இக்கட்டுரையை வாசிப்பதற்கு முன்னால் தயவுசெய்து இக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு பின்னர் இதைத் தொடரவும்.
முதல் பாகம்: http://wp.me/pSfJW-mv
அந்நிய பாஷை பேசும்போது மாத்திரமல்ல…
அல்லேலூயா, ஆமென் போடும்போது மாத்திரமல்ல…
பிரசங்கம் பண்ணும்போது மாத்திரமல்ல…
திருவிருந்து வாங்கும்போது மாத்திரமல்ல…
ஊமையனுக்காகவும், திக்கற்றவர்களாயிருக்கும் எல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற என்று நீதிமொழிகள் 31:8 சொல்லுகிறது. இது ஆவிக்குரியது மாத்திரமல்ல ஆண்டவரின் கட்டளையும்கூட.
Image Courtesy: static.guim.co.uk
நொடிக்கு ஒருமுறை இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும் விசுவாசிகளிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். உங்கள் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள். அங்கே நம் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்படுவதைக் கண்டும், மிருகங்களைப்போல வரிசையாக பிணங்கள் கிடத்தி வைத்திருப்பது கண்டும் முற்றாக நொறுங்கிப்போய் தேவசமூகத்தில் முடங்கிய முழங்கால்கள் எத்தனை? வீதியெங்கும் மூர்ச்சித்துக் கிடந்த மழலைகளுக்காய் நதியளவு கண்ணீர்விட்ட கண்கள் எத்தனை? மிச்சமிருந்த அப்பாவிகளின் ஜீவனுக்காக போர்நிறுத்தம் வேண்டி உணவை துறந்து உபவாசமிருந்த உணர்வுள்ள உள்ளங்கள் எத்தனை? ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த சூழலில் சாதாரண மனிதனும் செய்யக்கூடிய இதில் ஒன்றைக்கூட செய்திருக்கவில்லையானால் நம்மை யாரேனும் “அட வெள்ளையடிக்கபட்ட கல்லறையே!” என்று அழைத்தால் அதில் ஏதேனும் தவறிருக்குமா?
அடுத்ததாக சபைகளுக்கு இந்தக் கேள்வி: பாஸ்டருக்கு எறும்பு கடித்தால் கூட “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்… (யோவேல் 2:15-17)என்று போஸ்டர் அடித்து உபவாசம், ஜெபம் என்று எல்லோரையும் கலங்கடிக்கும் ஆவிக்குரிய சபைகள் சமகாலத்தில் வெகு அருகாமையில் சொந்த ஜனங்கள் இரத்தம் சிந்தியபோது செய்தது என்ன?
2002-இல் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரபட்டபோது பொங்கிக்கொண்டு வந்த வீரமும் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த உபவாசங்களும் ஜெபங்களும், கண்டண அறிக்கைகளும், போராட்டங்களும் இலங்கையிலிருந்து அபயக்குரல் கேட்கும்போது எங்கே போனது?
யுத்தம் வேறு , ஊழியத்துக்கு விரோதமான பிசாசின் அழுத்தம் வேறு என்று சொல்பவர்களுக்கு…
மதமாற்றத் தடைச்சட்டம் சுவிசேஷத்துக்கும் சபைகளுக்கும் எதிரானது என்றால் மனித உயிர்கள் கொல்லப்படுவது சபைகளுக்கு ஆதரவானதா? போருக்கும், இனக்கலவரங்களுக்கும், பயங்கரவாதங்களுக்கும் மனித உயிர்களை பறிகொடுத்துவிட்டு கல்லறைகளுக்கா இயேசுவை அறிவிக்கப்போகிறோம்?
கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை எதிர்த்து 72 மணிநேர உபவாசத்தில் எல்லோரும் ஒன்றுகூடியது நினைவிருக்கிறதா? ஜெபம்பண்ணி சிலகாலத்துக்குள் அச்சட்டம் அறவே நீக்கபட்ட பின்னர் அது ஜெபத்துக்கு தேவன் அளித்த பதில் என்று ஒன்றுசேர்ந்து எல்லோரும் கொண்டாடியது நினைவிருக்கிறதா? இப்போது சொல்லுங்கள் எது முக்கியம் ஊழியமா? மனித உயிரா?
