பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனுடைய இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!!
உங்களுக்குத் தெரியுமா? பிசாசானவன் எப்போதுமே இரண்டாவது முறை அதிக ஜாக்கிரதையாக இருப்பான். நோவா என்ற ஒரே ஒருவரை நழுவவிட்டதற்க்காக இன்றுவரை அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிந்திருக்கவேண்டிய போட்டியை நோவா என்ற ஒருவர் மட்டும் நின்று நாட்அவுட் பேட்ஸ்மேனாக களமாடி ஆட்டத்தை அடுத்த இன்னிங்ஸ் வரை கொண்டு சென்றுவிட்டார். அந்த இரண்டாவது இன்னிங்ஸில் இயேசு என்ற ஒரு மாஸ்டர் பிளாஸ்டர் வந்து களமிறங்குவார் என்றும் அவருக்கு சிக்ஸரைத் தவிர வேறெதுவும் அடிக்கத்தெரியாது என்றும் அவனுக்குத் தெரியாதே. இப்பக்கூட அவன் ஒருவேளை இப்படிப் புலம்பிக்கொண்டிருக்கலாம் ”சே! இந்த நோவாவை மட்டும் அன்றே வீழ்த்தியிருந்தால்!!”
வலுசர்ப்பத்திடம் ஒரு பெரிய தாலந்து இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மிக மலிவான விலைக்கு போலிகளைத் தயாரித்து விற்றே தன்னை வல்லரசாக்கிக் கொள்ளுவதுதான். நீங்க வேறு எதையோ யோசிக்கிறீங்க, நான் பிசாசானவனைத்தான் சொல்கிறேன். அவன் போலிகளைத் தயாரிப்பதிலும் அவற்றை மார்க்கெட் செய்வதிலும் நிபுணன். அவனுடைய பிரம்மாஸ்த்திரமே அதுதான்.
பரலோகத்திலிருந்து விழும் முதல் அடியில் குப்பற விழுந்தவுடன் உடனே சுதாரித்து எழுந்து அடுத்த அடி விழுவதற்க்குள் தனது தொழிற்சாலையிலிருந்து ஒரு போலி சரக்கை சந்தையில் இறக்கிவிட்டு விடுவான். அவனது பெரிய நம்பிக்கையே தரத்தை ஆராயாமல் பொருளை வாங்கி ஏமாறும் பெருங்கூட்ட மெஜாரிட்டி வாடிக்கையாளர்தான்.
முதன் முதலில் இரட்சிப்பு அருளப்பட்டபோது பிசாசானவன் “என்ன இது புதுசா இருக்கே!” என்று ஆராய்வதற்க்குள்ளாகவே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்கள். இனி மறுபடியும் அப்படி விட்டுவிட முடியாதல்லவா?. தேவனுடைய காரியங்களை தடுக்க பிசாசுக்கு இருக்கும் ஒரே வழி என்ன? ஆவிக்குரியவைகளாய்க் காட்சியளிக்கும் போலிகளை உருவாக்குவதுதான். உண்மை இரட்சிப்பை உடனே தடுத்து நிறுத்த நீர்த்துப்போன வேறொரு சுவிசேஷத்தை உருவாக்கியது, அடுத்து கற்பகதரு போல கேட்டதெல்லாம் கொடுக்கும் வேறொரு கிறிஸ்து, கிச்சுக்கிசு மூட்டி ,மகிழ்விக்கும் வேறொரு ஆவியானவர், இப்படி பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகிறது.
முதலாம் நோவாவின் காலம் முடிந்துவிட்டது. இது கடைசி காலம். முதல் முறை மனிதனைக் காப்பாற்றியது பேழை, இந்த முறை காப்பாற்றப்போவது சபை. ஆனால் பிசாசு இந்த முறை சுதாரித்துக் கொண்டு ஏகப்பட்ட போலிகளை உருவாக்கிவிட்டான். அவன் இப்போது செய்ததை ஒருவேளை முதல் முறை ஜலப்பிரளயத்திலேயே செய்திருந்தானானால் எப்படியிருந்திருக்கும் என்று இக்காலச்சூழலின் அடிப்படையில் ஒரு ஒரு சின்னக் கற்பனை.அதாவது நோவாவின் கதை இந்தக்காலச் சூழலில் நடந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? இதன் மூலம் இன்று நம்மத்தியில் உலாவரும் போலிகளை அடையாளம் காணப்போகிறோம்.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். (ஆதி 6:13:21)
நோவாவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ”ஆண்டவரே! எல்லாம் அழியப்போகிறதா! நானும் என் குடும்பமும் மாத்திரம் காப்பாற்றப்படப் போகிறோமா? உம்மை தெய்வமாக வணங்கும் நண்பர்கள் ஆறுபேர் எனக்கு உண்டே நான் உடனடியாக அவர்களைச் சந்திக்கிறேன்.”
