வாட்ச்மென்
நீங்கள் முதல் பாகத்தை வாசிக்காவிடில் அதை வாசிக்க இங்கே சொடுக்கவும்
நாடகத்தின் நான்கு பாகங்களையும் பார்த்த ”இன்றைய கிறிஸ்தவன்” (அவனுடைய பெயர் இந்தப் பாகத்தில் அடிக்கடி வரப்போகிறபடியால் இனி சுருக்கமாக அவனைக் “கிறிஸ்தவன்” என்றே அழைக்கலாம்) வெகுவாக மனம் உடைந்து போனான். “தேவனுடைய ஜனங்கள் எல்லாக் காலங்களிலும் அவரைத் தள்ளிவிட்டு அவருக்கு எதிரானவைகளையே தெரிந்து கொள்ளுகிறார்கள்”. அவரைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு அவரிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்களோ! (எரே 2:6) என்று நொந்தவனாய் தன் இருக்கையை விட்டு எழுந்தான் அப்போது….
<திரை விலகுகிறது>
மேடையில் நாடகத்தின் இயக்குநராகிய இயேசு கிறிஸ்து நிற்கிறார். ”மகனே பொறு!…” நாடகத்தில் இன்னும் ஒரு பாகம் மிச்சமிருக்கிறது” என்றார். உடனே கிறிஸ்தவன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான்.
”இல்லை மகனே! சற்று மேடைக்கு வருகிறாயா? ஏனனில் இந்தப் பாகத்தின் கதாநாயகனே நீதான்” என்றார். கிறிஸ்தவன் சற்று வெலவெலத்துப் போனான். “ஆண்டவரே ந்நா…நானா?? எனக்கு நாடகத்தின் வசனமொன்றும் தெரியாதே! எந்த ஒத்திகையும் இல்லாமல் நான்..எப்படி???
பயப்படாதே! இந்தப் பாகத்துக்கு ஒத்திகையொன்றும் தேவையில்லை. இந்த முழு உலகெங்கும் பரவிக் கிடக்கும் என் சரீரமாகிய என் ஜனத்தின் பிரதிநிதியாகவும். இந்த நாடகத்தைக் கட்டுரை வடிவில் வடித்த என் அடிமையின் (என்னைத்தான்) பிரதிநிதியாகவும். அந்தக் கட்டுரையை வாசித்து இந்த நாடகத்தைத் தன் மனத்திரையில் கண்டு கொண்டிருக்கும் என் செல்லப் பிள்ளையின் (உங்களைத்தான்) பிரதிநிதியாகவும் தயங்காமல் நீயே மேடைக்கு வா!!
வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்:
தயங்கியபடியே கிறிஸ்தவன் எழுந்து மேடையில் ஏறினான். மேடையில் ஏறி பின்னால் திரும்பியவன் அதிர்ந்தான். காரணம் சென்ற பாகங்களில் நடித்த பாத்திரங்கள் அனைவரும் தங்கள் வேஷத்தைக் கலைக்காமல் இப்போது அரங்கத்தில் அமர்ந்திருந்தனர், அரங்கம் இப்போது நிரம்பி விட்டிருந்தது. முதல் வரிசையில் தோல் உடை தரித்தவர்களாய் ஆதாம் ஏவாள் பாத்திரங்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்த இருக்கையில் மோசே, யோசுவா, காலேப், எலியா என்று எல்லாப் பாத்திரங்களும் இஸ்ரவேல் புத்திரராக நடித்த திரளான மக்களும் அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். கிறிஸ்தவனுக்கு தனக்கு முன்னால் பந்தயத்தில் ஓடியவர்கள் இப்போது தான் பந்தயத்தில் ஓடுவதைப் பார்வையாளராக அமர்ந்து பார்ப்பது போல இருந்தது.
கிறிஸ்தவன் மேடையில் ஏறியவுடன் இயேசு அவனை இறுகக் கட்டித் தழுவினார். அவன் நெற்றியில் முத்தமிட்டார். பார்வையாளர்கள் அதைக் கண்டதும் உற்சாகமாக அரங்கம் அதிருமளவுக்கு கரவொலி எழுப்பினர். கிறிஸ்தவன் ஒரு வினாடி இயேசுவின் கண்களை உற்றுப் பார்த்தான். அவருடைய அன்பும் கனிவுமான பார்வை அவனுக்குள் ஆயிரம் மின்னல்களைப் பாய்ச்சியது போல இருந்தது. “உனக்காக ஒருமுறை என்னடா! இலட்சம் முறைகூட மரிக்க நான் ஆயத்தம்” என்பதை அவரது கண்கள் சொல்லாமல் சொல்லியது.
