என் பெயர் விசுவாசி!! (பாகம்-1)

இவை என்னுடைய தியானத்தில் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்விகள், எனது ஆவிக்குரிய வளர்ச்சியின் மகா அவசரத் தேவையை உணர்த்தியது. உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்!! விசுவாசிகள் என்றழைக்கப்படும் நம்மில் பலருக்கு இது அதிர்ச்சியாயிருக்கலாம். இந்த அதிர்ச்சியை இன்று அடைவீர்களானால் நியாயத்தீர்ப்புநாளில் பலர் அடையப்போகும் ஒரு மாபெரும் பேரதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவீர்கள். கர்த்தர் நம் கண்களை சத்தியத்துக்குத் திறப்பாராக.

  • என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று இயேசு சொன்னார் (யோவா 7:38) ஜீவதண்ணீர் என்பது வற்றாமல் சுரக்கக்கூடியது, ஞாயிற்றுக்கிழமை மட்டும் புரண்டோடுவது அல்ல. 1பேதுரு 1:8 சொல்லும் “அவரிடத்தில் விசுவாசம் வைத்ததினால் உண்டாகும் சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷம்” நமக்குள் இருக்கிறதா? நம் உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீர் ஊற்று புறப்படவில்லையா? சோர்வுகளும், கவலைகளும், கேள்விகளும், அசுத்த சிந்தைகளுமே உள்ளிருந்து புறப்பட்டு வருகிறதா?  அப்படியானால் இயேசு சொன்ன “அந்த விசுவாசம்” நம்மிடம் இல்லை!! இதை ஒத்துக்கொள்ளுகிறீர்களா?
  • மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவா14:12) என்று இயேசு சொன்னாரே! அவரை விட பெரிய கிரியைகள் செய்வதிருக்கட்டும். குறைந்தபட்சம் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களிடம் காணப்பட்ட பரிசுத்தமும், நீதியும், கீழ்ப்படிதலுமாவது நம்மில் காணப்படுகிறதா?  என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான் என்றாரே, நாம் செய்யவில்லையானால் “நான் அவரை விசுவாசிக்கிறவன் இல்லை” என்பதுதானே உண்மை! இதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா?
  • விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று வாக்குத்தத்தம் கூறுகிறதே! இவைகளை நாம் செய்யவில்லையென்றால் நாம் விசுவாசிக்கிறவர்கள் இல்லையென்றுதானே அர்த்தம்? என்ன சொல்லுகிறீர்கள்?
  • என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன் என்று இயேசு சொன்னாரே! (யோவா 12:46). நாம் ஒளியில் நடக்கிறோமா? நம் மனசாட்சியே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்த்தால் நாம் ஒளியில் நடக்கிறவர்களல்ல. விசுவாசிக்கிறவன் இருளில் நடக்கமாட்டானாமே! மாற்றுக்கருத்து உண்டா?
  • தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருப்பார்கள் என்று தீத்து 3:8 சொல்லுகிறது. நாம் நற்கிரியைகளில் எப்படியிருக்கிறோம்? ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது. நாம் இயேசுவின் அடிமைகள் என்பதை நமது நற்கிரியைகளில் காண்பிக்கிறோமா? கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி என்று ஒருவன் கேட்டால் அவனுக்கு என்ன பதில் சொல்லுவோம்? வருகிற ஞாயிற்றுக்கிழமை எங்கள் சர்ச்சுக்கு வா எங்கள் பாஸ்டரிடம் உன்னை கொண்டுபோய் விடுகிறேன் அவர் உனக்கு விளக்கம் சொல்வார் என்பீர்களா?
  • தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (.1யோவான் 5:4,5) நம் விசுவாசத்தினால் நாம் உலகத்தை (World System) ஜெயித்திருக்கிறோமா? அல்லது உலகப் பொருளைப் பெறுவதற்காகவே நம் விசுவாசத்தைப் பயன்படுத்துகிறவர்களாயிருக்கிறோமா? அப்படியானால் நாம் பெற்ற விசுவாசம் எவ்வகையான விசுவாசம்?

விசுவாசத்தினால் மட்டும்தான் நீதிமான் பிழைப்பானாம். பின்வாங்கிப்போவானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்று கர்த்தர் சொல்லுகிறார். விசுவாசிப்பவர்களுக்கே நித்தியஜீவன் என்று வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது (யோவா 5:24, 3:36). நம்மை அக்கரைக்கு இட்டுச்செல்லும் கப்பல் விசுவாசமே!(1தீமோ 1:19) இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவின் அச்சாணி விசுவாசமே!

