அடிமையின் ஆளுகை! 6000 வருட சாதனை!!

“பணம் கடவுளுக்கு எதிரியா” என்ற கட்டுரையின் மூன்றாம் பாகத்தை எழுத முனைந்தபோது தெரித்த கருத்துச் சிதறல்கள் தனியொரு தலைப்பின்கீழ் வேறொரு கட்டுரையாக உருப்பெற்று விட்டது. இக்கட்டுரையில் பகிரப்பட்டிருக்கும் சிந்தனைகள்  அடுத்து தொடரப்போகும் “பணம் கடவுளுக்கு எதிரியா” என்ற கட்டுரைக்கு வலு சேர்ப்பதாக அமையும்.

இந்தியாவில் மத்திய அரசோ, மாநில அரசோ பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் தங்களது ஓராண்டு சாதனைகளைப் பட்டியலிட்டு அதைக் கொண்டாடுவார்கள். தேவனாகிய கர்த்தர் பூமியை ஆளும்படி ஆதாம் கையில் கொடுத்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஆறாயிரம் ஆண்டுகளில் ஆதாமின் மக்களாகிய நாம் படைத்தது சாதனையா வேதனையா என்பதை சற்று வேத வெளிச்சத்தில் அலசிப் பார்ப்போமா?

வழக்கம்போல கேள்விகளோடு கட்டுரையைத் துவங்குவோம். தேவன் மனிதனுக்குக் கொடுத்த முதல் கட்டளை என்ன? பல்வேறு அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடியுங்கள் என்பதா? போக்குவரவு வசதிகளைப் பெருக்குங்கள் என்பதா? தொலைத்தொடர்பில் முன்னேறுங்கள் என்பதா? புதிய வியாபார முறைகளைக் கண்டறிந்து அதன் மூலம் உலகத்தை ஒன்றிணையுங்கள் என்பதா?

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதி 1:28)

“அதைக் (பூமியை) கீழ்ப்படுத்தி…ஆண்டுகொள்ளுங்கள்” என்ற தேவக் கட்டளை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதா? அறிவியல் முன்னேற்றங்களினாலும், பொருளாதார விருத்தியாலும்,போக்குவரவு சாதனங்களாலும், தொலைத்தொடர்பு வசதிகளாலும், நாம் கற்ற கல்வியால் அடைந்த இன்னும் பிற முன்னேற்றங்களாலும் நாம் தேவசித்தப்படி  பூமியைக் கீழ்ப்படுத்திவிட்டோமா? அதை ஆண்டுகொண்டிருக்கிறோமா?

ஆம், என்பதுதான் பலருடைய பெருமிதமான பதிலாய் இருக்கும்.

ஆனால், இல்லை என்பதுதான் உண்மை, நாம் எதையும் ஆளவில்லை மாறாக நாம் நம் சொந்தக் கரங்களால் படைத்தவை உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் அடிமையாகி விட்டோம். மனிதகுலம் இத்தனை நூற்றாண்டுகளில் அடைந்ததாகக் கருதும் வெற்றியும் முன்னேற்றமும் ஒரு நீர்க்குமிழி போன்றது! அது ஒரு நிலையற்ற மாயை! ஆறாயிரம் வருட முன்னேற்றங்கள் நம்மை ஆறாயிரம் மடங்கு நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியிருக்கிறது என்பதே உண்மை.

இன்றைய உலக இயந்திரம் மின்சாரம், பெட்ரோலியம் என்ற இரண்டு நிலையற்ற காரணிகளை ஆதாரமாகக் கொண்டே சுழலுகிறது. இவற்றை அடித்தளமாகக் கொண்டுதான் உலகின் மாபெரும் வணிக, கல்வி, போக்குவரவு, தகவல் பரிமாற்ற சாம்ராஜ்ஜியங்கள் கட்டப்பட்டுள்ளன. அவைகளைச் சுற்றித்தான் மனிதனின் பிழைப்புக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

ஒரு மூன்று வருடத்துக்கு பெட்ரோலியமும், மின்சாரமும் முற்றிலும் தடைப்பட்டுவிட்டால் உலகத்தின் கதி என்னவாகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! பூமியைத் தவிர சுற்றிக்கொண்டிருக்கும் அத்தனையும் ஸ்தம்பித்துவிடும் அல்லவா? நமது அன்றாடக வாழ்க்கை  மீண்டும் கற்காலத்துக்குத் திரும்பிவிடும் அல்லவா? தமிழகத்தில் அந்தத் தாக்கத்தை ஏற்கனவே மின்தடை வழியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உலகெங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு வேறு!

