இந்தியாவின் தங்கத் தருணங்கள்:
நான் 2007 உலகக் கோப்பைக்குப் பிறகு சிங்கப்பூர் வந்துவிட்டதால் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய்விட்டது. இங்கே கால்பந்து மிகப் பிரபலம் கிரிக்கெட் அல்ல, ஏதேதோ மேட்ரிட் என்பார்கள் லிவர்பூல் என்பார்கள் எனக்கு ஒரு மண்ணும் புரியாது. சில வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் நம்ம இந்திய அணியைப் பார்த்தால் பல இளரத்தங்கள் தோனியின் தலைமையில் தீயாய் ஆடியதைப் பார்க்க ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. என்ன ஒரு கட்டுகோப்பு!! என்னவொரு தீவிரம்!! என்னவொரு அனல் மாதிரி பீல்டிங்!! 350 ரன்களுக்கு குறைவாக எடுத்தால் உங்களை ஜெயிக்கமுடியாது என்று எதிரணி கேப்டனே சொல்லுகிறார்! யாத்த்த்த்தாடி…நம்ம பசங்களா இது???
கோப்பையை நாங்கள் சச்சினுக்காக வென்றோம் என்று சொல்லி அவரை தோளில் தூக்கிவைத்து பவனி வந்தது நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காது. ஆம், சச்சின் இந்தப் பெருமைக்கு உரியவரே!! இது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த மாதிரியான வெற்றியல்ல. கடைசி மூன்று போட்டிகளில் இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்த யாரும் இனி நம் அணியை குறைத்து மதிப்பிட மாட்டார்கள். இது அணியின் கட்டுக்கோப்பான உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இந்தக் கோப்பை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் உரியது என்று நமக்காக அதை வென்ற வீரர்கள் சொல்லியது கிரிக்கெட் ரசிகர்களல்லாத இந்தியர்களையும் கூட மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கும்.
இனி போட்டியில் வென்றவர்கள் பரிசு மழையில் நனைவார்கள் போட்டியை நடத்தியவர்களும், ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளும் பணமழையில் நனைவார்கள் யாரும் எதிலும் பங்கு உங்களுக்குக் கொடுக்கப்போவதில்லை என்று விடிய விடிய விழித்திருந்த்து மேட்ச் பார்த்த ரசிகர்களை அவர்களது பெற்றோர் திட்டுவார்கள். உண்மைதான்! ஆனால் கடுமையாய் விளையாடிய விளையாட்டு வீரர்களும், போட்டிகளை கட்டுக்கோப்பாய் நடத்தியவர்களும், அதை அற்புதமாக ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்த மீடியாக்களும் எவ்வளவாய் உழைப்பை அதில் கொட்டியிருப்பார்கள்! எவ்வளவு திட்டமிடல் அதில் இருந்திருக்கும்! எத்தனைபேர் இரவுபகலாக வேலை செய்திருப்பார்கள்!!அவர்கள் அந்தப் பரிசுக்கும் பணத்துக்கும் முற்றிலும் தகுதியானவர்களல்லவா? ஆனால் சொந்த வேலை இருக்கும்போது, தேர்வுகள் இருக்கும்போது மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து மேட்ச் பார்ப்பது நமது தவறு. ஏதேனும் ஒன்றை வெல்லவேண்டுமானால் எவ்வளவு கட்டுக்கோப்பாய் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களிடமிருந்தே கற்றுக்கொள்வது மிக மிக அவசியம்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்ற ஆசையை மனதோடு புதைத்துவிட்டு தேர்வில் வெல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உலகக் கோப்பையைப் புறக்கணித்து விட்டு கடினமாகப் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் (அவர்கள் வயதுக்கு அது எவ்வளவு கடினம் தெரியுமா?), பிள்ளைகளுக்காக தாங்களும் மேட்சைப் பார்க்காது புறக்கணித்த பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! பிள்ளைகளே! பரீட்சை ஹாலுக்குள் நுழையும் முன்னர் பல சக மாணவர்களோடு பேசிக்கொண்டு இருந்திருப்பீர்கள், அவர்களில் சிலர் முந்தைய நாள் இரவை படிக்காமல் கிரிக்கெட்டில் கழித்துவிட்டு தேர்வுக்கு முன்னரும் கூட கிரிக்கெட்டைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்திருப்பார்கள் அவர்களுக்கும், கிரிக்கெட்டைப் புறக்கணித்து தீவிரத்தை தேர்வில் காட்டிய உங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தேர்வு முடிவு வெளிவரும் நாளில் காண்பீர்கள்!!
