எனக்கு தெரிந்த விடைகள்

KOSTEEN

கிறிஸ்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடம் இருக்கும் விளங்காத புதிர்கள் இவைகள்… உங்களுக்கு யாருக்காவது இவைகளுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே..

…என்ற கேள்வியுடன் முகதளத்தில் அதிகமாக உலவும் ஒரு பதிவைக் காண நேரிட்டது. மிக மிக நியாயமான கேள்விகள்! இவைகள் முக்கியமாக பாஸ்டர்கள்/ ஊழியக்காரர்கள் விசுவாசிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டும் கூட. எனவே இதற்கான பதிலை அவர்களிடமே தருவது உசிதம் என்று நினைக்கிறேன்.

ஆலய ஆராதனையில் 3மணிநேரம் கடினமாக இருக்கிறது…ஆனால் டிவி முன் பல மணிநேரம் இருக்கிறார்கள்…எப்படி? 

இயேசு கிறிஸ்து பேசியபோது மணிக்கணக்கில் பசியை மறந்து ஜனங்கள் உட்காந்திருந்தார்கள் என்பதையும் நினைவுகூற வேண்டும்.  உம்மிடத்தில் நித்திய ஜீவவசனங்கள் உண்டே என்று பேதுரு சொன்னார். மனுஷகுமாரன் வாயிலிருந்தே அந்த ஜீவ வசனங்கள் வெளிப்பட்டபோது அது வறண்ட நிலத்தில் பாயும் நதிபோல ஜனங்களின் ஆன்மாவுக்கு உயிரூட்டியது. நம் பேச்சும் வாழ்க்கையும் ஒன்றாய் இருப்பதில்லை ஆகவே நமது பிரசங்கங்களில் அந்த ஜீவன் இருப்பதில்லை. தாவீது தேவனுடைய வீட்டில் வாசற்படியில் காத்திருப்பதையே பாக்கியம் என்று கிடந்தார். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வேல்ஸ் எழுப்புதல் நடந்த காலங்களில் ஜனங்கள் மணிக்கணக்கில் நாள்தோறும் சபைகளில் தரித்திருந்தது வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் நாம் மூளை அறிவையும் தாலந்துகளையும் வைத்தே manage பண்ணிக்கொள்ளலாம் என்று முற்பட்டதன் விளைவே இது.

ஜனங்களிடம் குறை இருப்பது உண்மைதான்! ஆனால் அவர்களை மட்டும்  குறை சொன்னால் எப்படி ஊழியர்களே? 

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் (நீதி 27:7 ), இயேசுவிடம் திருப்தியடையும் இடுக்கமான வழியை கற்றுத்தராமல் உயிரற்ற நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதில் சபைகள் ஆர்வம் காட்டினால் பின்னர் கசப்பான பதார்த்தமான டிவி நிகழ்ச்சிகள் அவர்களுக்கு தித்திப்பாகத்தானே இருக்கும்?

ஆலயத்தில் போடும் சிறு காணிக்கைக்கூட பெரிதாக தெரிகிறது…ஆனால் கடைகளில் வீணாக பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள்..எப்படி?? 

எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து தேவன் அழைத்துவந்த போது அவரது பலத்த கரத்தையும் ஓங்கிய புயத்தையும் கண்ட ஜனங்கள் கர்த்தருக்கென்று அள்ளி அள்ளி கொடுத்தார்கள், தேவைக்கு அதிகமாக வந்துவிட்டது போதும் நிறுத்துங்கள் என்று மோசேயே சொல்லும் அளவுக்கு காணிக்கைகள் வந்து குவிந்தது (யாத் 36). இயேசு கிறிஸ்துவிடம் சிறிதுநேரம் செலவிட்டதற்கே சகேயு தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் தேவையுள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டான். ஆதித்திருச்சபையில் ஆவியானவரின் நிறைவை ருசித்த ஜனங்கள் சொத்துக்களையெல்லாம் பொதுவில் வைத்து அனுபவித்தார்கள் இவை மட்டும் எப்படி சாத்தியமாயிற்று?