”மகனே நீ எப்படி இரட்சிக்கப்பட்டாய்? உனது சாட்சியை சுருக்கமாகச் சொல்வாயா?” என்றார்
அதற்கு கிறிஸ்தவன். “ஆண்டவரே! நான் எனது 30 ஆவது வயதில் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் கைவிட்டார்கள். மரணம் உறுதியாயிற்று. அந்த நேரத்தில் என் வீட்டுக்கு வந்த ஒரு சகோதரி எனக்காக பாரத்துடன் ஜெபித்தார்கள். மருத்துவர்கள் அதிசயிக்கும்படி நான் பரிபூரணமாக சுகமானேன். அந்த சகோதரி எனக்கு தந்த புதிய ஏற்பாட்டை வாசித்து உம்மை நான் எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்” என்றான்.
இயேசு’ “நீ என்னுடையவனாக மாறிய அந்த இனிமையான நாள் எனக்கும் நினைவிருக்கிறது. அது ஆகஸ்ட் 16,1996. நீ எங்கள் குடும்பத்தில் ஒருவனான செய்தியை நான் பரலோகத்தில் உரக்க அறிவித்த போது அங்கே நடைபெற்ற கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதும் நினைவிலிருக்கும். உன்னைக் குடும்பத்தில் வரவேற்று தேவதூதர்கள் எழுப்பிய பரவச கானம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. நீ என் செல்வம், நான் பாடுபட்டு சேர்த்த சொத்து. ம்ம்.. மேலே சொல்…”
இயேசு சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போன கிறிஸ்தவன் தனது சாட்சியைத் தொடர்ந்தான். ”பின்னர் அருகிலிருந்த ஒரு சபைக்குப் போய் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன், பரிசுத்த ஆவியையும் பெற்று அந்த சபைக்கே தொடர்ந்து சென்று உம்மை ஆராதித்து வருகிறேன். இப்போது உமக்காக ஊழியமும் செய்கிறேன்.” என்று சொல்லி தனது சாட்சியை முடித்தான்.
இயேசு, “ மகனே! உன்னை நான் நன்கு அறிந்திருக்கிறேன். நீ எனக்காக புறமதத்தவர் மத்தியில் வைராக்கியம் பாராட்டுபவன். அதிகாலையில் எழும்பி ஜெபிக்கிறவன். மனைவியை நேசிக்கிறவன், உன் பிள்ளைகளை ஒழுக்கத்தில் நடத்துகிறவன், உன்னிடத்தில் நிறைய நற்பண்புகள் உண்டு ஆனாலும் உன்பேரில் எனக்கு ஒரு குறை உண்டு…”
கிறிஸ்தவன் அதிர்ச்சியாய், ”ஆண்டவரே என்ன சொல்லுகிறீர்?….”
இயேசு, ”ஆம் மகனே , நீ இந்த நாடகத்தில் பார்த்தாயே! எனது ஜனங்களை விடுவித்து ஆசீர்வதித்து உயரமான ஸ்தலங்களில் உலாவப்பண்ணும் போதெல்லாம் அவர்கள் இருதயத்தை அறிந்து கொள்ளும்படி ஒரு தேர்வை வைக்கிறேன். அந்தத் தேர்வின் நோக்கம் “அவர்களுடைய இருதயம் என்னைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறதா? என்று சோதித்தறிவதே ஆகும். என் சபையாகிய உங்களுக்கு நான் வைத்த தேர்வு என்ன தெரியுமா?”
கிறிஸ்தவன், “தெரியும் ஆண்டவரே! தெய்வங்கள் என்றழைக்கப்படும் “போலியான கடவுளரையா?” அல்லது ஜீவனுள்ள தேவனாகிய உம்மையா? யாரைத்தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே அது.”
இயேசு, “இல்லை, அது உலகத்தாருக்கு உரியது, என்னை ஏற்கனவே இரட்சகராக ஏற்றுக் கொண்ட என் பிள்ளைகளுக்கு நான் வைத்த தேர்வு என்ன?”