இலகுவாய் வருமோ இமாலய வெற்றி!!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடந்த உணர்ச்சிபூர்வமான இறுதிப் போட்டியின் முடிவு இந்தியாவுக்கே சாதகமாக அமைந்து விட்டது. அரங்கமே அதிரும் கரகோஷங்கள், “இந்தியா ஜிந்தாபாத்” முழக்கங்கள், இரவைப் பகலாக்கிய வாணவேடிக்கை, தேசமே தனது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் எல்லாருமே ஏகோபித்த குரலில் சொன்னது இது சரியான திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதுதான். ஒருகாலத்தில் சொதப்பல் அணியாக இருந்த இந்தியாவை இந்த மூன்றுமே இன்று எல்லோரையும் மிரட்டும் சாம்பியன் அணியாக்கி இருக்கிறது. நீங்கள் மேற்கண்ட வீடியோவில் பார்க்கும் கொண்டாட்டங்களை வீட்டில் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு முன்பாக 1 கொரிந்தியர் 9:24-27 வரையிலான வசனங்கள் நிழலாடியது:
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
அப்போஸ்தலன் பவுல் எவ்வளவாய் உணர்ந்து இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார். வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நம்மோடு நிலைக்கும் ஒரு கோப்பையைப் பெறுவதே நமக்கு இத்தனை மகிழ்ச்சியைத் தருமானால் நித்திய நித்தியமாக நிலைக்கப்போகும் வாடாத கிரீடத்தைச் சூடும் நாள் ஒரு விசுவாசிக்கு எத்தனை பேரின்பம் நிறைந்ததாக இருக்கும்.
ஆம்!எனக்கு இப்போது புரிகிறது பவுல் என்ற இந்த மனிதன் ஏன் கீழ்க்கண்ட இந்த அத்தனை இன்னல்களையும் இன்முகமாகச் சகித்தார் என்பதை:
நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். (2 கொரிந்தியர் 11:23-27)
ஏதோ ஒரு கட்டையைப் பற்றிக்கொண்டு ஒரு இரவையும் பகலையும் சமுத்திரத்தில் கழிப்பது சாதாரணமானதா பிரியமானவர்களே? பவுலுக்கு தான் பெறப்போகும் உன்னத கிரீடம் பற்றி இருந்த வெளிப்பாடல்லவோ அவரை இவ்வளவாக மறுரூபப்படுத்தியது!!
செல்லுஞ்செலவைக் கொடுக்க ஆயத்தமா?
இந்தக்கட்டுரையை நான் வேறு யாருக்காகவும் எழுதவில்லை, பிரதானமாக எனக்காக, எனது திருக்குள்ள, கேடுள்ள இருதயத்தை உணர்த்துவிக்கவே எழுதுகிறேன். நான் யாருக்கும் புத்தி சொல்லப் பாத்திரன் அல்ல. ஆவியானவர் எனக்குக் கற்றுக்கொடுத்ததை நான் உங்கள் நன்மைக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் அவ்வளவே!!
