ஊறுகாய்க்கறை

ஆங்கில மூலத்தை எழுதியவர் சகோ.பிரான்ஸிஸ் சோமர்வெல்

சமீபத்தில் ஒரு சகோதரனோடு நடந்த டெலிபோன் உரையாடலில் இன்றைய ஊழியர்கள் மற்றும் ஊழியங்கள் குறித்த என் மனபாரத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

“ஏன் இன்றைய ஊழியர்கள் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள்! என் எங்கு நோக்கினும் போலித்தனம், சுயநலம்! மெய்யான ஆத்தும பாரம் எங்கே! சபைக்காக கர்ப்பவேதனைப்படும் பவுல்கள் எங்கே!!

அவரோ “நான் அபிஷேகம் பண்ணினவன்(!) மேல் கைபோடாதே” என்ற வசனத்தைப் தவறாகப் புரிந்து கொண்டு கேயாசிகளுக்காகவும் பிலேயாம்களுக்காகவும் வழக்காடுபவர். அவர் என்னை வளைப்பதாக நினைத்து கேட்ட கேள்வி: “ஏன் எல்லோரையும் குறை சொல்லுகிறீர்கள்? நீங்கள் உண்மையுள்ளவர் என்று மதிக்கும் ஒரே ஒரு ஊழியர் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்!” என்பதாகும்

நான் சற்றும் யோசிக்காமல் மறுகணமே “மூர்த்தி அண்ணா” என்றேன். மூர்த்தி அண்ணா நான் என் வாழ்வில் கண்ட உத்தம ஊழியர்களில் ஒருவர். என்னுடன் பேசிய சகோதரர் ஆச்சரியமாக “யாரது? நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார். மூர்த்தி அண்ணா ஊழியத்தில் ஒருபோதும் “தன்னை” முன்னிறுத்தியதோ தம்பட்டம் அடித்தததோ கிடையாது. அவர் தன்னை ஒரு முக்கியமான ஆளாக அவர் கருதியதும் கிடையாது. குப்பையும் எல்லோரும் துடைத்துப் போடத்தக்க அழுக்குமாகத் தன்னைக் கருதிய அந்த சகோதரன் கர்த்தருக்காக வென்றெடுத்தது ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள்!!! ஆனால் அதற்காக அவர் தனக்கு விளம்பரம் தேடியதோ தான் ஆதாயப்படுத்திய ஆத்துமாக்களிடம் சொந்த ஆதாயம் தேடியதோ கிடையாது.

மூர்த்தி அண்ணா பிற்காலங்களில் தனது பெயரை ஜார்ஸ் முல்லர் என்று மாற்றிக்கொண்டார். அவர் பல வட மாநிலங்களின் கிராமப்புறங்களுக்கு வெறுங்காலில் நடந்து செல்லுவார், தனது ஊழியத்தில் பெரும்பகுதியை கிராமப்புறங்களில் உள்ளோருக்கு சுவிசேஷம் அறிவிப்பதிலும் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுப்பதிலும் செலவிட்டார்.

அவர் ஒரு புட்டியில் அரிசிக் கஞ்சியை நிரப்பி எடுத்துக்கொள்ளுவார். அவரது சட்டை பாக்கெட்டில் எப்பொழுதும் ஒரு சிறு ஊறுகாய் பொட்டலம் இருக்கும். அதுவே அவரது அனுதின உணவு. பல்வேறு இடங்களுக்குச் செல்லுவதால் தூக்கிச் செல்ல இதுவே எளிதாக இருக்கும் என்பார். அவரது எல்லாச் சட்டைப் பாக்கெட்டுகளிலும் ஊறுகாய்க் கறையைப் பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் சென்னையில் நடத்திய ஒரு கூட்டத்துக்கு செய்தியளிக்க அண்ணன் வந்திருந்தார். அன்று பிரியாணி ஏற்பாடு செய்திருந்தோம் அவரோ பிரியாணியைத் தன் கையால் கூடத் தொடவில்லை. வெறும் சாம்பார் சாதம் மாத்திரமே சாப்பிட்டார். அவரை நங்கள் பிரியாணி சாப்பிடச் சொல்லி வற்புறுத்திய போது தாம் இதுபோன்ற பணக்கார உணவு வகைகளுக்கு தன் நாவைப் பழக்கப்படுத்த விரும்பவில்லை என்று அமைதியாகச் சொல்லிச் சென்றுவிட்டார்.

ஒருநாள் அவரது பாதத்தருகே உட்கார்ந்து தண்ணீரற்ற வறண்ட நிலம் போல பிளவுபட்டிருந்த அவரது பாதங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன், அது எனக்கு மிகமிக அழகுள்ளதாகக் காட்சியளித்தது. ஆம்! சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்!! (ரோமர் 10:15). அவர் அறியாமல் அவரது பாதங்களை மெதுவாகத் தொட்டுப்பார்த்தேன். என் தேவனுடைய இராஜ்ஜியத்துக்காக தன்னையே ஊற்றிவிட்ட இந்த சகோதரனுக்காக என் இருதயம் நன்றியால் நிறைந்திருந்தது.

நான் அடுத்தமுறை இந்தியா வந்தபோது மூர்த்தி அண்ணனைத் தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கென்று ஒரு நிரந்தர முகவரியோ, அலைபேசியோ அவரிடம் இல்லை. அவர் இன்னும் உயிருடன் தேவனை அதே உள்ளன்புடன் சேவித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன், எப்போதெல்லாம் ஊறுகாய்க்கறையைப் பார்க்கிறேனோ அப்போழுதெல்லாம் கறைதிறையற்ற அந்தப் பரிசுத்தவானின் முகம் என் கண் முன்னால் மின்னி மறையும்.

ஆம்! தேவனுக்காய் அரும்பெரும் காரியங்களை நிகழ்த்தியவர்கள் மனிதர் பார்வையில் அற்பமானவர்கள். அந்த பெரிதும் பிரகாசமுமான மாபெரும் நாளில், பரிசுத்தவான்கள் பீடுநடைபோட்டு ஆட்டுக்குட்டியானவருடன் பவனிவரும் போது மூர்த்தி அண்ணன் போன்ற உலகத்துக்கு முகமறியாதவர்களாய், உண்மையும் உத்தமுமாய், சிலுவைக்குப் பின்னால் மறைந்திருந்து ஊழியம் செய்தவர்கள் அந்தக் கூட்டத்தில் நிச்சயம் இருப்பார்கள். இயேசுவின் பெயரால் சுவிசேஷ வணிகம் செய்தவர்களோ அந்நாளில் துரும்பாயிருப்பார்கள்.

3 thoughts on “ஊறுகாய்க்கறை”

  1. Let God be magnified. I’m longing to see true servants of our GOD who’ve sold everything for the Master’s cause-I’m ashamed to say that I haven’t yet completely sold myself for the sake of CHRIST

  2. I saw Bro. Augestin Jebakumar’s message “Narahathil Thallapaduvathai Parkilum ” recently. He tells about Bro.Murthi in that message. Bro.Murthi went to be with the Lord in 2005. I praise God for this Man of God.

Leave a Reply