”ஆண்டவரே! அது..வ்வ்…வந்து…..”
இயேசு, “சரி உனக்குத் தெரியவில்லையானால் பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். உடனே அனைவரும் எழுந்திருந்து தங்கள் கையிலிருக்கும் வேதத்தைத் திறந்து ஒரே குரலில் உரத்த சத்தமாய்:
“இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்க”
”எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது” (லூக்கா 16:13)
”அடடே!…ஆமா! மன்னிச்சுக்கங்க ஆண்டவரே! இந்த வசனம் எனக்கு மறந்தே போச்சு” விடுகதை விளையாட்டில் பதிலை மறந்த சிறு பிள்ளை போல தலையை சொறிந்து கொண்டே சொன்னான் கிறிஸ்தவன்.
இயேசு. “ம்ம்…கற்பாறை நிலத்தில் விழுந்த விதைகள் இப்படித்தான் கருகிப் போகும், அதுசரி, உனக்கு இதாவது நினைவிருக்கிறதா பார்க்கலாம். உனது சபையில் பாஸ்டர் போனவாரம் கொடுத்த செய்தி என்ன?”
உடனே கிறிஸ்தவன் உற்சாகமானான், “ அது நல்லா ஞாபகம் இருக்கு ஆண்டவரே! ”விசுவாசியின் அதிகாரங்கள்- பாகம் 12” எங்க பாஸ்டர் 12 வாரமா இந்த செய்தியக் குடுத்துக்கிட்டு இருக்காரு. நான் ஒரு வரி விடாம நோட்ஸ் எடுத்து வச்சிருக்கேன். இந்த தொடர் முடியும் போது உங்க வாழ்க்கையே மாறியிருக்கும்ணு பாஸ்டர் சொன்னாரு. சைக்கிள்ள ஆபீஸ்க்கு போற நீங்க ஸ்கூட்டர்ல போவீங்க, ஸ்கூட்டர்ல போற நீங்க கார்ல போவீங்க. உங்க விசுவாசம் அவ்வளவா பெலப்படப் போகுதுன்னு சொன்னாரு. இந்த செய்திகள் எங்களோட பொருளாதார வாழ்க்கையில ஒரு புரட்சியையே உண்டாக்கப் போகுதாம். இப்பெல்லாம் நாங்க அதிகாலையில ஜெபத்தோடு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு விசுவாச அறிக்கை செய்றோம்.
இயேசு, ”அப்படியா! அதுல ஒரு விசுவாச அறிக்கையை சொல்லு…”
தனது டைரியை வேகமாகப் புரட்டியவன் ஒரு பக்கத்தில் நிறுத்தி சப்தமாக வாசித்தான்.“ என் தேவன் அவருடைய ஐசுவரியத்தின்படியே என் குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் இம்மையிலேயே நிறைவாக்குவார் (பிலிப்பியர் 4:19)”
இயேசுவின் முகம் சிவந்தது. ”ஒரு நிமிஷம் இரு…எங்கே நிறைவாக்குவார்??”
கிறிஸ்தவன், “இம்மையிலே”
இயேசு, ”இதை உன்னுடைய பைபிளில் பார்த்து எழுதினாயா?”
”இல்லை ஆண்டவரே! எங்க பாஸ்டர் செய்தியிலே சொல்ல சொல்ல எல்லாரும் எழுதினோம்”
“இயேசு பார்வையாளர்களைப் பார்த்து பிலிப்பியர் 4:19 ஐ யாராவது வாசியுங்கள்”
ஒருவன் எழுந்து சத்தமாக வாசித்தான்.
”என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.”
இயேசு கிறிஸ்தவனிடம் கேட்டார், “எங்கே நிறைவாக்குவேன் என்று போட்டிருக்கிறது?” கிறிஸ்தவன் திருதிருவென விழித்தான்.
”என் பிள்ளைகளே! உங்களது பிரச்சனையே இதுதான். உங்கள் இருதயம் என்னிடத்தில் இல்லை. நீங்கள் என்னைப் புறம்பே தள்ளிவிட்டீர்கள். உங்கள் ஊழியர்கள் என்னை ஒரு சாவி கொடுக்கும் பொம்மை போல நினைத்து தங்கள் விருப்பபடியெல்லாம் வாழ்ந்து கொண்டும் போதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அன்றைய இஸ்ரவேலர் கற்களில் வடிக்கப்பட்ட பாகாலை சேவித்தது போல இன்று நீங்கள் காகிதத்தில் வடிக்கப்பட்ட பணம் என்னும் பாகாலைச் சேவிக்கிறீர்கள் இப்படியாக நீங்கள் ஆவிக்குரிய வேசிகளாய் ஒட்டுமொத்தமாய் சோரம் போனீர்கள்.”.