இந்தியாவில் 121 கோடி மக்கள் இருக்க, அதிலும் 62 கோடி ஆண்கள் இருக்க இந்தப் 11 பேருக்கு மாத்திரம் அணியில் எப்படி இடம் கிடைத்தது? இவர்கள் சிறுவயது முதல் ஆசையாசையாய்க் கொட்டி வளர்த்த கனவு பிரியமானவர்களே இது! இவர்களது பேச்சும் மூச்சும் இதுவே! வெற்றிக் களிப்பில் நம் சச்சின் கடைசியில் சொன்ன ஒரு வரியை கவனித்தீர்களா? “Winning the world cup is the ultimate thing for me” என்று முழக்கமிடுகிறார். கீழ்கண்ட அவரது பேட்டியைப் பாருங்கள்:
ஆம், அந்தக் கனவை நினைவாக்க அவர் என்ன விலையேனும் கொடுக்க ஆயத்தமாய் இருந்தார். இன்று நமது அணியினர் அவரை ஒரு பேரரசனைப் போல தோளில் தூக்கி வைத்து வலம் வருகின்றனர். அதுபோலவே சீஷனாவதற்க்கும் ஒரு விலை உண்டு! உலகம் முழுவதிலும் பில்லியன் கணக்கான மக்கள் இருக்கையில் உங்களையும் என்னையும் சீஷராகத் கர்த்தர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். தகுதியற்ற நமக்கு அதுவே பெரும் சிலாக்கியம். ஆனால் உள்ள நுழையும் முன்னர் ஒரு மாபெரும் நிபந்தனை உண்டு
பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். (லூக்கா 14:25-35).
இந்த வசனங்கள் எனது ஆவிக்குள் அலாரம் போல ஒலிக்கிறது. நான் சீஷனாக மாறுவது இருக்கட்டும் முதலாவது செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்த்து எந்தச் சூழலிலும் அவரைப் பின்பற்றும் முடிவை எடுத்து விட்டேனா? கலப்பையில் கை வைத்துவிட்டு எத்தனை முறை திரும்பிப் பார்த்து இருக்கிறேன்? பின்வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாய் இராது என்று என் ஆண்டவர் சொல்லுகிறாரே?(எபி 10:38)
இச்சை என்னும் பிரதான எதிரி:
வேர்க்கடலையைக் கொறித்துக் கொண்டும். சூடான காப்பி அருந்திக் கொண்டும் காலாட்டிக் கொண்டே நீங்களும் நானும் உலகக் கோப்பை பார்க்கலாம். ஆனால் நம் அணியினருக்கு அது சாத்தியமாகுமா? நாம் தட்டில் குவித்து வைத்து பாத்தி கட்டி அடிப்பது போல அவர்கள் சாப்பிட முடியாது. தினமும் காலை 11 மணிவரை தூங்கி வழிந்து பின்னர் பீட்சாவையும் பர்கரையும் விழுங்கிவிட்டு களத்தில் இறங்கிருந்தால் நேற்று கம்பீரமாக ஆடிய காம்பீர் மலிங்காவின் மின்னல்வேக யாக்கர்களுக்கு பதில் சொல்லியிருக்க முடியுமா? அதுபோல உலகத்தார் சர்வசாதாரணமாகச் செய்யும் பல காரியங்களை ஆவிக்குரியவர்களாகிய நாம், உன்னத வாழ்வுக்குத் தயாராகும் நாம் செய்ய முடியாது.
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் (1கொரி 9:25). என்னதான் பெருமை சேர்த்தாலும் உலகக்கோப்பை என்பது ஒரு உலோகக்கோப்பைதானே! ஆனால் நமக்கு வாக்குப்பண்ணப்பட்ட உன்னதக் கோப்பையோ கிறிஸ்துவோடு சிங்காசனத்தில் பங்கு அல்லவா பிரியமானவர்களே! அதன் மதிப்புக்கு ஆயிரம் கோடி பூமியை எழுதிக் கொடுத்தாலும் நிகராகாது. ஆனால் நாம் ஏசாவைப் போல இருந்து கொண்டு ஏசுவையும் பின்பற்ற முடியுமா?
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். (எபி 12:16,17)
இன்றிலிருந்து இச்சையும் வேண்டும் இயேசுவும் வேண்டும் என்ற அவல வாழ்க்கைக்கு ஆவியானவர் துணையோடு முடிவுகட்டி விடலாமா? பாவத்தோடு போராடும் விஷயத்தில் இரத்தம் சிந்துமளவுக்கு எதிர்த்து நிற்பதென்றால் என்ன என்று அந்த எல்லையை எட்டிப்பார்க்கும் அளவுக்கு நமக்கு தில் இருக்கிறதா?
