உங்கள் கையிலிருக்கும் கல்லை கீழே போடுங்கள்!

முறையற்ற காதலுக்காக தனது இரு பச்சைக் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி விஷம் வைத்துக் கொன்ற அபிராமி என்ற பெண்ணைக் குறித்த செய்தி இன்று தமிழகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவரது முகநூல் பக்கத்தைப் பார்த்தால் அவரும் ஒரு சராசரியான மனுஷிதான் என்பது புலப்படுகிறது. நம் எல்லோரையும் போல் மனிதாபிமானமிக்க பல பதிவுகளை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா குழந்தைகளுக்காக பரிதபித்திருக்கிறார், தான் நஞ்சு வைத்துக் கொன்ற தனது குழந்தையை தூக்கிவைத்து ஒரு சராசரித் தாயைப்போல கொஞ்சி மகிழ்கிறார். இரு குழந்தைகளைப் பெற்று வளர்த்து எல்லோரையும்போல குடும்பம் நடத்தி வந்த இவருக்கு திடீரென்று என்னதான் ஆனது?

“தவறு செய்வதற்கான வாய்ப்பு வரும் வரை அனைவரும் நல்லவர்களே!” என்று சொல்வார்கள். அது அபிராமிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பொருந்தும். எல்லோரும் முறையற்ற காதலில் விழுவதில்லை ஆனால் சிறிதோ, பெரிதோ வேறு ஏதோ ஒரு தவறை திடீரென செய்துவிடுகிறோம். அந்தத் தவறை செய்யும்வரை நாமும் அந்த தவறைச் செய்வோம் என்று நமக்கே தெரியாது. அதற்கு முன் அதே தவறை செய்த அனேகரை விமர்ச்சித்திருப்போம், அறிவுரையும் கூறியிருந்திருப்போம். அபிராமி செய்தது மகா பயங்கர பாதகச் செயலாக இருக்கலாம், ஆனால் முறையற்ற காதலுக்காக தன் குடும்பத்தை காவு கொடுத்த பல பெண்களை சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே அபிராமிகூட விமர்ச்சித்திருந்திருக்கக் கூடும்!

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? நமக்கு பிரதான தேவை “மனத்தாழ்மை”. அபிராமியை விட அல்லது, ஊடக வெளிச்சத்தில் வெளியரங்கமாக்கப்பட்ட மற்ற குற்றவாளிகளை விட வெளியில் இருக்கும் மற்றவர்கள் யாருமோ, நானோ, நீங்களோ நல்லவர்கள் அல்ல. எல்லா மனிதர்களின் மாம்சத்தினுள்ளும் ஒரு கிரிமினல் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான். நாம் நிர்மூலமாகாமல் இருப்பது கர்த்தருடைய கிருபை அவ்வளவே! அதைத் தவிர வேறொன்றுமில்லை.

இன்று அபிராமியை விமர்ச்சிக்கும் யாரும் நாளை அதே பாதகத்தை செய்யலாம், மாம்சம் அவ்வளவு கொடியது, நாளை இதே அபிராமி சிறையிலிருக்கும்போதே மனந்திரும்பி இரட்சிக்கவும் படலாம், கர்த்தருடைய கிருபை அவ்வளவு வலியது!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமது பாவங்களை நமது இரத்தத்தால் கழுவி, தனது நீதியை நமக்கு தரிப்பித்து நம்மை இரட்சிப்பினால் அலங்கரித்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரை அனுப்பி நம்மை கண்மணிபோல பாதுகாத்துக் கொண்டு வருகிறார். அதனால்தான் நாம் நீதிமான்களாக, சுத்தவான்களாக, பக்திமான்களாக வலம் வருகிறோம். அவர் இல்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லை. இந்தத் தாழ்மையின் சிந்தை எப்போதும் நமக்குள் இருக்கட்டும்!

1 thought on “உங்கள் கையிலிருக்கும் கல்லை கீழே போடுங்கள்!”

Leave a Reply