மேலே உள்ள ஐந்து காரியங்களையும் பார்த்தால் எனக்கு விசுவாசமே இல்லை என்பதல்லவா புலனாகிறது.நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள் (யோவா 10:26) என்று இயேசு சொல்லுகிறார்!. ஐயோ! ஆண்டவரே! இது என்ன? நான் உமது மந்தையின் ஆடு இல்லையா????????

சகோதரனே! நாங்கள் இயேசுவைக் கிறிஸ்துவென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு நன்மை அளிப்பவரென்றும் விசுவாசிக்கிறோம் என்று சிலர் உரக்கச் சொல்லுவது கேட்கிறது ஆனால் “தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன” என்று நான் சொல்லவில்லை யாக்கோபு சொல்லுகிறார் (யாக் 2:19)  அப்படியெனில் பிசாசுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?

ஐயோ! அப்படியானால் எனக்குள்ளிருந்து ஜீவதண்ணீரூற்று வழிந்தோடவில்லை, விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அற்புத, அடையாளங்கள் என்னிடத்திலில்லை, உலகத்தாரிடம் காணாத நற்கிரியைகள் இல்லை, உலகத்தின் மீது ஜெயம் இல்லை, பாவத்தின் மீதும் ஜெயம் இல்லை. விசுவாசிக்குரிய எந்த அடையாளமும் என்னிடம் இல்லை, ஆனால் என் பெயர் விசுவாசி!!!! அப்படியானால் உண்மையிலேயே நான் விசுவாசியா??????????????????????????

நான் ஒரு மேடையில் நின்றுகொண்டு உங்களை நோக்கி கை நீட்டி குற்றம் சொல்லவில்லை. நானே என்னுடைய அவசரத் தேவையை அறிந்திருக்கிறேன். இது என் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நான் செய்த தியானம். என் நோயை மாத்திரமல்ல அதற்கு நான் எடுத்துக்கொள்ளும் ரணசிகிச்சையையும் சக நோயாளிக்கு அடையாளம் காட்டுவதே உங்களில் ஒருவனாக எனது கடமை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, புற்று நோய்க்கு தைலம் தடவி விடுபவன் காரியத்துக்கு உதவாத வைத்தியன். நமது கிறிஸ்தவம் இப்படிப்பட்ட போலி வைத்திகளால் நிரம்பியிருக்கிறது.

எனக்கன்பானவர்களே! இக்கட்டுரையின் நோக்கம் உங்களை சோர்வுக்குள்ளாக்கவேண்டும் என்பதல்ல நமது ஆவிக்குரிய நிர்விசாரத்தின் மீது அணுகுண்டு வீசித் தாக்கவேண்டும் என்பதுதான். மந்தையை சிதறடிப்பதல்ல கூட்டிச்சேர்ப்பதும் இடித்துப் போடுவது அல்ல, ஊன்றக்கட்டுவதுமே நோக்கம்.

பிரியமானவர்களே! கலங்காதிருங்கள்!! இரட்சிப்புகேற்ற விசுவாசம் நம்மில் காணப்பட்டது உண்மைதான், நாம் இரட்சிக்கப்பட்டதும் உண்மைதான். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். நமது பிறப்பு மாத்திரம் விசுவாசத்தினாலல்ல பிழைப்பும் விசுவாசத்தினாலேதான். விசுவாசத்தில் பிறந்த நாம் விசுவாசத்தில் பிழைக்கவில்லையே!!! மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலும்(Rhema) பிழைப்பான் என்று வேதம் சொல்லவில்லையா? நாமோ ஆவிக்குரிய கோமாவில் அன்றோ இருக்கிறோம்!!

இந்தக்கட்டுரையின் கேள்வி இதுதான்: நீங்கள் ரேமாவால் பிழைக்கப் போகிறீர்களா? அல்லது கோமாவில் மரிக்கப் போகிறீர்களா?

