இவ்வுலகின் சட்டங்கள் பொதுவானவை அது குற்றத்தை மட்டுமே பார்த்து எல்லோருக்கும் பொதுவான தண்டனை வழங்கும். ஆனால் இறைச்சட்டம் மிக நுண்ணியது, அது குற்றத்தை மட்டுமல்ல குற்றவாளியையும் நிதானித்தே தண்டனை வழங்கக்கூடியது.
இறைச் சட்டத்தின் சுருக்கம் இதுதான்: நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் (மத்தேயு 7:2)
அன்பினாலும் இரக்கத்தினாலும் நிறைந்து மற்றவர்களுடைய குற்றங்களை பொறுமையோடு கடந்து சென்றவர்கள் தாங்கள் பெரிய தவறிழைக்கும்போதுகூட அதே மாதிரியான இரக்கத்தை தேவனிடமிருந்து பெறுகிறார்கள்.
நமது சுயநீதியில் அகங்காரம் கொண்டு அடுத்தவர்களது சிறு தவறுகளைக்கூட வெளிச்சம்போட்டு காட்டி அவர்களை நியாயந்தீர்த்தால் அதேவிதமான தீர்ப்பின்படியே நாமும் தீர்க்கப்படுவோம். இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும் (யாக் 2:13) என் வாழ்க்கையில் இதை அனுபவித்ததால் என்னால் இதை இங்கே எழுத முடிகிறது.
எனவே பரிசேயத்தனமாகப் பேசுவதையும், சுயநீதியின் அகங்காரத்தோடு சமூகவலைதளங்களில் பதிவிடுவதையும் தவிர்ப்போம். அது நமது இருக்கைக்குக் கீழே நாமே வெடி வைத்துக் கொள்வதற்குச் சமம்!
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபே 4:29)