எதைக் கேட்டாலும் தருவாரா?

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக (சங்கீதம் 20:4)

அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர் (சங்கீதம் 21:2)

வசனம் இப்படிச் சொன்னாலும் இன்னும் நம்முடைய ஜெபங்களுக்கு ஆம், இல்லை அல்லது காத்திரு என்ற பதில்களைப் பெறும் நிலைதான் இன்னும் இருக்கிறது. நாம் எதைக் கேட்டாலும் தள்ளாமல் தரும் நிலை என்று ஒன்று இருக்கிறது. அந்த நிலைக்குள் நம்மை உயர்த்தி வைத்திருக்க வேண்டும் என்பதே ஒரு அப்பாவாக தேவனுடைய சித்தமாகவும் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது அப்படிப்பட்ட நிலையில்தான் இருந்தார். அவர் கேட்ட எதையும் பரலோகம் அவருக்கு மறுக்கவில்லை.

ஆனால் அதற்கு முன்பாக ஒரே ஒரு படி இருக்கிறது. அவருடைய நன்மையும் பிரியமுமான சித்தம் இன்னதென்பதை நாம் அறிந்துகொள்ளும் அறிவு நமக்கு வேண்டும். அந்த அறிவுதான் தேவசித்தத்தின்படியான விருப்பங்களை நமக்குள் உருவாக்கும். அந்த அறிவிலிருந்து உருவாகும் விருப்பங்களை பரலோகம் ஒருபோதும் தள்ளாது.

அந்த அறிவை நாம் தேவனுடைய வசனத்திலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும். நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்று கர்த்தராகிய இயேசுவுக்கு இருந்த அதே நிலைப்பாடு நமக்குள்ளும் வரும்போது நமது விருப்பங்களையும் தள்ளாமல் தேவனுடைய அரசு நிறைவேற்றும்.

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1 யோவா 5:14)

Leave a Reply