ஆண்டவரே! நீர் என்ன சொல்லுகிறீர்? நாங்கள் உம்மைத்தானே சேவிக்கிறோம்?
இல்லை மகனே! உன் வாழ்க்கையிலிருந்தே உனக்குப் புரியும்படி சொல்லுகிறேன் கேள்! நீ உன் வியாதி சுகமான அற்புதத்தின் மூலம் என்னைக் கண்டு கொண்டாய், நல்லதுதான். பின்னர் உன்னிடம் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டை வாசித்து மெய்யாக பாவ உணர்வடைந்து இரட்சிக்கப் பட்டாய் ஆனாலும் உன்னைச் சுற்றியுள்ள பொருளாசை நிறைந்த நவீன கிறிஸ்தவத்தால் மயக்கப்பட்டு வெகு விரைவிலேயே ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய். என்னை விட்டு சோரம்போய் உலகப்பொருளை நேசிக்கும் உனது பழைய வாழ்வுக்குத் திரும்பி விட்டாய். உன்னிடத்தில் இன்று மிஞ்சியிருப்பது. வெறும் மதவைராக்கியமும், பாஸ்டர் பக்தியும், சபை வெறியுமே!
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள் நான் உன்னை எனது இரத்தத்தைக் கிரயமாகக் கொடுத்து வாங்கியிருக்கிறேன். நீ எனக்கே சொந்தம். “நீயுனக்கு சொந்தமல்லவே…” என்று அடிக்கடி பாடுகிறாயே உணர்ந்துதான் பாடுகிறாயா? பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம் (2 கொரி 5:15) என்று என் வார்த்தை கூறுகிறது. ”ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால் தன்னைத் தானே வெறுத்து…” என்று லூக்கா 9:23 சொல்லுகிறது. ஆனால் உனது ஜெபம், விசுவாசம், காணிக்கை, ஊழியம், ஆராதனை எல்லாமே உன்னைச் சுற்றியே இருக்கிறது.
பூமிக்குரிய தேவைகளுக்காக மணிக்கணக்கில் ஜெபிக்கிறாய், உலகப் பொருட்களை சுதந்தரித்துக் கொள்ள விசுவாசத்தை வளப்பது எப்படி என்ற மேற்கத்திய செழிப்பின் உபதேச புத்தகங்களை வாங்கி அதை கருத்தாய் வாசிக்கிறாய். ஒருமடங்கு கொடுத்தால் நூறுமடங்கு திருப்பிக் கொடுப்பேன் என்ற நோக்கில் காணிக்கை என்ற பெயரில் என்னுடன் வியாபாரம் செய்கிறாய். “நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டால் அவர் உங்களை ஐசுவரியவான்களாக்குவார், கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பார் என்று அறிவித்து ஜனங்களை சபைக்கு அழைத்து வந்து பாஸ்டரிடம் பாராட்டு வாங்குவதை ஊழியம் என்கிறாய். உனது ஆராதனை கூட உனக்கு பரவசமும். மன நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்ற சுயநல வட்டத்துக்குள்தான் இருக்கிறது.
நீ பெருமை பாராட்டும் உனது ஆவிக்குரிய வாழ்க்கையானது இப்படியாக உன்னை மையமாகக் கொண்டே இருக்கிறது. உனக்கு உலகப் பொருள் தேவை. அதை உனக்கு அள்ளித்தர நான் வேண்டும். அதுவே இன்று உனக்கும் எனக்குமுள்ள உறவு. அப்படித்தானே!
கிறிஸ்தவன் தலை கவிழ்ந்தவனாக பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தான்.
அடுத்ததாக உன் சபைக்கு வருகிறேன். மகனே! இன்று உலகில் உள்ள சபைகளில் பெரும்பாலான சபைகளில் நான் இல்லை. அவர்கள் வேறொரு இயேசுவைத் தொழுதுகொண்டு, வேறொரு ஆவியைப் பெற்றுக் கொண்டு வேறொரு சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள் (2கொரி 11:4). உனது சபையும் அவற்றில் ஒன்றுதான்.
