அரசியல் ஆகாப்புகள், கல்வியை வியாபாரமாக்கி ஏழைகளுக்கு அறிவைத் தர மறுக்கும் கல்விக் கொடையாளிகள், சாவுடன் போராடும் ஏழையின் உடலைக்கூட காசின்றி தொட மறுக்கும் மருத்துவர்கள், சபையிலிருக்கும் ஏழைகளை திரும்பிக்கூடப் பார்க்காத போதகர்கள், எளியவர்களிடம் வனவிலங்கு போல நடந்து கொள்ளும் காவல்துறையினர், ஏழைச் சிறுமிகளைக் கடத்தி விபச்சார இருளுக்குள் தள்ளும் மனிதப் பேய்கள், எளியோர் சுரண்டப்படுவதைக் கண்டும் காணாமலிருக்கும் அதிகாரிகள், இப்படி தனது கண்ணின் மணிகளை துணிகரமாக தொட்ட ஒவ்வொருவனுடனும் இறைமகனுக்கு தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்றிருக்கிறது!

இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்… குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2:10,12)

இப்படிப்பட்டவர்களுக்கு நேரிடப் போவதை வேதம் இரண்டே வார்த்தையில் இரத்தினச் சுருக்கமாக முடித்து விட்டது!
“உங்களுக்கு ஐயோ!”

சூளை ஏழு மடங்கு சூடாக்கப்படுவதை அறியாமல் தேவன் சும்மா இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார்களே!
ஆனால்…

இன்றும் சூர் வனாந்திரங்களில் சுற்றித் திரிகிற ஆகார்களை அவரது கண்கள் காணவே காணுகிறது! அவர்களை ஆதரிக்க அவரது கரம் தயங்குவதே இல்லை…

அவர்தான் இயேசு!

ஒருபோதும் மாறாத தேவன் அவர், ஒருவனையும் தள்ளாத அன்பர் அவர், நிழல்போல கூட வரும் நண்பர் அவர், பரலோகத் தந்தை அவர், பறந்து காக்கும் பறவை அவர், இறந்தாலும் உயிர்ப்பிக்கும் மீட்பர் அவர்! – நாம் மறந்தாலும் பின் தொடரும் நேசர் அவர், இரக்கத்தின் சிகரம் அவர், மனதுருக்கத்தின் தேவன் அவர்!

“எல்-ரோயீ”. “நீர் என்னைக் காண்கிற தேவன்”

Written By Bro.Vijay

Leave a Reply