நோவா தன் நண்பர்களைச் சந்தித்தார். ஜலப்பிரளயம் என்ற அதிர்ச்சி குண்டை அவர்கள் மீது வீசியவுடன் அவர்கள் ஒருகணம் ஆடிப்போனார்கள். நோவா அவர்களை நோக்கி, “நண்பர்களே இப்பொழுதே மனந்திரும்புங்கள்! நீங்கள் கர்த்தரை வணங்கினாலும் உங்கள் இருதயம் அவருக்கு முன்பாக செம்மையாக இல்லை! அதனால்தான் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பேழையில் சேர்த்துக்கொள்ளும்படி என்னிடம் சொல்லவில்லை. எனவே தாமதமின்றி நீங்களும் உங்கள் வீட்டாரும் இருதயத்தைக் கிழித்து கர்த்தரிடம் திரும்புங்கள்!” என்றார். அவர்கள் ஆறுபேரும் முழந்தாளிட்டு கண்ணீரோடு ஜெபித்தார்கள் நோவா அவர்களுக்காக உருக்கமாக ஜெபித்தார்.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் ஆறுபேரையும் நோவா அழைப்பித்தார், “நண்பர்களே!! கர்த்தருடைய வார்த்தைப்படி நாம் பேழையைக் கட்டத் துவங்க வேண்டும். அவ்வளவுபெரிய வேலையை நானும் என் வீட்டாரும் மாத்திரம் செய்வது ரொம்பக் கஷ்டம். பேழை கட்டும் வேலைக்கு சிலரை பணியமர்த்தப்போகிறேன். உங்களுக்கும் சில பொறுப்புக்கள் உண்டு உங்கள் வேலைக்கான என்னால் முடிந்த சம்பளத்தையும் நான் தருகிறேன். நீங்கள் ஆறுபேரும் மனந்திரும்பி விட்டீர்களென்று நம்புகிறேன். நீங்கள் மாத்திரம் கர்த்தருக்குள் நிலைத்திருக்கும் பட்சத்தில் நீங்களும் எங்களுடன் பேழைக்குள் பிரவேசிப்பீர்கள். அதுமாத்திரமல்ல நான் பேழைகட்டி முடிந்து ஜலப்பிரளயம் வருமட்டும் பல இடங்களுக்குச் சென்று ஜனங்களிடம் நீதியைக் குறித்து பிரசங்கிக்கப்போகிறேன் (2 பேதுரு 2:5). எத்தனை பேர் இரட்சிக்கப்படுகிறார்களோ அவ்வளவு பேரையும் காப்பாற்றிக் கொண்டுசெல்லலாம். இது நமக்கு முன்னே உள்ள மாபெரும் பணி.
முதல் நண்பன் குறுக்கிட்டான்: “அதுசரி நோவா, இவ்வளவு பெரிய பேழையைக் கட்டுவதற்க்கு பணத்துக்கு எங்கே செல்வது? என்று கேட்க, நோவா சற்றும் தயங்காமல் “இதென்ன கேள்வி, என்னிடம் இருக்கும் அனைத்துப் நிலங்களையும் சொத்துக்களையும் விற்று நான் இந்தப் பேழையைக் கட்டப்போகிறேன். எல்லாம் அழியப்போகிறது, நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை, பின்னர் இவைகளெல்லாம் எதற்கு? என்று கூறினார், இன்னொரு நண்பன், “நோவா!, நோவா! அவசரப்படாதீங்க, நீங்க ஏன் உங்கள் சொந்தப்பணம் முழுவதையும் செலவழிக்கணும். வேறுவழி ஏதாகிலும் இருக்கிறதா என்று யோசிப்போம், நாம் ஏன் பணக்கார தேசங்களில் உள்ள நண்பர்களிடம் நிதி திரட்டி இதைச் செய்யகூடாது என்று வினவவே நோவாவின் முகம் சிவந்தது,
”நண்பனே! என்னுடைய பாக்கெட்டில் கடைசி ஒரு ரூபாய் இருக்கும் வரை கர்த்தரின் வேலையைச் செய்ய நான் யாரிடமும் கையேந்தமாட்டேன்” நான் ஜனங்களுக்குப் பிரசங்கிக்கப் போகிறேன் நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று அழைத்தார்..நீங்க முன்னால போங்க நோவா நாங்க பின்னாடியே வருகிறோம் என்றார்கள்.