திசைதிருப்பும் போதகங்களுக்கு “No” சொல்லுவோம்:
நமது இந்திய அணியினர் விளம்பரப் படங்களில் நடிப்பது நமக்குத் தெரிந்ததே! ஆனால் கோப்பைக் கனவை கடலில் கரைத்துவிட்டு நடிப்பதில் காசு பார்ப்பதே பிரதானமாகக் கொள்ளவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் அணியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருப்பார்கள். கிரிக்கெட் வெற்றி அவர்களது பிரதான நோக்கம். இடையிடையே கிடைத்த நேரத்தில் விளம்பரங்களில் நடித்து சம்பாதித்தார்கள். அவர்களது விளையாட்டையும் பயிற்சியையும் பாதிக்கும் அளவுக்கு அவர்கள் திரைப்படங்களிலோ அல்லது தொலைக்காட்சி தொடர்களிலோ நடிக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை. தங்கள் கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டார்கள். இன்று சாதித்துவிட்டார்கள்.
அதுபோலவே நமது நித்திய மகிமைக்கு நேரான பயணத்திலிருந்து பணத்தின் பக்கமாக திசை திருப்பும் எந்த கள்ள போதனைகளுக்கும் எச்சரிக்கையாய் இருப்போம். நமக்குப் பணம் தேவைதான், அதற்க்காகத்தான் நாம் கடினமாக வேலை செய்கிறோம். ஆனால் அதுவே நமது பிரதானக் குறிக்கோளாக மாறி நாம் நமது பந்தயப் பொருளை இழந்துவிடாதபடி எச்சரிக்கையாய் இருப்போம்.
பிரதான பயிற்ச்சியாளருக்குக் கீழ்ப்படிவோம்:
இந்திய அணியைப் பாராட்டியவர்கள் நமது கோச் கேரி கிறிஸ்டனைப் பாராட்டத் தவறவில்லை. கிறிஸ்டன் குறித்து வாசீம் அக்ரம் கூறிய கருத்து கீழே:
“உலகில் முதன்மையான பயிற்சியாளர்களில் கிறிஸ்டனும் ஒருவர். இந்திய அணி சமீப ஆண்டுகளில் சிறப்பாக ஆடியதற்கு கிறிஸ்டனின் பயிற்சியே காரணம்.அவர் தனது பணியை மிகவும் அர்ப்பணிப்போடு செய்து வந்தார்.அணி வீரர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆட செய்தார்.ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட திறமையையும் கண்டறிந்து அதை மேம்பட செய்தார். போட்டியின் போது எப்படி செயல்பட வேண்டும் என்று நல்ல ஆலோசனைகளையும் வழங்குவார். கிறிஸ்டன் விலகுவது இந்திய அணியை கடுமையாக பாதிக்கும்.அவருக்கு இணையான பயிற்சியாளரை கொண்டு வருவது கடினமாக இருக்கும்.”
வீரர்களின் தோளில் அமர்ந்து வெற்றிப்பவனி வரும்கேரி கிறிஸ்டன்:
அவர் தனது சொந்த நாட்டையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு வந்து உழைத்ததினாலும், அவருக்கு நமது வீரர்கள் கீழ்ப்படிந்ததாலும் கிடைத்த வெற்றியே இது. அவர் அதிகாலை ஆறு மணிக்கு பயிற்ச்சிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்க சேவாக்கும், தோனியும்,யுவராஜூம் 10 மணிவரை இழுத்துப் போர்த்துக்கொண்டு குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருப்பார்களானால் இந்த வெற்றி சாத்தியமாகியிருந்திருக்குமா? ஆனால் ஆவியானவர் அதிகாலை ஜெபத்துக்கு எழுப்பும்போதெல்லாம் அதை அலட்சியம் செய்யும் நம்மைப் போன்றவர்கள் களம் காண்பது எப்படி? அவர் எவ்வளவு காலம் நம்மிடம் பொறுமையாய் இருப்பார்?
