முகநூலில் நடக்கும் பல விவாதங்கள் நம்மை தலைசுற்ற வைக்கிறது. எல்லாம் நமது சகோதர, சகோதரிகள் அறியாமையில் செய்யும் காரிங்கள்தான். ஒருவர் நியாயப்பிரமாணத்தின்படி சனிக்கிழமைதானே ஓய்வுநாள், நீங்கள் ஏன் ஓய்வுநாளை ஆசரிப்பதில்லை என்று கேட்கிறார். இன்னொரு பக்கம் வசனத்தின்படி பன்றி இறைச்சி சாப்பிடலாமா வேண்டாமா? அது கொம்புள்ளதா அல்லது விரிகுளம்புள்ளதா என்று ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேறொரு பக்கம் காது குத்தலாமா? புருவத்தின் மத்தியில் ஷேவ் பண்ணலாமா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஒன்று செய்யலாம், நியாயப்பிரமாணத்தை எழுதியவரிடமே போய் விசாரியுங்கள் என்று உங்களை டைம் மிஷினில் ஏற்றி மோசேயிடம் அனுப்பி வைத்தால் உங்களது அத்தனை கேள்விகளையும் கேட்டுவிட்டு ஒரே ஒரு பதில் கேள்வி உங்களைத் திருப்பிக் கேட்பார்:
“ஆமா, நீங்கள்லாம் யாரு???”
பிரச்சனை என்னவென்றால் உங்களுக்கு பிரமாணம் தெரியும், ஆனால் பிரமாணத்துக்கு உங்களைத் தெரியாது. அது விருத்தசேதனம் இருக்கிறதா? மாம்சபிரகாரமாக யாக்கோபு வழிவந்த பன்னிரெண்டு கோத்திர வித்து இருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்க்கும். நாம் அதற்கு முற்றிலும் அந்நியர்கள்!
பிரியமானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புண்ணியத்தால் நாம் அதைவிட பல்லாயிரம் மடங்கு மேலான உடன்படிக்கையின் கீழாக இருக்கிறோம். பழைய ஏற்பாடு நமக்கு கொடுக்கப்பட்டதன் நோக்கம் நியாயப்பிரமாணத்துக்குள் நிழலாட்டமாக மறைந்திருக்கும் கிறிஸ்து தத்துவத்தை நாம் அறிந்து கொள்ளத்தான். நீங்கள் உன்னதமானவருடைய செட்டைகளின் அடியில் அவரது பிள்ளைகளாக தங்கியிருக்கிறீர்கள். தேவையற்ற காரியங்களைக் குறித்து குழம்பிக் கொள்ளாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)
ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com