நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனோ அந்த ஜாதியைச் சேர்ந்த விசுவாசிகள் மட்டுமே என்னை ஆதரிப்பார்கள் என்ற சூழலும் பேச்சும் இன்றைய தமிழ் கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதே மனநிலை விசுவாசிகளிடத்திலும் காணப்படுகிறது. சிலுவையில் இயேசுவோடு நமது பழைய மாம்ச மனிதன் மரித்தபோது அவனோடு சேர்ந்து உலகப்பிரகாரமான நமது ஜாதியும் மரித்துவிட்டது. நமக்கு உண்டாயிருக்கும் ஆவிக்குரிய புது சிருஷ்ட்டி எந்த ஜாதி அடையாளத்தையும் சுமந்தவனல்ல…அவன் பரலோகத்துக்குரியவன். ஆனால் இந்த வெளிப்பாடு இன்றைய தமிழ் கிறிஸ்தவர்களிடம் இல்லை என்பது கவலைக்குரிய உண்மை.
சரி, அதிருக்கட்டும்…இப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன்.
இஸ்ரவேல் மக்கள் அன்று 12 கோத்திரங்களாகப் பிரிந்திருந்தார்கள். தாவீதின் மேல் கர்த்தருடைய அழைப்பும், அபிஷேகமும் உண்டாயிருந்தது. பென்யமீன் கோத்திரத்தானாகிய சவுலின் வசமிருந்த இராஜ்யபாரத்தை கர்த்தருடைய சித்தப்படி யூதா கோத்திரத்தானான தாவீது வசம் திருப்ப தாவீதின் யூதா கோத்திரத்தாரோடு, மற்ற 11 கோத்திரத்தாரும் இணைந்து பாடுபட்டார்கள் என்று 1 நாளாகமம் 12-ஆம் அதிகாரம் சொல்லுகிறது. இதில் பென்யமீன் கோத்திரத்திலிருந்த சவுலின் சகோதரர் 3000 பேரும்கூட அடக்கம் என்பது ஆச்சரியமான விஷயம்! (வசனம் 29).
இது ஊழியருக்கு:
நீங்கள் உன்னதமான தேவனுடைய ஊழியராக இருந்து உங்கள்மீது தேவனுடைய அழைப்பும் அபிஷேகமும் இருந்தால் நீங்கள் என்ன பின்புலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறித்த கவலை உங்களுக்கு தேவையில்லை. உங்கள் மீதிருக்கும் அழைப்பும் அபிஷேகமும் ஜனங்களை காந்தம் போல உங்களிடம் இழுத்துக் கொண்டுவரும். அதேபோல தாவீதும் தனது யூதா கோத்திரத்துக்கு மட்டும் நன்மையைத் தேடாமல் அத்தனை கோத்திரங்களுக்கும் பாரபட்சமின்றி நன்மை செய்தார் என்று வேதம் சொல்லுகிறது. இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய ‘எல்லா ஜனத்திற்கும்’ நியாயமும் நீதியும் செய்துவந்தான் (2 சாமு 8:15)
இது விசுவாசிகளுக்கு:
ஒரு தேவ மனுஷனிடத்தில் கர்த்தருடைய அழைப்பும், அபிஷேகமும் இருப்பதாக உணர்ந்தால் அவன் பின்புலத்தை ஆராயாமல் அவனைப் பின்பற்றுங்கள், அந்த ஊழியத்தைத் தாங்குங்கள். அந்த ஊழியத்தின் மூலம் நிச்சயம் உங்களுக்கு மிகுந்த நன்மையுண்டாகும். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் 1 நாளாகமம் 12-ஆம் அதிகாரம் இப்படியாக இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற கோத்திர வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்தபோது “இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று (1 நாளா 12:40) என்ற வசனத்தோடு நிறைவடைகிறது.
ஜாதி என்பது உலகத்துக்குரிய கட்டமைப்பு, சபை என்பது தேவனுடைய கட்டமைப்பு. உலகத்துக்குரியதை தேவனுடைய கட்டமைப்புக்குள் கொண்டு வந்து பொருத்த முயற்சிப்பது யாருக்கும் ஆசீர்வாதமாக அமையாது. மாறாக தேவனுடைய கட்டமைப்புக்குள் நம்மை பொருத்திக் கொள்ளும்போது 1 நாளா 12 சொல்வதுபோல அது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக முடியும்.
பின்குறிப்பு: ஊழியர், விசுவாசிகள் என்று ஒரு புரிதலுக்காக எழுதியிருக்கிறேன். எல்லா ஊழியரும் விசுவாசிகளே, எல்லா விசுவாசிகளுக்கும் ஏதோ ஒரு ஊழியக் கடைமை இருக்கும். கர்த்தருடைய பார்வையில் எல்லோரும் “சீஷர்” என்ற பொது அடையாளத்துக்குள் அடக்கம்.
ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com