தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். (நீதி 30: 8,9)
ஆகூர் என்ற மனிதன் தேவனிடம் வைத்த விண்ணப்பத்தைத்தான் மேற்கண்ட வசனத்தில் பார்க்கிறோம். ஆகூர் மூன்று விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார். ஐசுவரிய போதையினால் கர்த்தரை மறுதலிக்கிறவர்கள், வறுமையின் கொடுமையால் திருடி கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட காரணமாய் இருப்பவர்கள் மற்றும் மூன்றாவதாக தேவனிடத்தில் தேவைகளை மாத்திரம் அளவாகப் பெற்று அவருக்கு பிரியமான வாழ்க்கை வாழுகிறவர்கள்.
ஐசுவரிய போதையும், வறுமையின் கொடுமையும் ஒரு மனிதன் தேவனைவிட்டுப் பிரிய காரணமாக இருக்கின்றன என்பதற்கு வேதாகமத்திலும், நிஜத்திலும் ஆயிரக்கணக்கான சாட்சிகள் இருக்கின்றன, உண்மையில் அவர்களை தேவனிடமிருந்து பிரித்தது என்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். ஆனால் தேவனிடம் அளந்து பெறுபவர்கள் எல்லோரும் கர்த்தருக்கு பிரியமாக நடந்துகொள்வார்கள் என்ற பார்வை சரியாக இருக்குமா?
நிச்சயம் இல்லை என்பதே நிதரிசனமான உண்மை! இஸ்ரவேல் ஜனங்களை தேவன் வனாந்திரத்தில் நடத்தினபோது 40 வருடங்களாக அவர்களுக்கு அவரவர்கள் படியை அளந்தே போஷித்தார். ஆனால் எகிப்திலிருந்து கிளம்பியவர்களில் யோசுவாவையும், காலேபையும் தவிரமற்ற அனைவரும் தேவகோபத்துக்கு ஆளாகி வனாந்திரத்திலேயே பிணமானார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே அளந்து பெறுவது என்பது ஆண்டவரிடம் நம்மை நிலைத்திருக்கப் பண்ணும் என்ற கூற்று நடைமுறைக்கு ஒவ்வாதது. அது ஆகூரின் வார்த்தையேயன்றி தேவன் சொன்னது அல்ல.
மிகுந்த ஐசுவரியத்திலும் தேவனை உண்மையாக சேவித்த பழைய ஏற்பாட்டு முற்பிதாக்கள், புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு ஆஸ்திகளால் ஊழியம் செய்த ஸ்திரீகள் (லூக் 8:3), கொர்நேலியு, பிலமோன் போன்ற சமுதாய அந்தஸ்துள்ளவர்களையும் நாம் வேதத்தில் பார்க்கிறோம்.
அதே போல கடும் தரித்திரத்திலும் தேவனை மறுதலிக்காத யோபு, மிகுந்த தரித்திரத்திலும் உதார குணமுள்ளவர்களாக விளங்கிய மக்கதோனிய சபையினர் (2 கொரி 8:1,2) மேலும் தங்கள் ஆஸ்திகளையெல்லாம் துச்சமென உதறிவிட்டு ஏழைநாடுகளுக்கு மிஷனரிகளாக களமிறங்கிய சி.டி ஸ்டட் போன்ற இன்னும் ஏராளமான கடந்த நூற்றாண்டின் பரிசுத்தவான்கள் என அனைவரையும் நாம் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும். அவர்களும்கூட மிகுந்த ஐசுவரியமுள்ளவர்களாக இருந்தபோதுதான் அதின்மேல் மனதை வைக்காமல் தேவனை நேசித்து ஐசுவரியத்தை விட்டுவிட்டு ஊழியத்தில் களமிறங்கியவர்கள்.
ஆக இதிலிருந்து தெரிந்துகொள்வது என்ன? தேவனை சேவிப்பவன் ஐசுவரியத்திலும், வறுமையிலும், அளந்து போஷிக்கப்பட்டாலும் எல்லா நிலையிலும் தேவனோடுள்ள அன்பு மாறாதவனாகத்தான் இருக்கிறான். உலகப்பொருளை சேவிப்பவன் ஐசுவரியத்திலும், வறுமையிலும், அளந்து போஷிக்கப்பட்டாலும் எல்லா நிலையிலும் தேவனை இரண்டாம் இடத்தில்தான் வைத்திருக்கிறான். இவர்களே ஐசுவரியம் பெருகும்போது கர்த்தரை மறுதலிக்கிறவர்கள், வறுமையின் பிடி இறுகும்போது திருடி, தேவநாமம் தூஷிக்கப்பட காரணமாக இருப்பவர்கள்.
எனவேதான் ஆண்டவராகிய இயேசு சொல்லுகிறார் “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது” (லூக்கா 16:13)
நமது பொருளாதார நிலை அல்ல, நமது இருதயத்தின் நிலையே நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவின் ஆழத்தைத் தீர்மானிக்கிறது. Heart Matters!