இன்றுவரை இதற்கு நம்மிடம் சரியான, மலிவான மாற்று இருக்கிறதா? அப்படியொரு சூழ்நிலை எதிர்காலத்தில் வரவே வராது என்ற உறுதியை எந்த தேசமேனும் தன் குடிகளுக்கு கொடுக்க முடியுமா? உலகம் முன்னேறுகிறது என்றால் எதிலிருந்து முன்னேறுகிறது? எதை நோக்கி முன்னேறுகிறது? அது அழிவிலிருந்து பேரழிவை நோக்கியே முன்னேறுகிறது. நாம் கண்டுபிடித்த அத்தனையும் ஒருநாள் பிசாசுக்கு லாபமாகவும் நமக்கு சாபமாகவும் மாறப்போவது நிச்சயம்!

கற்கால மனிதனுக்கு பெரிய வனவிலங்குகள் மாத்திரமே அச்சுறுத்தல் ஆனால் இன்றைய நவநாகரீக மனிதனை கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் கூட குலைநடுங்க வைக்கிறது. கூடாரங்களில் வசித்த அக்கால மனிதனை 9 ரிக்டர் ஸ்கேல் பூமியதிர்ச்சிகூட பாதிக்காது. ஆனால் நமது பெருநகரங்களில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளோ 6 ரிக்டர் ஸ்கேல் அதிர்வுக்கே சீட்டுக்கட்டாக சரிந்துவிடும். அக்கால மனிதனுக்கு மேற்சொன்ன இயற்கை சீற்றமும், வனவிலங்குகளும் மாத்திரமே அச்சுறுத்தல். ஆனால் நம்மை அச்சுறுத்தும் பூச்சாண்டிகளைப் பட்டியல் போடட்டுமா?

அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ந்தால் அதன் பாதிப்பு வால்ஸ்ட்ரீட்டிலிருந்து வால்பாறை வரை எதிரொலிக்கிறது. “எல்லை” என்று தனக்குத்தானே வரையறுத்துக் கொண்ட ஒரு அற்பக் கோட்டைத் தாண்டி வசிக்கும் “தனது சொந்த சக மனிதனை” அழிக்க ஒவ்வொரு நாடும் குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் ஏராளம். அவற்றைக்கொண்டு நம் பூமியை பலமுறை எரித்து சாம்பலாக்க முடியுமாம். அடேங்கப்பா, என்ன ஒரு சாதனை! தேவன் ஆசையாசையாய் கட்டிக்கொடுத்த அழகான கூட்டை சாம்பலாக்க இத்தனை கருவிகள் செய்த இவனால், அதை அவர் கட்டிக்கொடுத்த அதே அழகோடு அவரிடம் திருப்பிக் கொடுக்க ஒரே ஒரு கருவி செய்ய முடியுமா???

இதில் ஒரு பெரிய அநீதி என்னவென்றால் மனிதகுலத்தைக் வாழவைக்கும் உணவு உற்பத்தி செய்பவன் குடிசைவாசியாய், கோவணம் கட்டிக்கொண்டு வெறுங்காலில் நடந்து போகிறான். மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களைச் செய்யும் விஞ்ஞானியோ(!!??) மாளிகைவாசியாய், கோட்சூட் உடுத்திக்கொண்டு, சொகுசுக்காரில் உலாவருகிறான். பாருங்கள் “உலகத்தின் அதிபதிக்கு” யார் செல்லப்பிள்ளையென்று!!! இன்னும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு, கொள்ளைநோய்கள், ஊழல், சூதாட்டங்கள், ஜாதிமத கலவரங்கள், பூமிவெப்பமாதல், கலப்படம், புகை போதை அடிமைத்தனம், சக்கரைவியாதி, இரத்தக்கொதிப்பு, கேன்சர், எயிட்ஸ் இப்படி ஏராளம்…ஏராளம்…இவை யாவும் நாம் நமது முன்னேற்றப் பயணத்தில் கடந்துவரும் வழியில் “விலை கொடுத்து” வாங்கிய அரிய பொக்கிஷங்கள்(!)