ஒருவன் மறுபடியும் பிறந்துவிடக்கூடாது என்பதில் சாத்தான்  சர்வ ஜாக்கிரதையாக இருப்பான், அப்படியே பிறந்துவிட்டால் அவன் விசுவாசத்தினாலே பிழைத்துவிடாமல் இருக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வான். பரிசுத்த ஆவியாவனருக்கு இடம் கொடுக்காத சபையை செத்த மதக்கிரியைகளினால் நிரப்பி அதை அந்தகாரத்துக்குள் தள்ளுகிறான். தனது சோதனை முயற்சியை பவுல் உயிரோடு இருந்த காலத்திலேயே கலாத்தியா சபையில் ஆரம்பித்து விட்டான் சத்துரு. ஆனால் பவுலிடம் வேகுமா பிசாசின் பப்பு! கலாத்தியரைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கிவிட்டார் பவுல்.

புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார் இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலா 3:1-3). பவுல் கொடுத்த சூட்டில் கலாத்தியா சபை அலறிக் கொண்டு விழித்திருக்கவேண்டும். ஒரு ஆட்டுக்குட்டிக்காக சிங்கத்தின் வாயைப் பிடித்து கிழித்த தாவீதை எனக்கு பவுல் நினைவு படுத்துகிறார்.

ஆனால் பவுலின் காலத்துக்குப் பின்பு ஆடுகளை சிங்கத்திடம் பிடித்துக் கொடுத்து அதில் எஞ்சுவதை தானும் கொஞ்சம் தின்று பிழைக்கும் நரிகளும் ஓநாய்களும் சபையை ஆக்கிரமித்துக் கொண்டன. சபையை மதம், பிரமாணத்துவம் போன்ற அந்தகாரங்கள்  மூடிக் கொண்டன. இதுதான் 16-ஆம் நூற்றாண்டிலும் நடந்தது. இன்றைய கதையும் இதுதான். எப்பொழுதெல்லாம் சபையின் சரிதை சர்தையின் சரிதையைப்போல ”உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் நீ செத்தவனாயிருக்கிறாய் (வெளி 3:1)” என்ற நிலைக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்கிற வார்த்தை ஆவிக்குரிய மண்டலத்தில் ஓங்கி ஒலிக்கிறது. எப்பொழுதெல்லாம் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற கோஷத்தோடு ஒரு குழு எழும்புகிறதோ அப்போதெல்லாம் எழுப்புதல் வெடித்துக் கிளம்புவதும் உறுதி.

நான் 15 வருடங்களுக்கு முன்னர் சந்தித்த விசுவாசிகள் பலர் இன்றளவும் ஒரு முன்னேற்றமும் காணாமல் தேக்க நிலையிலேயே இருக்கிறார்கள். தாங்கள் சார்ந்துள்ள சபை அமைப்பின்மீதும் தங்கள் கிரியைகள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையிலேயோ ஆவியின் வல்லமையும், பாவத்தின் மீது ஜெயமும் காணப்படவில்லை. தன் மதக்கிரியைகளின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவன் நீதியையும், இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிடுகிறான் என்று மத்தேயு 23:23 சொல்லுகிறது. இன்றைய நவீன கிறிஸ்தவம் சொல்லித்தந்த ஆவிக்குரிய போர்வையிலுள்ள மதக்கிரியைகளைச் சார்ந்துகொண்டு இரக்கத்தையும் நீதியையும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்களோ! தன் வலதுகையில் உங்கள் தசமபாகத்தை வாங்கிக்கொண்டு இடதுகையில் உங்களுக்கு உங்கள் பாஸ்டர் வழங்கிய நன்நடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate) பரலோகத்தில் செல்லுபடியாகாது பிரியமானவர்களே!

இன்றைய கிறிஸ்தவ உலகில் “Word of Faith” என்ற வார்த்தை மிகப் பிரபலம். புத்தக நிலையங்களெல்லாம் விசுவாசம் சம்பந்தப்பட்ட புத்தகங்களால் நிறைந்திருக்கிறது ஆனால் இயேசுவோ மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ? என்று கேட்கிறார். இன்றைய புத்தக நிலையங்களில் நாம் பார்க்கும் விசுவாசம் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் பல வேறொரு சுவிசேஷமான  பொருளாதார செழிப்பை மட்டுமே பிரதானப்படுத்தி போதிப்பவை. அது கிறிஸ்துவுக்கல்ல மேமனுக்கு (உலகப் பொருள்) மணவாட்டியாகும்படி நம்மை நயவஞ்சகமாக நடத்திச்செல்லக் கூடியது. பணத்தைச் சார்ந்து கொள்ளுகிறவன் ”விசுவாசத்தை விட்டு வழுவி” தன்னைதானே உருவக் குத்திக் கொள்ளுகிறான்  அதாவது ஆவிக்குரிய தற்கொலை செய்து கொள்ளுகிறான் என்று 1தீமோ 6:10 சொல்லுகிறது.