ஜனங்களிடம் குறை இருப்பது உண்மைதான்! ஆனால் அவர்களை மட்டும்  குறை சொன்னால் எப்படி ஊழியர்களே? 

போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஜனங்கள் அள்ளி அள்ளி கொடுப்பார்கள், ஆனால் கேட்பவன் மோசேயாக இருக்க வேண்டும். அவன் யார் தெரியுமா? உம் ஜனங்களை காப்பாற்றும், என் பெயரை ஜீவபுஸ்தலத்தில் இருந்து கிறுக்கிப்போடும் என்று அந்த ஜனங்களுக்காக கெஞ்சியவன். தேவனுடைய பிரதிநிதியாய் தனியொருவனாய் நின்று வல்லரசுகளை கலங்கடித்தவன்.

இன்றும் கூட சகேயுக்கள் முகதரிசனம் கிடைத்தவுடன் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் வாரிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் பார்க்கும் முகம் இயேசுவாக இருக்கவேண்டும், அவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்கிறார்களா?

சொத்துக்களை விற்று வரிசையில் வந்து அவற்றை அப்போஸ்தலர் பாதத்தில் ஜனங்கள் இன்றும் கூட வைப்பார்கள், ஆனால் அப்போஸ்தல ஆசனத்தில் இன்று பேதுருக்கள் இருக்கிறார்களா?

தினையை விதைத்தால் தினைதான் முளைக்கும், அவர் சீஷர்களை உருவாக்க சொல்லியிருக்க நீங்கள் மதவாதிகளை உருவாக்கிவிட்டு அவர்களிடம் சீஷனின் கனியை எதிர்பார்த்தால் எப்படி??? தேவனை எந்த அளவுக்கு ருசிக்கிறோமோ உலகப்பொருளை அந்த அளவுக்கு வெறுத்துவிடுவோம். இன்று உலகப்பொருள் இல்லாமல் ஊழியங்களே நடைபெற முடியாது என்ற நிலைக்கு கிறிஸ்தவத்தை கொண்டு வந்து விட்டீர்கள், பின்னர் ஜனங்களிடம் பொருளாசைதானே எஞ்சியிருக்கும்?

வேதாகமம் ஒரு அதிகாரம் தினமும் வாசிக்கக் கூட கடினமாக இருக்கிறது…ஆனால் தினமும்காலையிலயே பல செய்திதாள்கள் படிக்காமல் இருக்கமுடியவில்லை…எப்படி???

வெறும் கடைமைக்காக வாசித்தால் எங்கிருந்து ஆர்வம் வரும்? முதலில் மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பழக்கத்தை தூர எறிந்துவிட்டு ஆவியானவரோடு இணைந்து வேதத்தை வாசித்து அவரிடத்தில் கற்றுக்கொள்ள துவங்குவோமானால் வேதத்தை நமது நெஞ்சைவிட்டு யாராலும் பிரிக்க முடியாது. இவ்வுலக வாழ்வின்மீது வெறுப்பும், நித்தியத்தின் மீது ஏக்கமும் ஏற்படாவிட்டால் வேதம் வாசிக்கும் வாஞ்சையும் இருக்கவே இருக்காது. எவ்வளவாய் நித்தியத்தை தியானிக்கிறோமோ அவ்வளவாய் வேதத்தை நேசிப்போம், முற்றிலும் இவ்வுலகத்தில் மூழ்கியிருப்போமானால் வெறும் மத கடைமைக்காகவே வேதம் வாசிப்போம்.

ஜனங்களிடம் குறை இருப்பது உண்மைதான்! ஆனால் அவர்களை மட்டும்  குறை சொன்னால் எப்படி ஊழியர்களே? 