அதிருக்கட்டும், நாம் வெற்றி, முன்னேற்றம், சாதனை என்று பீத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்க்கும் பின்னாலும் ஒரு குட்டிச் சாத்தான் ஒளிந்திருக்கிறது. அவைகளின் சிண்டை பிடித்து வெளியே இழுத்துப் பார்த்தால்தான் தெரியும் நம் கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றத்தையும் யாருக்காகச் செய்துகொண்டிருக்கிறோமென்று!!

புற்றுநோயை வரவேற்க்கும் செல்போன் கதிரியக்கம்,  ஆரோக்கியத்தை சீரழிக்கும் துரித உணவுகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் சினிமா/டிவி/இன்டர்நெட் மீடியா, சிறுபிள்ளைகளை பைத்தியமாக்கும் வீடியோகேம்கள், குழந்தைப்பருவ கொண்டாட்டங்களைக் காவுவாங்கும் குதிரைரேஸ் கல்விமுறை, சுற்றுச்சூழலை கெடுக்கும் செயற்க்கைப் பொருட்கள், ஹார்மோன் ஊசிபோடப்பட்டு “பிராய்லர் கோழி” என்ற பெயரில் வளர்க்கப்படும் ஒருவகை இன்ஸ்டண்ட் ஜந்து, அதை சமைக்கப் பயன்படுத்தும் கலப்பட எண்ணெய் , மரபணு தொழில்நுட்பம் மூலம் வியாபார நோக்கத்தோடு வளர்க்கப்பட்டு நம் ஆரோக்கியத்துக்கு உலைவைக்கும் காய்க்கறி பழவகைகள், நச்சு கலந்த மேல்தட்டு குளிர்பானங்கள்(soft drinks), படித்த அடிமைகளுக்கு பல லட்ச சம்பள ஆசைகாட்டி சக்கையாய்  பிழிந்தெடுக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள். இன்னும் ஏராளம் ஏராளம்…

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான் (நீதி13:22), நாமோ நமது சந்ததிகளுக்கு வைத்துப்போகும் சுதந்திரம் என்ன தெரியுமா? “பாரமான நுகங்கள்”. தகப்பன் 8 மனிநேரம் வேலைபார்த்து உலகத்தை முன்னேற்றி (!), இன்றியமையாத் தேவைகள் பலவற்றை உருவாக்கி வைத்துப் போகிறான், பிள்ளையோ அந்த தேவைகளை சந்திக்க 16 மணிநேரம் வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறான். இல்லாவிட்டால் வாழ்க்கைப் பந்தயத்தில் பின்னுக்கு அல்லவா தள்ளப்படுவான்!!

நாம் முன்னேற்றப் பாதையில்  பயணிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு போகிற போக்கில் நம்மை தாங்கிப் பாதுகாப்பதற்கென்று கர்த்தர் கொடுத்த பல இயற்கைக் கேடயங்களை உடைத்துவிட்டோம். அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் என்று பிரசங்கி 10:8 சொல்லுகிறது. ஓசோனை ஓட்டை போட்டது, காடுகளை அழித்தது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது. இன்னும் நமது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏகப்பட்ட அடைப்புகளைப் பிடுங்கியாயிற்று இனி ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் பாம்புகள் படையெடுத்து விரட்டப் போகிறது!! அந்த கடைசிகால அழிவின் நிகழ்வுகள்தான் வெளிப்படுத்தலில் தீர்க்கதரிசனமாகக் காட்டப்பட்டுள்ளன. இதுதான் கண்களை விற்று சித்திரம் வாங்குவது என்பது. மேலே காட்டப்பட்டுள்ள விறகுவெட்டியின் படம் அதற்கு நல்ல உதாரணம்.