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத் 23:17) என அன்று இயேசு கேட்டது போல இன்று உங்களிடம் “ஆத்துமாக்களுக்கு செய்யும் ஊழியமா?” அல்லது “ஊழியத்தைக் கொள்ளும் ஆத்துமாக்களா?” எது முக்கியம் என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? தமிழருக்கு மாத்திரமல்ல, தெலுங்கருக்கும், மலையாளிக்கும், மார்வாடிக்கும். மராட்டியருக்கும் ஏன் சிங்களவருக்கும்கூட நாம் பாரபட்சமின்றி ஜெபிக்க வேண்டியவர்கள், அநியாயம் யாரால் யாருக்கு நடந்தாலும் அங்கே சபை தனது காலைப் பதித்தாகவேண்டும். ஏனென்றால் பரலோக அரசரின் பூலோக அலுவலகமே சபை! தேவன் தனது நீதியை பூமியில் செலுத்த விரும்பினால் அதை சபை மூலமாகவே செய்ய விரும்புகிறார்.
கிறிஸ்தவ சபைகளுக்கு முன்மாதிரியான ஆதித்திருச்சபையினர் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டார்களா? நாம் எப்படி தலையிட முடியும் என்று கேட்பவர்களுக்கு…
ஆதித்திருச்பையினர் சொற்ப எண்ணிக்கையுள்ளவர்கள். அரசாலும் மதத்தாலும் கொடூரமாய் நசுக்கபட்டவர்கள். இதைப் புரிந்துகொள்ள யூதர்களின் வரலாற்றைப் பாருங்கள்! யூதர்கள் அந்நியரிடம் அடிமைகளாய் நசுக்கப்பட்ட காலங்களும் உண்டு, அதே யூதர்கள் அந்நிய அரசர்கள் ஆண்ட காலத்திலேயே செல்வாக்குள்ளவர்களாய் கோலோச்சிய காலங்களும் உண்டு. யோசேப்பு, எஸ்தர், மொர்தேகாய், தானியேல், நெகேமியா என்று தேவசித்தத்தை அரசர்கள் மூலம் செயல்படுத்திய பலரை வரிசைப்படுத்தலாம். நசுக்கப்பட்டிருந்த காலங்களைக்குறித்து கர்த்தர் கேள்வி கேட்கமாட்டார். ஆனால் பெரும்பான்மை சக்தியாக பலம் பெற்று அதிகார மையங்களில் பேசும் அளவுக்கு பெலப்படும்போது சபை கர்த்தரின் குரலை அரசாங்கங்களிடம் எடுத்துச் செல்லவேண்டும், பரலோக நீதியைக்கொண்டு சமுதாயத்தை பாதித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் தேவனுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும்.
ஐரோப்பிய நாடாளுமன்றங்களை தேவமனிதர்களான ப்யூரிட்டன்கள்(puritans)ஆட்டிவைத்த சரித்திரங்களை வரலாற்றில் வாசித்துப்பாருங்கள். உடன்கட்டை ஏறும் வன்கொடுமையை எதிர்த்து வில்லியம் கேரி செய்த புரட்சியை எண்ணிப்பாருங்கள்! அதன்மூலம் கொடூர சாவுக்கு இரையாகாமல் பாதுகாக்கப்பட்ட விதவை உயிர்கள் எத்தனை! மாராப்பு அணியக்கூட உரிமை பறிக்கபட்ட ஒடுக்கபட்ட பெண்களுக்காக போராடி சட்டங்களை மாற்றிய ரிங்கல் தோபேயை நினைவுகூறுங்கள்!
Image Courtesy: news.vellorecity.com
இன்று தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சபைகள் ஒரு மாபெரும் சக்தி! ஆனால் ஏழைக்குடிகளை சீரழிக்கும் மதுபானத்தை நீங்களே விற்காதீர்கள் என்ற வேண்டுகோளை அரசாங்கத்துக்கு வைக்க இங்கே யாருக்கு துணிவிருக்கிறது?
பெரும்பான்மை சக்தியாக இல்லாதிருக்கும் காலத்திலும் கூட கேட்டாலும் கேளாவிட்டாலும் தேவனுடைய குரல் தேசத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கவேண்டும்.
Image Courtesy: www.ellenwhite.info
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள் (எரேமியா 22:29) என்ற எரேமியாக்களின் சத்தம் தொனித்துக்கொண்டே இருக்கவேண்டும். புத்திசொன்னால் கேட்டுக்கொள்ளும் தாவீதுகள் இருந்தாலும் சரி, புத்திசொன்னால் கழுத்தை வெட்டும் ஏரோதுகள் இருந்தாலும் சரி. தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய குரலை தேசத்தின் அதிபதிகளுக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும்.