கிறிஸ்தவன் அதிர்ச்சியடைந்தவனாகத் நிமிர்ந்து பார்த்தான்.
இயேசு. “ ஆம் மகனே! முத்தாய்ப்பாக நீ புரிந்து கொள்ளும்படி ஒரு கேள்வியை உனக்கு முன் வைக்கிறேன். இதை நீ எனது சவாலாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். நான் இல்லாமலேயே கூட சபைகளும் ஊழியங்களும் நடத்த முடியும், அற்புதங்கள் செய்ய முடியும், கூட்டமும் சேர்க்க முடியும். அது முதல் நூற்றாண்டிலேயே நடந்திருக்கிறது. நான் லவோதிக்கேயா திருச்சபையின் வாசலில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன் அவர்களோ நான் இல்லாமலேயே உள்ளே கூடி ஆராதித்துக் கொண்டிருந்தார்கள் (வெளி 3:20). நான்காம் நூற்றாண்டிற்க்குப் பின் ஆவியானவர் இல்லாமலேயே பல நூற்றாண்டுகளாக சபைகள் நடந்து கொண்டுதானிருந்தன.
ஆக, நான் இல்லாமலும், ஆவியானவர் இல்லாமலும் சபை நடத்த முடியும் ஆனால் பணம் இல்லாமல் உங்களில் எத்தனை பேரால் சபை நடத்த முடியும்? ஒரு ஆறுமாதம் எந்தப் பணவரவும் இல்லாத நிலை ஏற்பட்டால் உனது சபை தொடர்ந்து நடத்தப்படுமா?
கிறிஸ்தவன், “நிச்சயமாக முடியாது ஆண்டவரே!”
நான் இல்லாமல் வருடக்கணக்காகக் கூட சபை நடத்த முடியும் ஆனால் பணமில்லாமல் சபை நடத்த முடியாதென்றால் நீங்கள் யாரைச் சேவிக்கிறீர்கள்? யார் உங்கள் எஜமான்?
ஆதித் திருச்சபையினர் வீடுகளில் கூடி ஆராதித்தார்கள். அவர்கள் எந்தச் சொத்துக்களும் வாங்கவில்லை. எந்தச் சொத்துக்களுமின்றி, பணத்தின் துணையின்றி அந்த சபை அவ்வளவாய் தரத்திலும் எண்ணிக்கையிலும் பெருகியது. அவர்களிடமிருக்கும் கடைசி பைசாவைப் பிடுங்கி விட்டால் கூட தொடர்ந்து ஆராதித்துக் கொண்டுதானிருப்பார்கள். பெருகிக் கொண்டுதானிருப்பார்கள். அது உங்களால் இன்று முடியாது ஏனெனில் அவர்கள் சபை கன்மலையாகிய என்மீது கட்டப்பட்டிருந்தது. உங்கள் சபைகளோ உலகப் பொருளின் மீது கட்டப்பட்டிருக்கிறது.
நீங்கள் இந்த உலகத்தில் வசிக்கும் வரை பணம் எல்லாவற்றிற்கும் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் யாரைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே என்னுடைய கேள்வி.
ஒரு சபையில் குறிப்பிட்ட அளவு உறுப்பினர் சேர்ந்துவிட்டால் பாஸ்டர் உடனடியாகச் செய்வது ஒரு Donation book அடித்து சபை மக்கள் கையில் கொடுத்து நிதி திரட்டித் தரும்படி செய்வது. மீதமுள்ள பணத்துக்கு வங்கியில் கடன் வாங்குவது அந்தக் கடனுக்கான வட்டியை மாதாமாதம் திருப்பிச் செலுத்த சபை மக்களைச் சார்ந்து கொள்ள வேண்டியது. பாவத்தைக் குறித்துக் கடிந்து பேசினால் மக்கள் சபையை விட்டுப் போய்விடுவார்களென பயந்து எப்போதும் ஆசீர்வாதங்களைக் குறித்தே பிரசங்கிப்பது. பழைய ஏற்பாட்டு தசமபாகத்தைத் தந்தால் வானத்து பலகணிகளைத் திறந்து ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டுவது, தசமபாகம் தராவிட்டால் சாபம் பிடிக்கும் என்று பயங்காட்டுவது இப்படியாக என் கண்களுக்கு முன்னால் உங்கள் அக்கிரமம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது, விரைவில் கணக்கு ஒப்புவிக்கத் தயாராகுங்கள்.