உனக்கு உலகப் பத்திரிக்கைகளில் ஆர்வம் இருக்கிறது, வேதத்தில் ஆர்வமில்லை என்று விசுவாசிகளை திட்டி என்ன பயன்? புளியமரத்தில் மாங்கனியை தேடினல் அது அப்படி? உலகத்துக்குரியவன் உலகத்துக்குரியவைகளை நேசிப்பான் ஆவிக்குரியவன் ஆவிக்குரியவைகளை நேசிப்பான். ஒரு மனிதனை உண்மையான மனந்திரும்புதலுக்குள் நடத்தி சத்தியத்தை சத்தியமாக கற்றுக் கொடுத்திருந்திருப்போமானால் அவர்கள் ஏன் உலகத்தை நேசிக்கப்போகிறார்கள்? இப்படிப்பட்ட ஆவிக்குரிய மேன்மைகளை பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகளும் விரும்பவில்லை, எனவேதான் சத்தியத்தை போதிக்கும் சபைகளில் கூட்டம் இல்லை, உலக கவர்ச்சி காட்டும் சபைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஜனங்கள் தங்கள்  செவித்தினவுக்கு தீனிபோடும் இச்சைக்கேற்ற போதகர்களை சேர்த்துக்கொள்ளுகிறார்கள். உன்னை நான் கெடுத்தேன் என்னை நீ கெடுத்தாய் என்ற கதையாய் மொத்தமும் கேட்டில் முடிகிறது.

மற்றவர்களுடன் மணிக்கணக்கா பேச நேரம் இருக்கும்…ஆனால் தேவனோடு பேச, ஜெபிக்க நேரமே இருப்பதில்லை..எப்படி???

ஜெபம் வேத வாசிப்பு எல்லாம் சடங்காகிவிட்டது. கிறிஸ்துவோடு உறவாடுதல் என்பது மறக்கப்பட்ட காரியமாய் மாறிவிட்டது. கிறிஸ்துவின் இடத்தை பல இடங்களில் மனிதர்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள். விசுவாசிக்கு தேவையான அனைத்தையும் கிறிஸ்துவின் இடத்தில் இருந்து அவர்கள் தர முனைகிறார்கள். எனவேதான் ஒருவனை முதல் முறையாக அழைக்கும்போதே “இயேசுவிடம் வா!” என்றழைப்பதில்லை “சர்ச்சுக்கு வா!” என்று அழைக்கப் பழகிவிட்டோம் இன்று பாஸ்டர்கள் மத்தியஸ்தராக மாறிவிட்டார்கள். அவர்கள் தலையில் கைகளை வைக்கும்போதுதான் கிறிஸ்துவோடு இணைக்கபட்ட உணர்வே விசுவாசிகளுக்கு வருகிறது. எத்தனை பரிதாபம்!!  அவர்களிடம் “இயேசுவைப் பற்றி சொல்” என்றால் இயேசுவைப் பற்றி பாஸ்டரிடம் கற்றுக் கொண்டதைத்தான் சொல்வார்கள்.

ஜனங்களிடம் குறை இருப்பது உண்மைதான்! ஆனால் அவர்களை மட்டும்  குறை சொன்னால் எப்படி ஊழியர்களே? 

உங்கள் விசுவாசிகள் சபை உபதேசங்களையும் பாரம்பரியங்களையும் கற்றுக்கொள்கிறார்கள் இயேசுவை அறியவில்லை.

பாஸ்டரை அறிகிறார்கள், பரமனை அறியவில்லை

பாடத்தெரிகிறது, பணியத் தெரியவில்லை.

ஆராதனை நடத்தத் தெரிகிறது, அர்ப்பணிக்கத் தெரியவில்லை

“To do” knowledge நிறைய இருக்கிறது, “How to” knowledge சுத்தமாக இல்லை

வேத அறிவு இருக்கிறது, தேவ அறிவு இல்லை.

