மெயின்லைன் சபைகளோ அல்லது ஆவிக்குரிய சபைகளோ, சபை என்று இருந்தால் அதற்கென்று பாரம்பரியம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது மொழி, ஊர், கலாச்சாரம் இவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. எந்த பாரம்பரியத்தையும் பின்பற்றக்கூடாது என்று கூறுவது radical-ஆகத் தோன்றினாலும் அது சாத்தியமற்ற காரியம்.
பாரம்பரியம் என்பது சபைக்கு சபை மாறுபட்டாலும், ஒட்டுமொத்த கிறிஸ்தவமும்கூட சில பொதுவான பாரம்பரியங்களைப் பின்பற்றுகிறது. பாரம்பரியங்களைப் பின்பற்றுவதில் தவறு இல்லை, ஆனால் அதில் உள்ள ஒரு ஆபத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று வேத சத்தியம் எது, சபை பாரம்பரியம் எது என்று ஒரு விசுவாசி புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பாரம்பரியம் சத்தியத்தோடு இரண்டறக் கலந்துள்ளதால் ஒரு பாரம்பரியத்தைப் பின்பற்றிவிட்டு சத்தியத்துக்கு கீழ்ப்படிந்ததாக ஒரு விசுவாசி திருப்தியடைந்துவிடக் கூடும். அந்த திருப்தி அவன் ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுத்து, ஒரு தேக்க நிலையையும், ஆன்மீகப் பெருமையையும் அவனுக்குக் கொடுத்து நாளடைவில் அவனை ஒரு பச்சை பரிசேயனாக மாற்றிவிடும்.
ஒரு உன்னதமான கேரூபாக இருந்தவனை பிசாசாக மாற்றியது “பெருமை” என்ற குணம் ஆகும். அதேபோல பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தில் மக்களுக்கு வழிகாட்டிகளாக எழும்பிய பரிசேயர்களை தேவகுமாரனுக்கு சத்துருக்களாக மாற்றியது பாரம்பரியங்களைப் பின்பற்றியதால் ஏற்பட்ட திருப்தியும் அதன் விளைவாக உண்டான ஆன்மீகப் பெருமையும்தான்.
நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள். சத்தியத்துக்கும் பாரம்பரியங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தனது செயல்கள் மூலம் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார். சுவிசேஷங்கள் முழுவதும் இவ்வித சம்பவங்களால் நிறைந்திருக்கிறது. முக்கியமாக ஓய்வுநாளை மையமாக வைத்து அவர்கள் கட்டிவைத்திருந்த அத்தனை பாரம்பரியக் கோட்டைகளையும் அவர் உடைத்துத் தரைமட்டமாக்கினார். மதவாதிகளின் கோபத்துக்கு ஆளாகவும், அதன் விளைவாக அவர் மரிக்கவும் அதுவே காரணமாக அமைந்துவிட்டது. இது தனது உயிருக்கே உலை வைக்கும் என்று தெரிந்தும் அவர் நமக்கு அந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கக் காரணம் அந்தப் பாடம் அவ்வளவு முக்கியமானது.
ஆனால் இன்று சபை கண்டுகொள்ளாமல் விட்டுவைத்திருக்கும், தோட்டத்தைக் கெடுக்கும் குழிநரிகளின் ஒன்றாக அது இருக்கிறது. எனவேதான் கர்த்தராகிய இயேசு தனது உயிரைப் பணையம் வைத்து கற்றுக்கொடுத்த அந்த முக்கியமான பாடத்தை நாம் திரும்பத் திரும்பப் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சரி, இதை எப்படி வித்தியாசம் காணுவது?
சத்தியத்தை நீங்கள் உங்கள் சுயபெலத்தால் பின்பற்ற முடியாது, அதற்கு ஒரு கொடிபோல கிறிஸ்துவைச் சார்ந்து, அவர் மீது படர்ந்துகொள்வதும், ஆவியானவரின் முழுமுதல் துணையும் வேண்டும். சத்தியத்தை பின்பற்றுவது என்று சொல்வதைவிட சத்தியத்தை வாழ்வது என்று சொல்வது இன்னும் அழகாக இருக்கும். ஆனால் ஒரு பாரம்பரியத்தை நீங்கள் உங்கள் சுயபெலத்தினாலேயே எளிதாகப் பின்பற்ற முடியும். அங்குதான் இதன் ஆபத்தும் இருக்கிறது.
சாத்தானுடைய சதி என்னவென்றால் நாம் தேவனுடைய ஒத்தாசையோடு செயல்படுத்த வேண்டிய ஒரு ஆவிக்குரிய அனுபவத்தை சடங்காச்சாரமாக மாற்றி, அதை நமது சுயபெலத்தில் செய்ய வைத்து, அதில் ஒரு திருப்தியைக் கொடுத்து, ஆவிக்குரிய பெருமையையும் கொடுத்துவிடுவான். ஜெபம், வேத வாசிப்பு, ஆராதனையில் பங்குகொள்ளுதல், ஊழியம் அத்தனையையும் அவனால் சடங்காக மாற்றி, அதை பாரம்பரியமாக நமக்குள் திணித்து நம்மை வஞ்சிக்க அவனால் முடியும்.