ஆதித்திருச்சபை மக்கள் தங்களுடைய பணத்தை ஒரே குடும்பமாக பகிர்ந்து பயன்படுத்தினார்கள். பொருளாதாரத்தில் வலியவன் எளியவனுக்கு கை கொடுத்து உயர்த்தினான்.
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். (அப் 2:44-47)
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப் 4: 32)
இதுதான் ஆதித்திருச்சபையார் வாழ்க்கை. மக்கதோனிய சபையினர் கொடிய தரித்திரமுள்ளவர்களாயிருந்தும் அவர்களை விடக் கஷ்டத்திலிருந்த எருசலேம், சபையினருக்கு உதவினார்கள்(2 கொரி 8). அதுமாத்திரமல்ல ஆதித் திருச்சபையில் பகிர்ந்து உண்பதும் சமநிலைப் பிரமாணமும் ஒரு அங்கமாகவே இருந்தது.
மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. (2கொரி 8:14,15)
இதற்க்குப் பெயர்தான் சபை, ஒரே சரீரத்தின் அவயவங்கள் என்பது. ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் பாடுபடும்.(1கொரி 12:26). ஆதித்திருச்சபையில் வலியவர்களெல்லாரும் தியாகம் செய்து எளியவர்களை தங்களுக்கு சமமாக்கினார்கள். இன்றைய திருச்சபைகளிலோ சபைமக்கள் எல்லோரும் சேர்ந்து மேய்ப்பன் எனும் ஒரு மனிதனை ஐசுவரியவானாக்குகிறார்கள். இதுவே உங்கள் முரண்பாடு.
ஒழிந்துபோன பழைய உடன்படிக்கையின் தசமபாகத்தைக் குறித்த பிரசங்கம் எல்லா சபைகளிலும் எதிரொலிக்கிறது. புதிய ஏற்பாட்டு சபையின் சமநிலைப் பிரமாணமோ எங்குமே பிரசங்கிக்கப் படுவதில்லை. இதுவே கொடிய வஞ்சகம்!! ஆதித் திருச்சபை பணவிஷயத்தில் உண்மையாக இருந்தது ஆகவே உலகுக்கு வெளிச்சமாகப் பிரகாசித்தது. நீங்களோ பண விஷயத்தில் சோரம் போனீர்கள். இன்று அனனியாக்களும் சப்பீராள்களும் அப்போஸ்தலன் இருக்கையிலும், மேய்ப்பனின் இருக்கையிலும் அமர்ந்து கோலோச்சுகிறார்கள்.
விசுவாசிகளுக்கு உலகப்பொருளை தனது ஜெபத்தின் மூலமாகவும், பிரசங்கத்தின் மூலமாகவும் ஆதாயப்படுத்தித்தர ஒரு மேய்ப்பன் வேண்டும். மேய்ப்பர்களுக்கோ தங்களை போஷிக்கவும் பராமரிக்கவும் ஒரு கூட்டம் வேண்டும். எல்லோருமாய்ச் சேர்ந்து உங்களை இரத்தக் கிரயம் கொடுத்து வாங்கிய என்னை விட்டுவிட்டு உலகப்பொருளைச் சேவிக்கிறீர்கள். உங்களை ”விபச்சாரிகள்” (யாக் 4:4) என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது.
என் பிள்ளைகளே! நான் உங்களை பிச்சைக்காரர்களாக அலையச் சொல்லவில்லை. முதலாவது என்னுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள். உங்களுக்கு தேவையான யாவற்றையும் நானே உங்களுக்கு கூடக் கொடுப்பேன் என்பதே புதிய ஏற்பாட்டு சத்தியம் (மத் 6:33). உங்களுக்கு உள்ளதில் திருப்தியாயிருங்கள் (1 தீமோ 6:6). நீங்கள் இந்த உலகத்துக்குரியவர்கள் அல்ல.