அறியாத ஒருவரிடம் அன்பு கூறுவது எப்படி? அவரை அறியவேண்டியபடி அறியாததால்தான் அவர் கடைசி நாளில் அநேகரை நோக்கி “உங்களை அறியேன்” என்று சொல்லப்போகிறார். அவர்களை அறியவிடாமல் தடுத்த பாஸ்டர்களையும் சேர்த்து.

பத்திரிகை,டி.வி செய்திகளை அப்படியே நம்புகிறார்கள்…ஆனால் வேதாகமம் கூறும் உண்மைகளை நம்புவதில்லை…எப்படி??

வேதம் கூறும் உண்மைகள் முதலாவது பிரசங்கிகப்படுகிறதா? ஒரே வசனத்தை பத்துப்பேர் பத்து எதிர்மறையான விதங்களில் போதித்தால் வேதத்தின் உண்மைகள் எங்கிருந்துவரும்? மனந்திரும்புதல், இரட்சிப்பு, திருமுழுக்கு, பரிசுத்த ஆவி, இரகசிய வருகை, நியாயத்தீர்ப்பு, இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஓராயிரம் போதனைகள் இருந்தால் மனுஷன் எதை நம்புவான்?

ஜனங்களிடம் குறை இருப்பது உண்மைதான்! ஆனால் அவர்களை மட்டும்  குறை சொன்னால் எப்படி ஊழியர்களே?

“பிரதமர் இன்று சென்னை வருகிறார்” என்றால் எல்லா செய்தித்தாள்களிலும் ஒரே விதமாகத்தான் அந்த செய்தி சொல்லப்பட்டிருக்கும். ஆனால் “இயேசு இரண்டாம் முறையாக பூமிக்கு வருகிறார்” என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை உபதேசக் குழப்பங்கள்? இதில் வேதம் கூறும் உண்மையை ஏன் நம்புவதில்லை என்று கேட்டால், ” பத்துப்பேர் பத்து உண்மையை(!) சொல்லுகிறீர்கள், என்னை எந்த உண்மையை நம்பச்சொல்லுகிறீர்கள்?” என்று  பதிலுக்கு கேட்பார்களல்லவா? நாம் எங்கே முகத்தை வைத்துக்கொள்வது?

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால், ஆதித்திருச்சபையில் உபதேசக் குழறுபடிகள் வரும்போதெல்லாம் அப்போஸ்தலர்கள் எருசலேமில் கூடி உடனே அதை தீர்த்துக் கொண்டார்கள். அன்று ஆசியா முழுவதும் சபைகள் இருந்தாலும் அத்தனையும் ஒரே சரீரம், ஒரே போதனை. ஆனால் இன்றோ சபையை உங்கள் சுயநலங்களுக்காக அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து எடுத்துவிட்டு சாமானிய மனிதர்களை குறை சொல்ல உங்களுக்கு எங்கே உரிமை இருக்கிறது?

இங்கே விசுவாசிகள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை 100% ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் விசுவாசிகளிடம் மாத்திரம் தவறு இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவு அவசியமாயிற்று.

இப்போது உள்ள ஒரேவழி, முதலாவது சபைகளும் ஊழியர்களும் முதிர்ந்த விசுவாசிகளும் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவதுதான். விசுவாசிகள் சரியில்லை காரணம் சபைகள் சரியில்லை. வரப்புயர நீர் உயரும்,. நீர் உயர நெல் உயரும்… முதலாவது வரப்புகளாகிய சபைகள் உயரட்டும், பின்னர் அங்கே ஆவியானவரின் பிரசன்னமும் தேவவசனமாகிய நீரும் பெருகும், நீர் பெருக கதிர்களாகிய விசுவாசிகளின் நீதியின் விளைச்சலும் பெருகும்….அல்லேலூயா!!

1 thought on “எனக்கு தெரிந்த விடைகள்”

Leave a Reply