அவர் என் ஆத்துமாவை வருத்தி, பதற வைத்து, பயமுறுத்தி நீதியின் பாதைகளில் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் என்று சொல்லாமல் அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்று சங்கீதம் 23:3 சொல்லுகிறது.
அவர் நமது ஆத்துமாவைத் தேற்ற என்ன செய்கிறார்? அதற்கு முந்தின வசனம் சொல்லுகிறது; அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
நம்மை பசுமையான புல்வெளியில் படுக்க வைத்து, அமைதியான தண்ணீரண்டையில் நடத்தி நமது ஆத்துமாவை அவர் தேற்றும்பொழுது நமது ஆழ்மனம்(Sub-conscious mind) விழித்துக்கொள்கிறது, அப்போது அவர் நமது ஆழ்மனதுக்கு போதித்து நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறார். ஏனென்றால் மனிதனில் சுபாவங்கள், பழக்கங்கள் உருவாக ஆழ்மனதுதான் காரணமாக இருக்கிறது.
நம் ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். எனவேதான் திரைப்படம் மற்றும் மீடியாக்கள் வழியாக பிசாசானவன் நமது ஆழ்மனதுக்குள் தனது விஷவிதைகளை விதைத்துவிடுகிறான். அது எளிதாக நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அப்படியானால் தேவன் நமது வெளிமனதுக்கு(conscious mind) போதிப்பதில்லையா என்றால் தேவன் அதையும் நிச்சயம் செய்கிறார். நாம் வேதம் வாசிப்பதும், பிரசங்கங்களைக் கேட்பதும் நமது வெளிமனதில்தான். வெளிமனதில் நாம் சத்தியத்தைக் கேட்கும்பொது நிலம் உழப்படுவதுபோல நமது உள்ளம் உழப்படுகிறது, பக்குவமடைகிறது.
ஆனாலும் விதைக்கப்பட்ட வசனமாகிய விதை 100% பலன் தருவது நாம் இளைப்பாறுதலில் இருக்கும்போதுதான். எனவேதான் சுவிசேஷத்தின் அழைப்பே “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்(மத் 11:28)” என்பதாக இருக்கிறது.
இன்று நம்மை நீதிக்குள்ளாகவும், பரிசுத்தத்துக்குள்ளாகவும் நடத்தும் நோக்கில் செய்யப்படும் பல பிரசங்கங்கள் நம்மைத் பதற வைப்பதாகத்தான் உள்ளன, ஆனால் உண்மையில் நாம் நீதியின் பாதை குறித்த போதனையை இளைப்பாறுதலின் நிலையில்தான் கற்றுக்கொள்ள முடியும். அதுதான் நமக்குள் கிரியை செய்து நம்மை மாற்றும்.