இதுவரை இந்நாடகத்தின் எல்லாப் பாகங்களிலும் என் ஜனங்கள் என்னைத் தள்ளி எனக்கு விரோதமானவற்றை தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்தாயே. என்னை விலக்கிவிட்டு உலகப்பொருளை சேவிக்கும் இந்த சந்ததிக்கு என் எச்சரிப்பை அறிந்துகொள்:
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்… ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே (எபி 10:25-31)
இதை நீ எல்லோருக்கும் சொல்லு. உன் மனைவியிடமிருந்து தொடங்கு. உன் மேய்ப்பனிடமும் சபை மக்களிடம் சென்று திரும்பத் திரும்ப இவைகளைக் குறித்து பேசு. அவர்கள் இவைகளை ஏற்றுக்கொண்டால் பார் இல்லாவிட்டால் அவர்களை விட்டு விலகு. பாகாலின் பாதங்களுக்கு முத்தமிடாத சிலரை இன்னும் நான் வைத்திருக்கிறேன் அவர்களிடம் நானே உன்னை நடத்துவேன் அவர்களோடு சேர்ந்து என்னைத் தொழுதுகொள்.
இயேசு மறுபடியும் அவனைக் கட்டி அணைத்து..
பயப்படாதே! காலம் கடந்துவிட வில்லை. நானும் என் கிருபையை உங்களை விட்டு இன்னும் விலக்கவில்லை. இன்றிலிருந்து ஒரு புதிய ஜீவியம் தொடங்கட்டும். நான் உன்னை பெலப்படுத்தும்படி உன்னுடனே கூட இருப்பேன். பரலோகத்தில் சந்திப்போம். இயேசு மறைகிறார்.
>திரை மூடுகிறது<
நாடகம் முடிந்ததை அறிவிக்கும் மணி அரங்கத்தில் ஒலிக்கிறது.
ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்!!
மனைவி பிடித்து உலுக்கினாள். என்னங்க! எந்திரிங்க மணி 4:30 ஆச்சு அலாரம் எவ்வளவு நேரமா அடிக்குது. எந்திரிச்சு ஜெபிக்கணும் விசுவாச அறிக்கை செய்யணும்… அது முடிக்கவே காலைல 6:00 மணி ஆயிடும் அப்புறம் வேலைக்குக் கிளம்ப வேணாமா??
கிறிஸ்தவன் தான் கண்டது கனவு என்பதை உணர்ந்தான். ஆனாலும் இது தொல்லைகளின் திரட்சியினால் அல்ல தேவனே கொடுத்த கனவு என்பதை உறுதியாக அறிந்திருந்தான். உன் ஊழியத்தை உன் மனைவியிடமிருந்து துவங்கு என்று நேசர் சொன்னதை நினைவு கூர்ந்தவனாய் தன் மனைவிடமிருந்து தன் ஊழியத்தைத் துவங்கினான்.
பிர்ஸ்கில்லா!… நான் உங்கூட கொஞ்சம் பேசணும்
மிகவும் அருமையாக அழகாக நாடக நயத்தோடு உண்மையை உறைக்கும்படி எடுத்து சொல்லியுள்ள சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருபுறம் கிறிஸ்த்து/ஊழியம்/சபை/ஆத்துமா என்று அலைந்துகொண்டு இன்னொருபுறம் சொகுசு வாழக்கைக்கு பணம் சம்பாதித்து சேர்த்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர்களுக்கு ஒரு சரியான உணர்த்துதல்.
இந்த கட்டுரைக்கு பலர் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவரை ஒருவரும் முன்வரவில்லை இல்லை!
தாங்கள் தெளிவாக கூறியிருப்பது போல், இன்றைய விசுவாசிகள் முன்னால் இருக்கும் கேள்வி ஆண்டவரா? அல்லது உலகபொருள் மற்றும் பணமா? என்பதுதான். இதை அறியாமல் அநேகர் என்னென்னவோ செய்துகொண்டு தாங்கள் செய்வதை நியாயப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
முதல் பாகத்தை முடித்து இரண்டாவதுபாகம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். இரண்டாவது பாகத்தின் முடிவை பார்த்தபிறகே பின்னூட்டமிட நினைத்தேன். நான் சற்றும் எதிர்பாராத மிக சரியான முடிவை தந்துள்ளீர்கள்.
தாங்கள் எழுதுவதுபோல நடைமுறை வாழ்விலும் அதை செயலில் காண்பித்து
I தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
என்ற வார்த்தைக்கேற்ப வாழ்ந்து தேவனுக்கு ஏற்ற பாத்திரமாக செயல்பட வாழ்த்துக்கள்!