நாம் நிச்சயிக்கப்பட்டது யாருக்கு?

அந்தோ பரிதாபம்!! இதற்கும் கூட வேதத்தைப் புரட்டி பதில்தேட வேண்டிய நிர்பந்தமான நிலையில் மணவாட்டி இருப்பது ஆண்டவரின் மனதை எத்தகைய வேதனைக்குள்ளாக்கும்? இதுவும்கூட 2கொரிந்தியர் 11:2-ஐப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? அச்சடிக்கப்பட்ட வேதம் கையில் இல்லாவிடில் நமக்கு நம் புருஷன் பேர் கூடத் தெரியாதல்லவா? தன் புருஷனுக்காக சிங்கத்தின் வாய்க்குள் தைரியமாகத்த் தலையைவிட்டானே ஆதித்திருச்சபைக்காரன் அவன் கையில் எந்த வேதம் இருந்தது?? இயேசுவோடு இருந்த அந்தரங்க ஐக்கியமல்லவா அவனை அவ்வளவாய்ப் பரிமளிக்கச் செய்தது!! நான் வேதத்தைக் குறை சொல்லவில்லை, அச்சடிக்கப்பட்ட வேதத்துக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்!! மண்ணுக்குள் புதையலைத் தேடும் தீவிரத்தோடு வேதத்துக்குள் இயேசுவைத் தேடியிருந்தால் அவர் உனக்கு வெளிப்பட்டு என் பிரியமே! ரூபவதியே!! என்னிடத்தில் வா!! என்று ஆசையாய் அழைத்திருந்திருப்பார். நீ வேதத்துக்குள் அவரது எதிரியான உலகப் பொருளை அடையும் வழியையல்லவா தேடுகிறாய்!!

2 கொரிந்தியர் 11:2-இல் இந்தப் பவுல் சொல்வதைப் பாருங்களேன்: நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். வாவ்!!எப்பேர்ப்பட்ட தலைவன்!! இந்த மனிதனுக்கு முன்பாக நின்று அவருக்கு ஒரு ராணுவ சல்யூட் அடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறது. இந்த மனிதனிடம் வளர்ந்தவர்கள் பிசாசுக்கு நாக்அவுட் கொடுத்தார்கள். இன்றைய விசுவாசிகள் தங்கள் பாஸ்டருக்கு கட்அவுட் வைக்கிறார்கள்!

நம் விசுவாசக்கப்பலுக்கு என்னவாயிற்று? இமெனே அலக்ஸாந்தர் போல அதை சேதபடுத்தி விட்டோமா? மணவாளன் வருகை சமீபித்திருக்கிறதே என்ன செய்யப் போகிறோம்?

(தொடர்ந்து சிந்திக்கலாம்)

6 thoughts on “என் பெயர் விசுவாசி!! (பாகம்-1)”

  1. அன்பு சகோதரருக்கு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். தாங்களின் என் பெயர் விசுவாசி என்ற கட்டுரையை படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொடந்து தாங்கள் இப்படியான வல்லமையான செய்திகளை எழுத ஊக்கமாக ஜெபிக்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  2. மண்ணுக்குள் புதையலைத் தேடும் தீவிரத்தோடு வேதத்துக்குள் இயேசுவைத் தேடியிருந்தால் அவர் உனக்கு வெளிப்பட்டு என் பிரியமே! ரூபவதியே!! என்னிடத்தில் வா!! என்று ஆசையாய் அழைத்திருந்திருப்பார். நீ வேதத்துக்குள் அவரது எதிரியான உலகப் பொருளை அடையும் வழியையல்லவா தேடுகிறாய்!!
    Vazhthukkal Brother………

  3. யாக்கோபு 2:14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

    யாக்கோபு 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?

  4. Dear Brother,

    I will pray for you.
    and you please pray for me.
    Both, will pray for the co-believers.

    Have victory in “JESUS NAME”

    aSekar
    Coimbatore

Leave a Reply