உடல் என்னும் ஆலயம்

“உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம்” என்கிற வார்த்தை அப்போஸ்தலராகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபங்களில் மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது. மூன்று முறையும் அது ஒரு நினைப்பூட்டுதலின் வார்த்தையாக ஒரு எச்சரிப்புடனோ, அல்லது ஒரு ஆலோசனையுடனோ இணைந்து வருவதை நாம் காணலாம். 1 கொரி 3:16,17, 1 கொரி 6:15-20 , 2 கொரி 6:14-18 இந்த மூன்று வேதபகுதிகளையும் வாசித்துப் பார்த்தால் இதை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் “உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம்” என்ற சத்தியம் அவர்களுக்கு ஏற்கனவே தெளிவாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது. வெவ்வேறு மார்க்கங்களில் இருந்து வந்த ஆதிக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இந்த சத்தியம் முதன் முதலாக போதிக்கப்பட்டபோது அது அவர்களுக்க அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். காரணம் யூதர்களுக்கும் சரி, மற்ற மார்க்கத்தினருக்கும் சரி ஆலயம் என்பது நடுக்கத்துக்கும், பயபக்திக்கும் உரிய புனிதமான இடமாகும்.

“இனி உங்கள் உடல்தான் சர்வவல்லவர் வசிக்கும் ஆலயம்” என்று இந்த புதிய மார்க்கம் சொன்னபோது அவர்கள் அதிர்ந்திருப்பார்கள், வியந்திருப்பார்கள், நிறையவே விவாதித்திருப்பார்கள், தியானித்திருப்பார்கள், தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து தேவனைத் துதித்திருப்பார்கள், சக சகோதரனையோ, சகோதரியையோ பார்க்கும்போது இந்த எண்ணமே அவர்களை ஆக்கிரமித்திருக்கும். அதனிமித்தம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மரியாதை பல மடங்கு உயர்ந்திருக்கும். மொத்தத்தில் இந்த சத்தியம் அவர்களுக்குள் ஒரு உள்ளான புரட்சியையே ஏற்படுத்தியிருந்திருக்கும்.

அக்கால திருச்சபை வேகமாக வளர்ந்து வந்தபடியால் புதிதாக ஆத்துமாக்கள் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். அதில் இந்த வசனத்தை சரியாக உள்வாங்காத சிலர் பழைய பாவங்களோடு போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு இந்த சத்தியத்தை நினைப்பூட்டி, எச்சரிக்க வேண்டிய அவசியம் பவுலுக்கு ஏற்பட்டிருக்கலாம். கொரிந்து சபையில் இந்தப் பிரச்சனை இருந்ததை 1 கொரிந்தியர் 5-ஆம் அதிகாரமும் உறுதிப்படுத்துகிறது. அந்த நினைப்பூட்டிய வசனத்தைத்தான் இன்று நாம் வேதத்தில் படிக்கிறோம், அதை எடுத்து பிரசங்கமும் செய்கிறோம்.

சத்தியம் உணவைப் போன்றது. அதை நாம் ருசித்து மென்று விழுங்க வேண்டும், அது நமக்குள் ஜீரணிக்க வேண்டும். உணவு சக்தியாக மாறி இரத்தத்தில் பரவுவது போல, அந்த சத்தியத்தின் அறிவு உணர்வாக மாறி நமது ஆத்துமா, சரீரமெங்கும் பரவவேண்டும், அப்பொழுதுதான் அந்த சத்தியம் நம்மில் பலன் கொடுக்கும். ஆனால் இன்று வேதவசனம் உணவாக உட்கொள்ளப்படுவதில்லை, அது தகவலாக ஒரு மூளைக்குள் இருந்து இன்னொரு மூளைக்குள் வீசி எறியப்படுகிறது. எனவேதான் அது கேட்பவர்களுக்கு பலன்கொடுப்பதில்லை, பிரசங்கிப்பவர்களிடமும் கனிகள் இல்லை.

“உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம்” என்பதை ஒரு தகவலாக மட்டும் அறிந்து வைத்திருக்கும் ஒரு நவீன கிறிஸ்தவனிடம் போய் “ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்” என்று பிரசங்கிக்கும்போது அவனுக்குள் அது குற்ற உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்துமேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

முதலாவது நாம் “நாம் கிறிஸ்துவுக்குள் யாராக இருக்கிறோம்?, ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தால் உண்டான இரட்சிப்பு நமக்குள் எதையெல்லாம் செய்திருக்கிறது? என்பதை ஆவியானவரின் ஒத்தாசையோடு சரியாக புரிந்துகொள்ள வேண்டியதும், அந்த சத்தியத்தை ஜீரணிக்க வேண்டியதும் அவசியமாயிருக்கிறது. அதன் விளைவாக நமது மனம் மறுரூபமடையும், நாம் புதிய சிருஷ்டிகளாக வாழத்துவங்குவோம். இதுதான் பலன் கொடுக்குமேயன்றி, இதுதான் நம்மை ஆவிக்குரிய வாலிபர்களாக வளர்க்குமேயன்றி பிரசங்க பீடத்தில் நின்று மிரட்டுவதாலும், நரகம் மற்றும் நியாயத்தீர்ப்பைச் சொல்லி பயமுறுத்துவதாலும் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை.

1 thought on “உடல் என்னும் ஆலயம்”

  1. அவனைக்கெடுப்பார் என்பது எனது வியூகத்தில் “அவனால் செய்யப்படுகிற ஆவிக்குரிய காரியங்களை கெடுப்பார் அதாவது தேவன் விரும்புவதில்லை” என்பதாகும்.

Leave a Reply