தங்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றிகள் பல!
//தாங்கள் எழுதுவதுபோல நடைமுறை வாழ்விலும் அதை செயலில் காண்பித்து I தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். என்ற வார்த்தைக்கேற்ப வாழ்ந்து தேவனுக்கு ஏற்ற பாத்திரமாக செயல்பட வாழ்த்துக்கள்! //
அன்பு சகோதரரே! இவ்வாண்டில் எனகுக் கிடைத்த மிகச் சிறந்த வாழ்த்து இதுதான்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இவ்விதமாய் வாழ கர்த்தரே அடியேனுக்கு அருள் செய்வாராக! வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நீங்கள் அனுப்பிய mail பார்த்தேன். நன்றி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன். இடையில் சிறு தடங்கல் ஏற்பட்டுவிட்டது. “இரண்டில் ஒன்று ” ன் இரண்டு பாகங்களையும் இப்போதுதான் படித்தேன். உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது. என்னுடய கவலை என்னவென்றால் உங்கள் எழுத்துக்கள் அனேகரைப் போய்ச்சேரவேண்டும் என்பதுதான். உங்கள் தளத்தை தமிழ்மணம் போன்ற அனைத்து தமிழ்த் திரட்டிகளிலும் இணைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
Thanks bro. Vijay, one more nail on our own selves…… beautifully brought out… I pray that God will use you to bring more and more needful articles like this in these days…to bring the PROPER revival in our Churches and all family believers. continue doing this great and Responsible work bro. Our prayers are with you and for you…. blessings abundant in Christ,
Thank you so much Brother! May God bless you!!
That I not be full and deny You and say, “Who is the LORD?”
Or that I not be in want and steal, And profane the name of my God.
Proverbs 30:9
தங்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் அருமையாக அழகான இவை பலருக்கு இடிக்கும். சிலருக்கு இனிக்கும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
arumaiyaka irukkirathu.
Dear brother,
I have been reading your articles on this site since two days ago – when I got one of them in an email. I thank God for your writings. They are very sound and very much needed to be heard by today’s Christians. Are you part of a church that practices these truths? I’ve got a question: what is this ‘samanilai pramaanam’ that you mention here?
May the Lord continue to give you grace to stand for the truth of God’s word!
Regards,
Joel.
அன்பு சகோதரர் அவர்களுக்கு, தாங்கள் அளித்த உற்சாகத்துக்கு நன்றி. நாங்கள் ஒரு சிறு குழுவாக இப்போதுதான் கூடியிருக்கிறோம். நாங்களும் எல்லோரையும்போல குறையும் பெலவீனமும் உள்ள சாதாரணரே! ஆனால் தேவனை அறியவேண்டிய பிரகாரமாக அறியவேண்டும் என்பதும் புதிய ஏற்பாட்டு சபைபோன்ற ஒன்றைக் காணவேண்டும் என்பதும்தான் எங்கள் தணியாத வாஞ்சை. நாங்கள் பெலனற்றோராய் இருந்தாலும் கர்த்தர் தமது பூரண கிருபையால் தமது பெலனைத் தந்து எங்களை நடத்துவார் என்று விசுவாசிக்கிறோம்.
சமநிலைப் பிரமாணம் பற்றி கீழ்கண்ட “கப்பல் கவிழ்ந்த கதை” என்ற கட்டுரையில் தெளிவாக வாசிக்கலாம். கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக!!
கப்பல் கவிழ்ந்த கதை
பாகம் 1: http://wp.me/pSfJW-7Y
பாகம் 2: http://wp.me/pSfJW-8m
Dear Brother,
I cried for long time after reading. I don’t want to you praise you too much, Because that should not be a stumbling block . My heart has yearned for such ministers for long time…
My heart always long for “sama nilai piramanam”… our church system is so deep in infection. There are still some Godly people here and there … who did not bow down to this filthy worldly system. but our might not be easy..
WE have only GOD on our side. the whole world will be against us .The Babylonian church system will be in front line battle fighting against us.
Again I pray for you to stand strong and proclaim the truth with wisdom, love and boldness,
Amen
தங்கள் கமெண்டுக்கு நன்றி! நிச்சயம் ஒரு விடியல் பிறக்கும். கர்த்தர் நம் பக்கம் இருக்கிறார்.