இஸ்ரவேலர் எருசலேமின் மதில்களைக் கட்டியபோது அம்மோனியனாகிய தோபியா அதைக் கிண்டல் செய்தான். இவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்று (நெக 4:3). நாம் ஆறாயிரம் வருடமாக கட்டியிருக்கும் சாம்ராஜ்ஜியமும் அப்படிப்பட்டதுதான் அதில் இயற்கைப் பேரழிவு, பொருளாதார வீழ்ச்சி, உலகப்போர் என்ற மூன்று நரிகள் ஏறிப்போகக் காத்திருக்கின்றன, அதைத்தொடர்ந்து வெளிப்படுத்தல் 18 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஒப்பாரியை கீழ்ப்படியாத மனிதகுலத்தின் கடைசி மனிதன் வரை அத்தனைபேரும் வரிப்பிசகாமல் பாடி அழப்போகிறார்கள்.

“ஆளுகை” என்றால் என்ன என்பதை ராஜாவிடம்தான் கற்க முடியும். ஆனால் அவரை விட்டு தூ….ரமாய் விலகிப்போய் தன்னையே மேற்கொள்ள முடியாமல் அடிமையானவனுக்கு “ஆட்சி” என்ற வார்த்தையின் அர்த்தம் எப்படி விளங்கும்? அரசாளுகிற அடிமையின் நிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது என்று நீதி 30: 21,22 சொல்லுகிறது, வனப்பும் செழிப்பும் நிறைந்த பூமியை குதறிப்போட்டதுதான் அடிமை செய்த ஆளுகையின் விளைவு. சொச்சம் இருப்பதும் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் சீரழிக்கப்படும். இதுவா தேவன் சொன்ன “ஆண்டுகொள்ளுதல்” என்பது?

தேவன் ஆதாமுக்குக் கட்டளையிட்ட ஆளுகை எப்படிப்பட்டது?

அன்பும் அறமும் உள்ள ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பி அதில் அறத்தில் அத்தனைபேர்களும் அரசர்களாகவும் அன்பில் ஒருவருக்கு ஒருவர் அடிமைகளாகவும் வாழ்ந்து, தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தில் சுகித்திருக்கும் ஒரு நிலையாகும். அதில் குறைவு என்பது எங்குமே யாருக்குமே இருக்காது. சிருஷ்டிகளில் தலையாய் விளங்கும் மனிதனில் காணப்படும் தேவநீதியின் நிமித்தம் சிருஷ்டிகள் அனைத்தும் வெளிச்சத்தில் இன்புற்றிருக்கும் உன்னத நிலையாகும். இதுதான் ஆதாம் விழாதிருந்திருந்தால் நடந்திருந்திருக்கும். ஆனால் இதற்கு எதிர்மாறான நிலையை ரோமர் 8:19-22-இல் வாசிக்கிறோம்.

ஓநாயும் ஆடும் ஒன்றாய் மேயும் அதிசய உலகமது!  ஆதாமும் ஏவாளும் ஒரே ஒரு முக்கியமான முடிவை சற்று மாற்றி எடுத்திருந்தால் மனித வரலாறு இன்று தனது அதி உன்னத நிலையை அடைந்திருக்கும். ஆனால் இவ்வளவு அறிவியல் அதிசயங்களும், முன்னேற்றங்களும் சாத்தியமாகி இருந்திருக்குமா? ஏன் இருக்காது, இதைக் காட்டியலும் பலமடங்கு முன்னேறிய நிலையில் இருந்திருப்போம் ஆனால் அந்த ஆசீர்வாதங்கள் பின்விளைவுகள் பக்கவிளைவுகள் ஏதுமற்றதாக இருந்திருக்கும். கர்த்தர் தரும் ஐசுவரியத்தோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார் இல்லையா? (நீதி 10:22)