வெண்கல வில்லும் நமது புயத்துக்கு வளையும்படி நமது கரங்களை யுத்தத்துக்கு பழக்குவிக்கிறவர் ஆவியானவர் அல்லவா? அவரையல்லவோ நாம் நமது பயிற்சியாளராகக் கொண்டிருக்கிறோம்!
சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.(சக 10:3) பாருங்கள்! கர்த்தர் யுத்த குதிரைகளை பரலோகத்திலிருந்து இறக்குமதி செய்யப் போவதில்லை சபையிலுள்ள ஆடுகளிலிருந்துதான் அவைகளை பிரித்தெடுத்து உருவாக்கப்போகிறார். நானும் நீங்களும் யுத்த குதிரைகளாக மாற ஆயத்தமா? அல்லது ஆடுகளாகவே இருக்கப் போகிறோமா?
கடைசியாக உலகக் கோப்பை வென்ற நமது வீரர்கள் உன்னதக் கோப்பையையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்காக ஜெபிப்போம். ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்தினாலும் அவனுக்கு லாபம் என்ன? கர்த்தர் தமது திருமுகத்தை நமது தேசத்தின்மேல் பிரகாசிக்கச் செய்து நம்மை ஆசீர்வதிப்பாராக!
நன்றி: நிழற்படங்கள் http://cricket.worldcup-live.com/ மற்றும் http://www.allvoices.com/
இந்திய வீரர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்;ஆனால் இரசிகர்களின் பார்வையிலிருந்து ஒன்றை நான் கற்றுக்கொண்டேன்; இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வின்னிங் ஷாட்டை அடித்த அடுத்த நொடி பட்டணத்தின் தெருக்களெங்கும் பட்டாசுகள் வெடித்தது;அப்போது இரவு சுமார் 10:30 மணி இருக்கும்;வீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் என்னால் முன்னேறவே முடியாமல் தவித்துப்போனேன்;அந்த அளவுக்கு இரசிகர்கள் தலைகால் புரியாமல் கூச்சலிட்டும் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றும் அங்காங்கு பட்டாசு வெடித்தும் செல்லும் வாகனங்களையெல்லாம் மறித்து வாழ்த்து சொல்லியும் தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
இதிலிருந்து ஒரு காரியத்தை நான் உணர்ந்தேன்;அதாவது இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்ற விசுவாசத்தின் கிரியையாக அந்த காரியம் சம்பவிக்கும் முன்பதாகவே பட்டாசுகளை வாங்கி ஒவ்வொரு இரசிகரும் ஸ்டாக் செய்துவிட்டார்; அவரவர் காசைப் போட்டு வாங்கியிருக்கிறார்;பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த பட்டாசுகளை வாங்க அரசாங்கத்திடம் மானியம் கோரி யாரும் உதவியை நாடவில்லை;அந்த பட்டாசுகளை வெடிக்க அரசாங்கத்திடம் யாரும் அனுமதியும் கேட்கவில்லை.யாரும் கட்டளையிடும் முன்பதாகவே செயல்பட்டிருக்கிறார்.
ஒரு கிறித்தவன் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்திய சமுதாயத்தினரின் இதுபோன்ற விழாக்காலங்களில் கற்றுக்கொள்ளவேண்டும்.
[[கடைசியாக உலகக் கோப்பை வென்ற நமது வீரர்கள் உன்னதக் கோப்பையையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்காக ஜெபிப்போம். ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்தினாலும் அவனுக்கு லாபம் என்ன?]]
That’s right!
உணர்வூட்டியதற்கு நன்றி
Wonderful thoughts Brother Martin…thanks!!!
Nice Thought Brother
தானியேல்.7 அதிகாரம்27.
வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்;
Yes … I agree and go with bro. S.MARTIN CFC CHENNAI …
“Praise the LORD” Brother Vijay.