உதாரணத்துக்கு ஒரு விசுவாசி தினமும் அதிகாலை எழுந்து ஜெபிக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால் இதை நிறைவேற்ற தீர்மானமும், சுயபெலமும் ஒரு மனிதனுக்குப் போதும். ஆனால் அப்படி தினமும் அதிகாலை எழுந்து இயந்திரத்தனமாக ஜெபித்துவிட்டு அதில் திருப்திப் பட்டுக்கொள்வதுதான் ஆபத்து. தினமும் அதிகாலை எழுந்து ஜெபிக்க சுயபெலமே போதுமானது, ஆனால் அந்த ஜெபத்தில் தேவனோடு உறவாடுவதும், அவரது பிரசன்னத்தில் திளைப்பதும், அவரது வார்த்தையைக் கேட்பதுமே ஜெபத்தின் தாத்பரியமாக இருக்கிறது. அதற்கு சுயபெலம் உதவாது.
ஒரு விசுவாசி வாரம் தவறாமல் ஆராதனையில் பங்குகொள்ள சுயபெலமே போதுமானது. ஆனால் அதுவே ஒருவனை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கமாக மாற்றாது. கிறிஸ்துவை தலையாகக் கொள்வதும், சரீரத்தின் சக அங்கங்களாக இருக்கும் விசுவாசிகளுடன் இணைத்து கட்டப்பட்டிருப்பதை புரிந்து செயல்படுவதுமே சபையின் தாத்பரியமாக இருக்கிறது, இதுவும் சுயபெலத்தால் சாத்தியமாகாது. வசனப் புரிதலால் ஏற்பட்ட கண்திறக்கப்பட்ட அனுபவம்தான் இங்கு தேவை.
ஒன்றே ஒன்றை இங்கு ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சத்தியத்தை வாழ்வதில் ஒரு திருப்தி இருக்கிறது. பாரம்பரியத்தைப் பின்பற்றுவதிலும் ஒரு திருப்தி இருக்கிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது. சத்தியத்தை வாழ்வது சங்கீதக்காரன் சொன்னதுபோல நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோன்ற ஆத்தும திருப்தியாகும்(சங் 63:5). ஆனால் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதால் ஏற்படும் திருப்தி “தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்(லூக் 18:11,12) என்பது போன்ற ஆபத்தான திருப்தியாகும். முன்னது நம்மை இளக வைக்கும், பின்னது நம்மைக் கடினமாக்கும்.
நம் சுயபெலத்தின் செய்ய வேண்டியவைகளை சுயபெலத்தின் செய்ய வேண்டும், அதே நேரத்தில் நீரோட்டத்தில் செல்லும் ஒரு பறவையின் இறகுபோல நாம் ஆவியானவரின் flow-வில் அடித்துச் செல்லப்படவும் வேண்டும். உதாரணத்துக்கு தேவன் அதிகாலையில் உங்களை படுக்கையிலிருந்து அலேக்காக தூக்கிச் சென்று ஜெப அறையில் விடமாட்டார். அதை நீங்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் ஜெபிக்கத் தொடங்கியபிறகு அந்த ஜெபத்தை ஆவியானவர்தான் நடத்த வேண்டும். அப்படி வாழ்ந்து பழகும்போதுதான் நாம் சுயபெலத்தில் எதைச் செய்தோமோ அதைக் குறித்த பெருமை நமக்கு வராது. நம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியும் இருக்கும்.
பாரம்பரியத்தில் இருக்கும் இன்னொரு ஆபத்து எதை நாம் தொடர்ந்து சுயபெலத்தில் செய்துகொண்டே இருக்கிறோமோ அதன் மீதுள்ள ஆர்வம் நாளடைவில் குறைந்துவிடும். ஜெபத்தையும், வேதவாசிப்பையும், ஆராதனைக்குச் செல்வதையும் நீங்கள் சுயபெலத்திலேயே செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில் அதன்மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும், ஆனால் அதனால் ஏற்பட்ட அந்த ஆபத்தான திருப்தியை தக்க வைக்க அதை விடாமல் தொடர்ந்து செய்துகொண்டிருப்பீர்கள். இது ஒருவிதமான அடிமைத்தனம். இதுதான் வறண்ட ஆத்துமாவின் அடையாளம். கடைசியில் கிறிஸ்துவின் சாயலில் வளர்வதற்குப் பதிலாக உங்களையும் அறியாமல் அன்னா, காய்பாவின் சாயலில் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்.
ஒரு விசுவாசிக்கு உள்ளான பார்வை அவசியம். நாம் அனுதினமும் அவ்வப்போது கண்ணாடியில் பார்த்து நமது தோற்றத்தை சரிசெய்துகொள்வதுபோல நமது ஆத்துமாவை நமது கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம். உங்கள் ஆத்துமாவில் எங்கெங்கெல்லாம் வறட்சி இருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். அங்கெல்லாம் ஏதோ ஒரு சடங்காச்சாரம் கோலோச்சிக் கொண்டிருக்கும். அங்கே ஆவியானவரின் நீரூற்றைப் பாயவிடுங்கள். பின்பு அந்தப் பகுதியில் வசனவிதை முளைத்தெழும்பி கனிகொடுக்க ஆரம்பிக்கும்.
பாரம்பரியங்களை முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால் அதை நாம் இனம்கண்டுகொண்டு அதற்கான இடத்தில் அதை அமரவைக்க வேண்டும். நம்மை ஆவிக்குரிய அனுபவ்ங்களுக்குள்ளாக இட்டுச் செல்லும் நல்ல வாகனமாக பாரம்பரியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சபைகள் அந்தப் புரிதலை மக்களுக்கு வழங்க வேண்டும். மாறாக “ஆவிக்குரிய அனுபவத்தை” அமர வைக்க வேண்டிய சிங்காசனத்தில் பாரம்பரியத்தை அமரவைத்தால் அது ஒரு வேதாளம் போல நமது தோளின்மீது ஏறி அமர்ந்து தனது கைகளால் நமது கண்களைப் பொத்திவிடும்.