இலங்கையில் நடந்த இன அழிப்பையும் எஸ்தர் புத்தகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆபத்துதான். அன்று தேவஜனங்கள் உயிரை துச்சமாக மதித்து தங்கள் இனத்தைக் காப்பதற்காக துடிப்போடு போராடியபடியால் ஒரு மாபெரும் இன அழிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த மொர்தேகாய் போன்ற சபைதலைவன் இன்று நமக்கு இல்லையே!
இன்று எரிகிற வீட்டில் பிடுங்கும் ஆகான்களும், ஆமேன் அல்லேலுயாக்களுக்காக கூத்தாடும் ஆமான்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் தன் சொந்த ஜனத்தைக் காப்பாற்ற வஸ்திரத்தை கிழித்து சாம்பலில் உட்காரும் மொர்தேகாய்கள் இல்லை.ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த காலத்தில் தமிழகத்தில் மாபெரும் சிறுபான்மை ஓட்டுவங்கியுள்ள கிறிஸ்தவம், சிறுபான்மையினருக்கு சாதகமான அரசு இருந்தும் சிறு அழுத்தம்கூட கொடுக்க முன்வரவில்லை என்பது வரலாற்று உண்மை. வழக்கம்போல கத்தோலிக்கர்கள் மாத்திரமே களத்தில் இறங்கி போராடினார்கள். ஆவிக்குரிய சபைகளோ போதகர்களோ ஒன்றுசேரவும் இல்லை, வாய்திறக்கவும் இல்லை. இனி யாராவது தன்னை ஆவிக்குரிய தலைவன் என்று சொல்லிக்கொண்டு “திக்கற்றவர்களின் தேவன்” தந்த வேதத்தை கையில் பிடித்துக்கொண்டு பிரசங்கபீடங்களில் ஏறினால் அந்த பிரசங்கபீடங்கள் சொல்லும், …”ச்சீ! வெட்கக்கேடு!!”
இஸ்ரவேலை இருப்புக்கோலால் ஆண்ட யெசேபேலுக்கு எதிராக களங்கண்ட எலியாக்களும், ஒழுக்கங்கெட்ட திருமணவாழ்க்கை வாழ்ந்த ஏரோதுகளை பிடித்து உலுக்கிய யோவான் ஸ்நானகன்களும் இன்று எங்கே? அந்தோ! இக்கால பேராயர்கள் பலரும், தீர்க்கதரிசிகளும் கொடுங்கோல் யெசபேல்களுக்கும், பலதார ஏரோதுகளுக்கும் அடிமைகளாக சரணடைந்துவிட்டார்கள்!கர்த்தாவே உமது வார்த்தைகளை கலப்பின்றி முழங்கும் துணிவுமிக்க தீர்க்கர்களை எழுப்பும்!!
பெண்கள் மார்பகங்கள் அறுக்கபட்டு, பிறப்பு உறுப்புகள் சிதைக்கபட்டு, கர்ப்பிணிகளின் வயிறுகள் கிழிக்கபட்டு சிசுக்கள் பூட்ஸ் காலில் நசுக்கபட்டு அவர்கள் உதவிக்காக கதறும்போது இதெல்லாம் கடைசிகால அடையாளமென்றும் இயேசுவின் வருகைக்கான முன்னறிவிப்பு என்றும் பதில் சொல்வோமானால் நாளை நம் வீட்டுப் பெண்களுக்கு இதே கதி நேர்ந்து, நாம் உதவிக்காகவும் ஆதரவுக்காகவும் அபயமிடும்போது நமக்கும் இதே பதிலே சொல்லப்படும். கிறிஸ்தவம் என்பது அடுத்தவனுக்கு நேரும் இன்னல்களைக் கண்டு வேதஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதல்ல, நம் ஜீவனைக்கொடுத்தேனும் அவனைக் காப்பாற்றுவது!
இந்த கட்டுரை சபைகளையோ சபைத் தலைவர்களையோ இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. ஒரு குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறதா? அதன் புலன்கள் நன்கு வேலைசெய்கிறதா? என்று சோதித்துப்பார்ப்பார்கள். அது தூண்டப்படும்போது எப்படி நடந்துகொள்ளுகிறது என்பதைக்கொண்டே அதன் புலனுறுப்புகள் நன்றாக வேலைசெய்கிறதா என்று அறியப்படுகிறது. தமிழக சபைகளின் ஆவிக்குரிய புலன்கள் செத்துவிட்டது என்ற விஷயம் அது தன்னைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களுக்கு ஊமையாகவும், குருடாகவும், செவிடாகவும் மாறிப்போனதால் தெளிவாகிறது. அதுவும் சொந்த மொழிபேசும் இனம் வரலாறு காணாத இன்னலை சந்தித்தபோது காத்த மவுனத்தை வரலாறு மன்னிக்காது.