நோவா இடத்தைவிட்டு நகர்ந்தவுடன் நண்பர்கள் அவசர அவசரமாகக் கூடிப்பேசினார்கள். என்னங்க இது? இவ்வளவு பெரிய ப்ராஜக்டை சொந்தக்காசுல செய்யுறேன்னு சொல்றாரு! பேழைக்கான திட்டத்தைப் பார்த்தால் நோவாவின் எல்லாப் பணமும் இதற்குப் போதுமென்று தோன்றவில்லை. நாம் நல்ல தொழிலில் இருக்கிறோம் அவரால் நமக்கு எவ்வளவு ஊதியம்தரமுடியும்? அவரது பணம் காலியாகிவிட்டதானால் நாம்தாம் அடுத்து செலவழிக்கவேண்டும். இவ்வளவு பணம் போட்டு செலவுபண்ணி கடைசியில ஜலப்பிரளயம் வரலைன்னா, உலகம் அழியலைன்னா என்ன பண்றது?. நாம குடும்பத்தோட நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.” என்று புலம்பினான்.
இன்னொரு நண்பன் அவன் முதுகில் தட்டி, பயப்படாதே நண்பா! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. நாம் மட்டும் பேழையைக் கட்டப்போவதில்லை. பாரு! நோவா போய் ஜனங்களுக்குப் பிரசங்கிறாரல்லவா? ஏராளமானோர் அவர் செய்தியை ஏற்றுக் கொள்வார்கள் அதில் பல பணக்காரர்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்வார்கள் நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய்? வாருங்கள் ஊருக்குள்போய் நோவா எப்படிப் பிரசங்கிக்கிறார் என்று பார்க்கலாம்.
ஊருக்குள் மைதானத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. நோவா ஒரு உயர்ந்த மேடையில் நின்று பிரசங்கித்துக் கொண்டிருந்தார். நோவாவைப் பேசவிடாதபடி சிலர் நரியைப் போல ஊளையிட்டார்கள். வாலிபர்கள் விரல்களை மடக்கி நாக்குக்கடியில் வைத்து விசிலடித்தார்கள். சிலர் ”மதம் மாற்றுகிறான்!” என்று ஆக்ரோஷமாக கத்தினார்கள். வேறு பலர் ஜலமாம்! பிரளயமாம்! ஹிஹிஹி…பைத்தியகாரன்!….என்றார்கள். ஆனால் நோவாவின் சிம்ம கர்ஜனை எல்லார் குரலையும் மேற்கொண்டது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முகதட்சணியமின்றி சிறியோரையும் பெரியோரையும் ஜனங்களின் தலைவர்களையும் பார்த்து ”நீங்கள் சாகாதபடிக்கு உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்!” என்று முழக்கமிட்டார்.
நோவாவின் நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டார்கள். ஒருவன் இன்னொருவன் காதில் சொன்னான், “இதே ரேஞ்சுல போச்சுன்னா ஒருபய கூட பிரசங்கத்தைக் கேட்க மாட்டான், இந்தாளு ஏன் இவ்வளவு கடினமாப் பிரசங்கிக்கிறாரு?”
சில வாரங்கள் கடந்தது, பேழை கட்டும்பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நோவா, தன் பிரசங்கத்தை மாற்றிக் கொள்ளுவதாக இல்லை. நண்பர்கள் நோவாவை அணுகி, நாங்கள் உங்களுடன் கொஞ்சம் பேசலாமா? என்றார்கள். நோவா கனிவோடு அவர்களைப் பார்த்து தயங்காமல் சொல்லுங்கள் நண்பர்களே! என்றார். “நோவா! நாம் இவ்வளவு சிரமப்பட்டு பேழையைக் கட்டுகிறோம். அதிலும் நீங்கள் உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்றல்லவா கர்த்தருக்காக உழைக்கிறீர்கள்! நண்பராயிருந்தாலும் எங்கள் எல்லோருக்கும் ஆவிக்குரிய தகப்பன் போன்றவர் நீர்! ஆனால் எங்கள் குறையெல்லாம் உங்கள் பிரசங்கத்தைப் பற்றித்தான்? நோவா அவர்களை உற்றுப்பார்த்து என்ன நண்பர்களே! என் பிரசங்கத்தின் என்ன குறை??
