இங்கே ஏறிவா..(வெளி 4:1)

ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் பக்தி மார்க்கத்தில் வாழ்வது என்பது ஒரு பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்பது மேலான பரிமாணத்தில்(higher dimension) வாழ்வதாகும். நாம் உடல் என்னும் ஒரு முப்பரிமாணக் கூட்டுக்குள் சிறைப்பட்டு வாழ்வதாலும், நமது புலன் உறுப்புக்கள் மூலமாக மட்டுமே அனைத்தையும் அறிந்துகொள்வதாலும் நமக்கு இந்த பெளதிக உலகம் மாத்திரமே உண்மை என்கிற தோற்றம் இருக்கிறது. ஆனால் உண்மையில் ஆவிக்குரிய பரிமாணம் இந்த உலகத்தைவிட 1000 மடங்கு நிஜமானது.

சூரியனுக்குக் கீழே சகலமும் மாயை என்று சாலோமோன் சொன்னதுபோல இந்த பெளதிக உலகம் ஒரு 3D projection மட்டுமே! இதன் வேர்கள் ஆவிக்குரிய உலகத்தில் இருக்கிறது. ஆவிக்குரிய உலகம் என்பது எங்கோ பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு fantasy world அல்ல. பெளதிக உலகமும், ஆவிக்குரிய உலகமும் ஒரே இடத்தில்தான் பின்னிப்பிணைந்து இருக்கிறது. அவை வெவ்வேறு பரிமாணங்கள் என்பதால் அதை நமது புலனுறுப்புக்களால் உணர முடியவில்லை.

பெளதிக உலகில் இருப்பவை, நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் முழுக்க முழுக்க ஆவிக்குரிய உலகோடு தொடர்புடையது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் ஆவிக்குரிய உலகிலிருந்து பேசினார், பெளதிக உலகில் இருள் அகன்றது. தாசனாகிய யோபுவை வதைக்க ஆவிக்குரிய உலகில் சாத்தான் தேவனிடம் அனுமதி வாங்கினான், பெளதிக உலகில் யோபுவின் வாழ்க்கையை இருள் சூழ்ந்தது. இதை விளங்கிக்கொண்டால் நம்மால் இந்த இரு பரிமாணங்களுக்கிடையேயான தொடர்பு தெளிவாகப் புரியும்.

நீங்கள் ஆளுகை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஆவிக்குரிய பரிமாணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆவிக்குரிய பரிமாணத்திலிருந்து இந்த பெளதிக உலகில் ஒன்றை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். பிதாவானவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஏற்கனவே ஆசீர்வதித்திருக்கிறார் என்று எபேசியர் 1:3 சொல்லுகிறது. அந்த ஆசீர்வாதங்கள் அத்தனையும் ஆவிக்குரிய பரிமாணத்தில்தான் இருக்கிறது. தனக்கு ஆவிக்குரிய பரிமாணத்தில் ஏற்கனவே அருளப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள் என்னவென்பதையும், ஆவிக்குரிய பரிமாணங்களில் இருக்கும் ஆசீர்வாதங்களை பெளதிக உலகுக்குக் கொண்டுவருவது எப்படி என்பதை ஆவிக்குரியவன் அறிந்திருக்கிறான். ஆவியானவர் அதை அவனுக்கு சத்தியத்தைக் கொண்டு கற்றுத்தருகிறார். கர்த்தராகிய இயேசு அந்த ஆண்டு அரசுக்குக் கட்ட வேண்டிய வரிப்பணம் அவருக்கு ஏற்கனவே ஆவிக்குரிய பரிமாணத்தில் டெப்பாசிட் செய்யப்பட்டு இருந்தது. அதை ஆண்டவர் பெளதிக உலகில் நடுக்கடலில் இருந்த ஒரு மீனின் வாயிலிருந்து encash செய்துகொண்டார்.

வேதத்தை வாசித்து சத்தியத்தைப் புரிந்துகொள்வதும், ஆவியானவரோடு உறவாடுவதும் நம்மை ஆவிக்குரிய தளத்துக்கு உயர்த்தும், அதில் வாழும் சூட்சுமத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கும். அதையெல்லாம் மதச்சடங்காக மாற்றிவிட்டுத்தான் நாமும் உலகத்தாருடன் சேர்ந்து இந்த matrix-க்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆவிக்குரிய பரிமாணத்தில் வாழக் கற்றுக்கொள்வது ஒரு ராஜரீக வாழ்க்கைமுறை ஆகும். அப்படிப்பட்டவர்களின் கையில்தான் இந்த உலகத்தின் ஆளுகை இருக்கிறது. ஏனெனில் அவர்களால் இந்த பெளதிக உலகத்தில் எதையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். ஆனால் ஜென்ம சுபாவமுள்ள மனிதனைப் பொறுத்தவரை ஆக்குதல், அழித்தல் இரண்டையும் செய்ய அவனுக்கு பணம் எனும் உபகரணம் அவசியமாயிருக்கிறது. அதுமட்டும்தான் ஒரே வழி என்று அவன் நினைக்கிறான். எனவேதான் அவனைப் பண ஆசை பிடித்து ஆட்டுகிறது. ஆனால் ஆவிக்குரியவனுக்கு பெளதிக உலகில் பணத்தை உருவாக்கவும் தெரியும், அதையும் தாண்டி பணத்தால்கூட சாதிக்கமுடியாத விஷயங்களை சாதிக்கவும் முடியும். கர்த்தர் அருளும் வாழ்வு அத்தனை மேன்மையானது!

Leave a Reply