இருள், ஒளி மற்றும் மாயை

இவ்வுலகில் அத்தனையும் இருமைத் தன்மை கொண்டது. இருளும் ஒளியும் எதிரெதிரானதுதான் ஆனால் வெளிச்சமின்மைதான் இருள் என்பதிலிருந்தே இவற்றின் இருமைத் தன்மை விளங்கும். நீங்கள் வெளிச்சத்தை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் செல்லுகிறீர்களோ அவ்வளவாக இருளையும் புரிந்து கொள்வீர்கள், நீங்கள் இருளை நோக்கி எவ்வளவு ஆழமாகச் செல்லுகிறீர்களோ வெளிச்சத்தையும் புரிந்துகொள்ள இயலும். இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு பூமியை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களால்தான் இந்த இரண்டையுமே புரிந்துகொள்ள முடியாது.

பில்லி சூனியம் போன்ற பிசாசின் கிரியைகளில் ஈடுபடுவோரால் அவ்விடத்தில் இருக்கும் ஒரு தேவ மனிதனை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த மனிதன் இருக்கும்வரை அவர்களால் அங்கு கிரியை செய்ய முடியாது. சாது சுந்தர்சிங் போன்றோரின் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடந்ததை நம்மால் அவரது சரிதையில் வாசிக்கமுடிகிறது. அந்த மந்திரவாதிகள் வேதத்தை வாசிப்பவர்கள் அல்ல, ஆனால் ஒரு வெளிச்சத்தின் பிள்ளையை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலும்.ஆனால் அதே இடத்தில் இருந்த சாதாரண மனிதர்களால் சாது சுந்தர்சிங்கை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

பவுல் தேவனை மட்டுமே அறிந்தவர்தான், ஆனாலும் தன்னை உயர்த்திப் பேசிய பிசாசை ஒரு நொடியில் அடையாளம் கண்டு சினங்கொண்டு திரும்பிப்பார்த்ததை நாம் அப்போஸ்தலர் 16:18-இல் வாசிக்க முடிகிறது. பிசாசு பிடித்து கல்லறையில் கட்டப்பட்டிருந்த மனிதனால் தூரத்தில் நடந்து வந்த தேவகுமாரனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் வேதத்தை எழுத்தளவில் மாத்திரம் கரைத்துக் குடித்த பரிசேய சதுசேயர்கள் அவரை அறியாமலும், ஏற்றுக் கொள்ளாமலும் இருந்தார்கள்.

பவுல் demonology படிக்கவில்லை, ஆனாலும் சாத்தானுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே என்று 2 கொரி 2:11-இல் சொல்லுகிறார். இருளை நோக்கி செல்வது மகா ஆபத்தானது, ஆனாலும் பில்லிசூனியத்தில் ஈடுபட்டிருந்த எத்தனையோ பேர் தேவனை அறிந்துகொண்டு அவரண்டை வந்து விழுந்த சாட்சிகளை நம்மால் கேட்கமுடியும். வெளிச்சமும் இருளும் நேரடியானவைகள், வெளிச்சம் இருளையும், இருள் வெளிச்சத்தையும் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் இந்த உலகம்தான் மாயையானது. அது இரண்டையுமே மறைத்து தான் மட்டுமே இருப்பதாக் காட்டிக்கொள்ளும். மனிதனை லவோதிக்கேய வெதுவெதுப்பில் கட்டிவைத்துவிடும்.

Leave a Reply