நண்பர்கள் எல்லோரும் பேச முயல, ஒரு நண்பன் எல்லோரையும் கையமர்த்திவிட்டு பேசத்தொடங்கினான். “நோவா, உங்கள் பிரசங்கத்தைக் கேட்டு யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. பிரச்சனை ஜனங்களிடத்திலல்ல உமது பிரசங்கத்தில்தான். இவ்வளவு கடினமாய்ப் பிரசங்கித்தால் யார் கேட்பார்கள்? பாருங்கள் பேரழிவு வரப்போகிறது! நமக்கு ஆத்துமாக்கள்தான் முக்கியம்! ஆத்துமாக்கள் வேண்டுமென்றால் உங்கள் பிரசங்கத்திலுள்ள காரத்தைக் குறைத்துக் கொண்டு இனிப்பை அதிகப்படுத்துங்கள். ஜனங்கள் யாருமே மழையையும் பார்த்ததில்லை, வெள்ளத்தையும் பார்த்ததில்லை அது அவர்கள் பிரச்சனையே இல்லை. அவர்களது அன்றாடகப் பிரச்சனை குறித்துப் பேசுங்கள். வியாதி, பணக்கஷ்டம், வேலைஉயர்வு போன்ற காரியங்களைப் பற்றி பேசுங்கள், இவற்றைப்பேசி ஜனங்களை நம்மண்டைக்கு இழுப்போம். நிச்சயம் அநேகர் செவிகொடுப்பார்கள். பாருங்கள், பின்னர் நமக்கு ஒரு பேழை போதாது, ஜனங்களை நிரப்ப பல பேழைகள் கட்டவேண்டியதாயிருக்கும் என்றான்.
நோவா புன்முறுவலுடன் அவனது தோள்களில் கைகளைப் போட்டு, “என் அன்பு நண்பனே! நீ சொல்வது முற்றிலும் தவறு. ஒருபக்கம் நான் பிரசங்கத்தைச் செய்தாலும் இன்னொருபக்கம் நான் வியாதியிலும் கஷ்டத்திலும் உள்ளவர்களுக்கு உதவுவதை நீ கண்டாயா? கர்த்தர் சுகம் கொடுப்பார் உதவி செய்வர் என்று சொல்லுவது பிரசங்கம் அல்ல, நாமே கர்த்தருடைய பிரதிநிதிகளாக அவர்களுக்கு அதைச் செய்ய வேண்டும். பசியுடன் வருபவனுக்கு உன்னை கர்த்தர் போஷிப்பார் என்று சொல்லி பசியுடனே திருப்பி அனுப்புவது அநியாயம். ஆனால் நம் உணவை அவனோடு பகிர்ந்து கொள்வதே சாட்சி. ஆனால் எக்காரணம் கொண்டு சத்தியத்தில் சமரசம் செய்ய முடியாது. சத்தியம் சத்தியமே! நோ! நோ! நோ! காம்ப்ரமைஸ்!!!
நாம் மனிதரை அல்ல தேவனைப் பிரியப்படுத்த நாடவேண்டும், தேவன் விரும்பும்படியாக அவரது கட்டளைக்குட்பட்டு பேழையைக் கட்டவேண்டுமே தவிர, மனிதர் விரும்பும்படி அல்ல. நம் சொந்த விருப்பப்படியும் அல்ல. நீ சொன்னபடி நமக்கு ஆத்துமாக்கள் முக்கியம்தான், ஆனால் அவர்களை தேவனுடைய வழியில்தான் ஆதாயப்படுத்த வேண்டுமெ தவிர, ஆத்துமாக்களுக்காக தேவ வார்த்தையைக் காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாது என்றார்.
நண்பர்கள் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டனர். நோவாவின் காதுகளின் எல்லையத் தாண்டியவுடன் ஒருவன் சொன்னான். ”இது இனிமே கதைக்கு ஆவாது! நாம இந்தாளோட இருந்தா நம்ம கதை கந்தல்தான்! பேசாம பேழையைக் கட்டுவதை விட்டுவிட்டு நம்ம பொழப்பைப் பார்போம்” என்றான்.
இன்னொருவன் சொன்னான். ”இல்லை நண்பனே! நோவா ஒரு நீதிமான், தேவனோடு சஞ்சரிக்கிறவன். அவன் சொன்னால் சரியாய்த்தானிருக்கும். நிச்சயமாய் ஜலப்பிரளயம் வந்தே தீரும். அதற்க்கு நாம் தப்பிக்கொள்ள நமக்குப் பேழை வேண்டும்.
ஆனால் அது இந்தப் பேழை அல்ல……..”
அவன் சொன்னதை கேட்டு மற்ற நண்பர்கள் அவனை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தார்கள்.
(தொடரும்)
தொடர்ச்சியை வாசிக்க இங்கே சொடுக்கவும்
ஆனால் அது இந்தப் பேழை அல்ல……..”
அவன் சொன்னதை கேட்டு மற்ற நண்பர்கள் அவனை
ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தார்கள்.
.
.
.
You are right brother…!
நிஜமாகவே இன்றைக்கு இதுதான் நடக்கிறது…
.
..
இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்..
.
.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக…
thenninthiya thiruchchabaiyin – athuvum thirunelveli thirumandalaththilulla sabaigal yeppadi poagintrana?