கடைசியாக ஒரு தனிப்பட்ட விசுவாசியாகவும் சபையாகவும் இதுபோன்ற சூழலில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதில்:
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே (மத் 22:37-39)
ஒரு சாதாரண, சாமானிய விசுவாசியாக நம்மை நாம் நேசிப்பதுபோல பாதிக்கபட்டவர்களை நேசிப்பதேயாகும். அவர்கள் படும் துன்பத்தை நாம் படும் துன்பம்போல உணர்ந்து அவர்களுக்காக ஜெபிப்பதும் முடிந்த உதவிகளை செய்வதுமாகும். அப்படிப்பட்ட களங்கமற்ற, மாசற்ற அன்பில் பிறக்கும் கண்ணீரும், ஜெபமும் பரலோக தேவனுடைய கரத்தை அசைக்க வல்லது. அப்படிப்பட்டதே ஆதிச்சபையாரின் அன்பு! அடுத்தவர் பிரச்சனையை கண்டும் காணாததுபோல செல்லும் கிறிஸ்தவன் முதல் கற்பனைக்கு கீழ்படுவதுபோல நடித்துக்கொண்டு இரண்டாம் கற்பனையை காலில் போட்டு மிதிக்கிறவனாவான். அப்படிப்பட்டவர்களே நல்ல சமாரியன் கதையில் வரும் லேவியரும், ஆசாரியருமாவார்கள்!
அடுத்தவர் பிரச்சனைக்காக கதறியழும் சபையிலிருந்தே தேவனுடைய நீதியின் குரல் அந்த சபைத்தலைவர்கள் மூலமாக அதிபதிகளையும் சிங்காசனங்களையும் உலுக்கும். ஆம்! சபைத்தலைவர்கள் தேவராஜ்ஜியத்தின் நீதியை அதிபதிகளிடம் சற்றும் பயமின்றி ஒரே குரலில் எடுத்துரைப்பவர்களாக இருக்கவேண்டும். அதுவே தேவன் அரசாளும் கிறிஸ்தவம்! மற்றெதெல்லாம் கிறிஸ்தவன் என்ற போர்வையில் இருந்தாலும் அது பாபிலோன்! பாபிலோன்! பாபிலோன்!
முற்றும்
சகோ.விஜய்
Heart breaking, mind breaking article.this is the time the believers should wake up and act.
நன்றி சகோ.விஜய்.
நான் ஆச்சரியப்படும் ஒரு காரியம். ஒரே ஊரில் 5 சபைகள் இருக்கும்,ஆனால் இந்த 5 சபைக்குள்ளும்
ஒற்றுமை இருக்காது. ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டிருப்பர்.
இந்துக்கள் ஆயிரம் கடவுள்களை வணங்குகிறார்கள் ஆனால் அவர்கள் ஒற்றுமயுடன் இருக்கிறார்கள்.
ஒரே கடவுளை வணங்கும் நமக்குள் ஏன் ஒற்றுமயில்லை.?
நம்மை ராஜாக்களாக, லேவியராக ஆண்டவர் தெரிந்து கொண்டார்…ராஜா என்றால் நாட்டை
ஆள வேண்டும். ஆனால் அந்த தையிரியம் யாரிடமும் இல்லை. 2தீமத்தேயு 1:7 கூறுகிறது
தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையேக்
கொடுத்திருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று ஒரு கருத்து இருக்கிறது.அது தவறு.
அதிகாரங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள் கையிலிருந்தால் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள்
இடமாற்றமில்லாமல் தங்கள் பணியை செய்வார்கள்.
கர்த்தர் உங்கள் ஊழியத்தை மேன்மைபடுத்துவாராக.
அன்புடன்
CPRaj
அருமையான கருத்து நன்றி
Dear vijay,
first of all thank you for your article. I am a Sri Lankan, but now i am living abroad.
As you mentioned in your article, if a christian refuses to pray, to stand for justice in war-situations, then he/ she has to give account before God.
You refered the bible-vers saying there is no greater love than to give the own life for a friend.You brought this in connection with the man, who set himself on fire.But bibically seen its a suicide. Bible did not say to stand in for justice on a evil way.
Furthermore i accept that showing up the faults of a society is an imoprtant duty of a christian.
But such a christian should show up the faults of both sides and bring them into light. But talking only for one side and giving voice for the needs and sorrows of only one side, is not suitable to a christian.
In the bible God had a particular position in every war situation. So every christian should first of all try to find out on which side God is standing in current war-issues. And for a christian its also important to understand why the war is taking place and till which point God is allowing the war .
May God bless you,
Kristha