அத்திமரமும் நாத்தான்வேலும்

“நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் (யோவா 1:48)” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னவுடன் அதுவரை “நாசரேத்திலிருந்து வந்தவர்தானே” என்ற கண்ணோட்டத்தில் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருந்த நாத்தானியேல் “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று அவரிடத்தில் சரணடைகிறான்.

அதென்ன, “நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்ற வெளிப்பாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். இது குறித்து வேத வல்லுனர்கள் பலரும் பல விளக்கங்கள் கொடுக்கின்றனர்.

மீகா 4:4, சகரியா 3:10, 1 இராஜா 4:25 என்ற மேற்கண்ட மூன்று வசனங்களுமே “அத்தி மரத்தின் கீழ் சுகமாய் குடியிருத்தல்” என்ற தீர்க்கதரிசனத்தைக் குறித்துப் பேசுகின்றன. அது மேசியாவின் வருகையையும் அதைத் தொடர்ந்து இஸ்ரவேல் அடையப்போகும் சுகவாழ்வையும் குறிக்கிறது. நாத்தான்வேல் இஸ்ரவேலின் சுகவாழ்வையும் மேசியாவின் வருகையையும் ஆர்வத்துடன் நாடுகிற ஒரு கபடற்ற உத்தம இஸ்ரவேலனாக இருந்தான்.

மேசியாவைக் குறித்த தேடல் எப்போதும் நாத்தான்வேலின் மனதை ஆட்கொண்டிருந்தது. அவரது ஆர்வத்தையும் தேடலையும் மற்றவர்களும் நன்கு அறிந்திருந்தனர். எனவேதான் பிலிப்பு தான் மேசியாவைக் கண்ட தகவலை வலிந்து போய் நாத்தான்வேலிடம் அறிவிக்கிறார் (யோவா 1:45). தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள் என்று சொன்ன ஆண்டவர் தம்மை ஆவலாகத் தேடிய அத்தனை பேருக்கும் தம்மை வெளிப்படுத்துவதை வேதத்தில் காண முடியும்.

தம் வயதான காலம் மட்டும் மேசியாவின் வருகைக்கு ஆவலாக காத்திருந்த சிமியோனுக்கு தமது மழலைப் பருவத்திலேயே தம்மை வெளிப்படுத்தி அவரை சமாதானத்துடன் இளைப்பாறுதலுக்குள் வழிநடத்துகிறார். உலகம் போகிற போக்கில் போகாமல் தங்களை தனிமைப்படுத்தி அவரைத் தேடிய ஒருவரையும் அவர் ஏமாற்றவில்லை. நாம் ஆன்மீக அல்லது மதக் கிரியைகளை எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பது முக்கியமில்லை. அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் நம்மை பக்திமான்களாகக் காட்டும். ஆனால் அந்தரங்கத்தில் நாம் அவரை எவ்வளவு ஆர்வத்துடன் தேடுகிறோம் என்பதே முக்கியம்.

ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய் (நீதி 2:3-5)

Leave a Reply