இனி முடிந்ததை நிலைத்துப் புலம்பி பயனில்லை. முதல் ஆதாம் ஏமாற்றினான், ஆனால் அனைத்தும் அத்துடன் முடிந்துவிடவில்லை. இரண்டாம் ஆதாமாக இயேசு வந்தார். அவர் நம்மை ஏமாற்றவில்லை, அவர் வந்து செய்யவேண்டிய அனைத்தையும் நேர்த்தியாகச் செய்து முடித்துவிட்டார், அதன் விளைவாக இதோ, மகிழ்ச்சியும் குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்த நாட்கள் வரப்போகின்றன. நம் துக்கத்துக்கும் கண்ணீருக்கும் நிரந்தர முடிவு.

ஆயிரவருட அரசாட்சி!!…

அதன் பிறகும் தொடரும் நித்திய ஜீவன். அடிமையின் ஆளுகை முடிவுக்கு வந்து ராஜாதிராஜாவும் நீதியின் சூரியனுமாகிய ஆட்டுக்குட்டியானவரே  நம்மை ஆளப்போகும் தன்னிகரில்லா பேரரசு!! லஞ்சம், ஊழல், கறைதிரை, ஏழை, பணக்காரன் ஏதுமில்லாத உண்மையான இறையாட்சி மலரப்போகிறது. அந்த அற்புத ராஜ்ஜியத்தில் “பணம்” என்னும் கெட்டவார்த்தையின் பெயர் முதலாய் உச்சரிக்கப்படாது. காரணம் அங்கு வியாபாரங்கள் எதுவும் நடக்காது, நடக்க முடியாது.

அதற்கிடையே அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை, மகா உபத்திரவம், அர்மெகதான் யுத்தம் என்ற கொடூரகாலங்கள் இருந்தாலும் அது பிரசவ வேதனை போல ஒரு புகையாய்க் கடந்து சென்றுவிடும். அதற்குப் பின்னால் … வார்த்தைகளால் விவரிக்க இயலாத இனிப்பான வாக்குத்தத்த வாழ்க்கை, பரமக்கானான் நமக்காகக் காத்திருக்கிறது. உங்கள் விசுவாசக் கண்களைக் கொண்டு அந்த வாழ்க்கையை உங்களால் பார்க்க முடிகிறதா? அதுதான் ஆதித்திருச்சபையாரை உந்தித்தள்ளும் சக்தியாக இருந்தது. அவர்கள் நித்தியத்தைக் குறித்த கற்பனைகளிலும் கனவுகளிலும் மயங்கி இருந்ததால்தான் உலகத்தாரின் சவுக்கடிகள் கூட அவர்களுக்கு உறைக்கவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது “மாரநாதா” என்று வாழ்த்திக்கொள்வார்களாம். அதன் பொருள் “இன்னும் கொஞ்ச நாள்தான்…இயேசு சீக்கிரம் வரப்போகிறார்”.

மணவாட்டியின் கண்கள் அந்திக்கிறிஸ்துவை எதிர்நோக்கியல்ல அவனை அழிக்கும்படியும் தன்னை அரவணைக்கும்படியும் வரப்போகிற மணவாளனை நோக்கியே இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றைய விசுவாசிகளின் கண்களும், பிரசங்கிமார்களின் கண்களும் அந்திக்கிறிஸ்துவின் வருகை மீதும், கடைசிகால அடையாளங்களின் மீதுமே படிந்திருக்கிறது. கடைசிகால வஞ்சகத்துக்குத் தப்பும்படி சபையை எச்சரிக்கும் நமது பணியை செவ்வனே ஜாக்கிரதையுடன் செய்யவேண்டியிருக்கிறது, அதையும் மறுக்க முடியாது. ஆனால் நம் கண்கள் மேற்கின் அஸ்தமனத்தையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்குமானால் நாம் சோர்ந்துபோவோம், அந்த அஸ்தமனத்துக்குப் பின்னர் மறுபடியும் கிழக்கே ஒருபோதும் அஸ்தமிக்காத மகிமையின் சூரியன் உதிக்கப்போகிறது. அதைப் பார்ப்ப்போமானால் நாமும் உற்சாகமடைந்து பிறரையும் உற்சாகப்படுத்துவோம்.

இப்பூமியில் அவருடன் பாடுபட்டவர்கள் அங்கே அவருடன் ஆளுகையும் செய்யப்போகிறார்களாம்!! அங்கேதான் “ஆளுகை என்றால் என்ன?” என்பதை “ஆண்டவரிடம்” கற்றுக்கொள்ளப்போகிறோம். அப்போதுதான் இந்த பூமியில் ஆறாயிரம் வருடங்களாக மனிதன் செய்தது ‘ஆளுகை’ அல்ல ‘வெறும் அடாவடி’ என்பது விளங்கும். அன்புடன் இரண்டறக்கலந்த ஆளுகை என்பது பரலோக ராஜ்ஜியத்தில் மாத்திரமே சாத்தியம். உலகத்தைப் பொறுத்தவரை அன்பும், ஆளுகையும் எதிரெதிர் துருவங்கள்.

உலகத்தார் ஒருபோதும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்டம் கிறிஸ்தவர்களாகிய நாமாவது உலகத்துடன் சேர்ந்து பூமியை சீர்குலைத்ததில் நமக்கு உள்ள பங்குக்காக தேவனிடம் மனம் வருந்துவது நல்லது. காரணம் நாம் அவருடைய சொத்தை சேதப்படுத்தியிருக்கிறோம்! விழுந்துபோன நிலையில் நாம் ஒன்றையும் ஆளுகை செய்ய முடியாது அதை நாம் மனதார உணரவேண்டும். துன்மார்க்கன் தன்னை துன்மார்க்கனென்றும், பாவி தன்னை பாவியென்றும், அடிமை தன்னை அடிமையென்றும் ஒத்துக்கொள்ளுவதுதான் மெய்யான மனந்திரும்புதல், அப்பொழுதுதான் குடும்பத்தை ஆளுவதற்க்கோ, சபையை ஆளுவதற்க்கோ சுயநீதியின் அழுக்கு படிந்த கரத்தை துணிகரமாக எங்கும் நீட்டமாட்டோம். அப்படிச் செய்ததால்தான் இன்று குடும்பங்களும், சபைகளும் சீரழிந்த நிலையில் இருக்கின்றன. நம் குடும்பங்களையும் சபைகளையும் ஆளும் பொறுப்பை கர்த்தரிடம் ஒப்புவித்து நாம் அவரது சித்தத்தை செயல்படுத்துகிறவர்களாக மாத்திரமே இருக்கவேண்டும். வேதம் கிறிஸ்து மாத்திரமே “தலை” நாம் சரீரத்தின் அவயவங்கள் என்று தெளிவாகச் சொல்லுகிறது.

நாம் ஏற்கனவே தியானித்த வார்த்தையை மறக்காதிருங்கள் “அரசாளுகிற அடிமையின் நிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது (நீதி 30: 21,22)”. அப்படிப்பட்ட சஞ்சலத்தை நமது குடும்பத்துக்கோ, சபைக்கோ உண்டாக்காதிருப்போமாக! ஆளுகை கர்த்தருக்கே உரியது! ஆமேன்!!!

5 thoughts on “அடிமையின் ஆளுகை! 6000 வருட சாதனை!!”

  1. என்ன ஒரு அற்புதமான படைப்பு!. இதனை வாசிக்கும் அநேகரை கட்டாயம் சிந்திக்கவைக்கும் என்பது நிச்சயம்.
    வாழ்த்துக்கள் சகோதரனே!!!

  2. //துரதிஷ்டவசமாக இன்றைய விசுவாசிகளின் கண்களும், பிரசங்கிமார்களின் கண்களும் அந்திக்கிறிஸ்துவின் வருகை மீதும், கடைசிகால அடையாளங்களின் மீதுமே படிந்திருக்கிறது//

    ஆம். இது துரதிஷ்டவசமானதுதான்…

    அருமையான பதிவு சகோதரரே… .

Leave a Reply